திங்கள், 27 ஆகஸ்ட், 2018

பெரம்பலூரில் கல்வி உரிமை மீட்பு மாநாடு! திராவிடர் விடுதலை கழகம்

பெரம்பலூரில் கல்வி உரிமை மீட்பு மாநாடு!மின்னம்பலம்: தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா மாநாடு, திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக பெரம்பலூரில் ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெற்றது.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரியும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசுப் பணிகளில் வடமாநிலத்தவர்களை அதிகளவில் திணிப்பதைக் கண்டித்தும், தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்புகளை அளிக்கவும், தேர்வுகளைத் தமிழில் நடத்தக் கோரியும், தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரியும் தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணத்தை கடந்த ஆறு நாட்களாகத் திராவிடர் விடுதலைக் கழகம் ஆகஸ்ட் 20 முதல் 26 வரை நடத்தியது.


சென்னை, குடியாத்தம், மேட்டூர், திருப்பூர், மயிலாடுதுறை, சங்கரன்கோவில் ஆகிய ஆறு முனைகளிலிருந்து தொடங்கிய இந்தப் பிரச்சாரப் பயணமானது, தமிழகம் முழுவதும் சுமார் 175 இடங்களில் கடந்த ஆறு நாட்களாக நடைபெற்றது. பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா மாநாடு நேற்று (ஆகஸ்ட் 26) மாலை பெரம்பலூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கல்வி உரிமைகளை விளக்கும் விதமாகக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்த பரப்புரைப் பயணத்தின் நோக்கம் குறித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரனிடம் கேட்டபோது, "கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவையே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களாகிய நமக்கு இரண்டு கண்கள். நம்மை வளர்த்ததும், மனிதராக்கியதும், சுயமரியாதை உணர்வையூட்டியதும் கல்வியும், வேலைவாய்ப்பும்தான்.

ஆனால், நமது கண்கள் இப்போது பிடுங்கப்படுகின்றன. மீண்டும் நமது தாத்தா, பாட்டிகளின் கைநாட்டு காலத்துக்கே விரட்டப்பட்டு விடுவோமா என்ற அச்சம் சூழ்ந்து நிற்கிறோம்.
கல்வியைப் பொதுப் பட்டியலுக்கு மாற்றிக் கொண்டது, நீட் தேர்வை நுழைத்தது, மத்திய அரசுப் பணிகளுக்கு மாநில மொழிகளில் தேர்வெழுத அனுமதி மறுப்பது, அரசு உதவிகள் பலவற்றைப் பெற்று தொழில் தொடங்கும் தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய மத்திய அரசு மறுப்பது, தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 5,660 இடங்களில் சரிபாதி இடங்களை மத்திய அரசே பறித்துக்கொள்வது, பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைப்பது போன்ற நடவடிக்கைகள் நமது மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கின்றன.
இவற்றின் ஆபத்துகளை மக்களிடம் உணர்த்துவோம். கல்வி நமது உரிமை, வேலைவாய்ப்பு நமது வாழ்வு, சுயமரியாதை நமது அடையாளம். மக்களிடம் இதை விளக்கிப் பேசுவதற்காகவே இந்தப் பரப்புரைப் பயணம்" என்றார்

கருத்துகள் இல்லை: