வியாழன், 30 ஆகஸ்ட், 2018

உணவு உற்பத்தியில் புதிய உச்சம் ,,, 284.83 மில்லியன் டன்னை எட்டியுள்ளது.

புதிய உச்சத்தை எட்டிய உணவு உற்பத்தி! மின்னம்பலம்:  இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 284.83 மில்லியன் டன்னை எட்டியுள்ளது.
இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சகம் ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியிட்டுள்ள புதிய மதிப்பீட்டு அறிக்கையில், ‘2017-18 வேளாண் பருவ ஆண்டில் (ஜூலை - ஜூன்) இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 284.83 மில்லியன் டன்னை எட்டியுள்ளது. இது 2016-17ஆம் ஆண்டு உற்பத்தியை விட 9.72 மில்லியன் டன் அதிகமாகும். அனைத்து முக்கியப் பயிர்களின் உற்பத்தியும் முந்தைய ஆண்டைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. அரிசி 112.91 மில்லியன் டன்னும், கோதுமை 99.70 மில்லியன் டன்னும், பருப்பு 25.23 மில்லியன் டன்னும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

மே மாதத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் 2017-18 வேளாண் பருவ ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 279.51 மில்லியன் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டில் போதுமான அளவில் மழை பெய்ததால் உற்பத்தி அதிகரித்துள்ளது. தற்போது இந்த ஆண்டிலும் போதுமான அளவில் மழை பெய்துள்ளதால் பல்வேறு நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இதனால் காரிஃப் பருவ சாகுபடியும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “வழக்கமான பயிர் விதைப்பு பரப்பளவைக் காட்டிலும், இந்த ஆண்டு காரிஃப் பருவ விதைப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் இது கடந்த ஆண்டு சாகுபடி பரப்பளவைக் காட்டிலும் குறைவேயாகும். இதனால் காரிஃப் உற்பத்தி குறையலாம். இருப்பினும் இதனால் எந்த பாதிப்பும் இல்லை” என்றார். நாட்டின் சில மாவட்டங்களில் போதுமான அளவுக்கு மழை இல்லாததே இதற்குக் காரணமாகும். இந்த ஆண்டு காரிஃப் பருவத்தில் இதுவரையில் 995.62 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டில் 1008.57 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: