செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

கலைஞர் புகழஞ்சலிக் கூட்டத்தில் நிதின் கட்கரி, முரளிதரராவ் பங்கேற்பு: தமிழிசை தகவல்

tamilthehindu :: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அஞ்சலி நிகழ்வில் பாஜக சார்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் ஆகியோர் கலந்து கொள்வதாக,தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திமுக சார்பில் ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ என்ற தலைப்பில் நினைவேந்தல் கூட்டம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் வரும் 30 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் நடக்கிறது. < இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவ கவுடா, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், புதுவை முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட பல அகில இந்தியத் தலைவர்கள் கலந்துகொள்வதாக அந்நிகழ்ச்சியின் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த இரங்கல் நிகழ்ச்சியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கலந்துகொள்வது குறித்து வரவேற்பும் எதிர்ப்பும் பல்வேறு தரப்பினரிடையே கிளம்பியது. இதனிடையே, அமித் ஷா இந்நிகழ்ச்சிக்கு வருவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் தகவல் தெரிவித்தனர்.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் தன் ட்விட்டர் பக்கத்தில் அமித் ஷா திமுகவின் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என்பதையறிந்து மகிழ்ச்சி அடைவதாகப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “30 ஆம் தேதி நடைபெறும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழ் அஞ்சலிக் கூட்டத்தில், பாஜகவின் முன்னாள் தேசியத் தலைவரும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும், பாஜகவின் தேசிய பொதுச் செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான முரளிதரராவும் கலந்துகொள்கின்றனர்” என பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம், திமுக நிகழ்ச்சியில் அமித் ஷா கலந்துகொள்ளவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: