செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

தெலுங்கானா மருத்துவமனையில் துப்பரவு தொழிலாளிகள் மருத்துவம் .. ஊசியும் போடுகிறார்கள்! வைரல் விடியோ


Mahalaxmi :  உயிரோடு விளையாடினால் விடுவார்களா? - வீடியோவால் வெலவெலத்த தெலங்கானா!*
'நோயாளிகளின் உயிரோடு விளையாட எப்படித்தான் முடிகிறதோ?' என்று ஆதங்கத்துடன் கேட்கிறார்கள் தெலங்கானா மாநில மக்கள். இதற்குக் காரணம் - மெகபூபாபாத் மாவட்டம் பெத கொடுரு மண்டலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள், வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, வலைத்தளத்தில் வெளியானதுதான்!
அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அப்படி என்னதான் நடந்தது? பெண் நோயாளி ஒருவருக்கு இரண்டு பெண்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். அவர்கள் யாரென்றால், அங்கு பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளி கவிதாவும், காவலாளி மனைவி ஷோபாவும்தான். நோயாளிகளுக்கு ஊசி போடுவது, குளுக்கோஸ் செலுத்துவது போன்ற அனைத்து மருத்துவப் பணிகளையும் இவர்கள் இணைந்து செய்வது, ரெகுலராக நடப்பதுதான்.


என்ன நோய்க்கு என்ன மருந்து தர வேண்டும் என்று மருத்துவர்கள் எழுதித்தராத நிலையில், இவர்களாகவே, ஏதோ ஒரு சிகிச்சையை அளித்து வருகின்றனர். அந்த நேரத்தில் மருத்துவர்கள், ஜாலியாக செல்போனில் பொழுதைப் போக்குகின்றனர்.
பெத கொடுரு மண்டலத்தைச் சுற்றி மலைவாழ் மக்களே அதிகம் வசித்து வருகின்றனர். தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்லக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையம் இது. மருத்துவர்கள் மட்டுமல்ல, செவிலியர்களும் உரிய நேரத்துக்கு வருவதில்லை. மலைவாழ் மக்கள்தானே என்று அலட்சியம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து, அம்மக்கள் தொடர்ந்து புகார் அளித்தும், நிலைமை சரியாகவில்லை.
அதனாலேயே, நோயாளி ஒருவரின் உறவினர், ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவல நிலையை தன்னுடைய செல்போனில் பதிவு செய்து, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். தற்போது, இந்த வீடியோ பதிவு தெலங்கானா மக்களால் பரவலாகப் பார்க்கப்பட்டு, மாநில அளவில் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது தெலங்கானா அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கருத்துகள் இல்லை: