திங்கள், 27 ஆகஸ்ட், 2018

மாபா பாண்டியராஜன் :கலைஞரின் தமிழ்ப்பணியை எந்தவிதத்திலும் மகிமை குறையாமல் அதிமுக அரசு பாதுகாக்கும்

கலைஞரின் படைப்புகள்: தடையாக இருக்க மாட்டோம்! மின்னம்பலம்: “திமுக தலைவர் கலைஞரின் படைப்புகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வதற்கு அதிமுக அரசு தடையாக இருக்காது” என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் உறுதியளித்துள்ளார்.
திமுக தலைவர் கலைஞர் உடல்நலக் குறைவால் கடந்த 7ஆம் தேதி காலமானார். அவருடைய உடல் மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், கலைஞருக்கு புகழ் வணக்கம் செலுத்தும் கூட்டங்கள் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. அரசியல், கலை, இலக்கியம், நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கலைஞர் ஆற்றிய சேவைகளுக்காக அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் பலமாக எழுந்துள்ளது.

இந்த நிலையில் பெரியார் மணியம்மை அறக்கட்டளை சார்பாக வீரத்தாய் குயிலி நூல் வெளியீட்டு விழா இன்று (ஆகஸ்ட் 27) சென்னை தரமணியிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன், நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாண்டியராஜன், “கலைஞர் அவர்களின் தமிழ்ப்பணியை எந்தவிதத்திலும் மகிமை குறையாமல் அதிமுக அரசு பாதுகாக்கும். கலைஞரின் நூல்களை அரசுடமையாக்குவதற்கு திமுகவிடமிருந்து கோரிக்கை வந்தால் அதுகுறித்து நாங்கள் பரிசீலிப்போம். கலைஞரின் படைப்புகள் அடுத்த தலைமுறைக்கு செல்வதற்கு தமிழக அரசாங்கம் தடையாக இருக்காது” என்று உறுதியளித்தார்.
மேலும், “தமிழ் மிகவும் பழமையான மொழி என்று பிரதமர் மோடி இரண்டு முறை கூறிவிட்டார். அது சரியான புரிதல்தான். சமஸ்கிருதத்தைவிட தொன்மையான மொழி தமிழ்தான் என்று முன்பு கூறியுள்ளார். தமிழின் தொன்மை குறித்து மன் கீ பாத் நிகழ்ச்சியில் உரையாற்றியதற்கு அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்ட அவர், இந்தி பிரச்சார சபாக்கள் மூலமாக இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கையை உயர்த்தியிருக்கிறார்கள். இதுபோல தமிழ் வள மையம் ஆரம்பித்து அதற்கு உலகமெங்கும் கிளைகளை உருவாக்கத் திட்டம் தீட்டியுள்ளோம். இதற்காக 2 கோடி ரூபாய் தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசு இத்திட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
தேசிய மொழியாக தமிழ் உள்பட 22 மொழிகள் உள்ளன. ஆனால் அது போதாது, ஆட்சி மொழியாக தமிழ் உள்பட 22 மொழிகளும் வரவேண்டும் என்பது தமிழக அரசின் கொள்கை நிலைப்பாடு என்றும் மாபா பாண்டியராஜன் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: