வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

மீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்? திருமாவளவன் ஆய்வு சொல்வது என்ன?

மீனாட்சிபுரம்
முரளிதரன் காசி விஸ்வநாதன்-பிபிசி தமிழ்: 1981ல் திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 180 தலித் குடும்பங்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினர். இது அகில இந்தியாவையும் உலுக்கியது. அதனை மையமாக வைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் “Mass Religious Conversion of Meenakshipuram – A Victimological Perspective” என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை முடித்துள்ளார். இந்த ஆய்வில் அவர் கண்டறிந்த முடிவுகள் குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார். அந்தப் பேட்டியிலிருந்து:
கே. இந்த ஆய்வை எப்போது துவங்கினீர்கள்?
ப. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வைச் செய்வதற்காக 2002ல் பதிவுசெய்தேன். பல்வேறு பணிச்சுமைகளால் எனது ஆய்வை விரைந்து முடிக்க இயலவில்லை. அவ்வப்போது இந்தப் பதிவை புதுப்பித்துவந்தேன். அண்மையில் கடைசி வாய்ப்பாக 2017 பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டுமென பல்கலைக்கழகம் அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் விரைந்து இந்த பணியை முடித்து, அறிக்கை சமர்ப்பித்தேன். கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி பொது வாய் மொழித் தேர்வு நடைபெற்றது. அதன் அடிப்படையில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.



கே. மீனாட்சிபுரம் மதமாற்ற சம்பவத்தை உங்கள் ஆய்வுக் களமாகத் தேர்வுசெய்தது ஏன்?
ப. மதமாற்றம் தொடர்பான விவாதங்கள் தொடர்ச்சியாக இந்திய அளவில் நடந்து வருகின்றன. அம்பேத்கர் அவர்கள் லட்சக் கணக்கானவர்களோடு பௌத்தத்தைத் தழுவினார். சாதி ஒழிப்புக்கான போரட்டங்களில் மதமாற்றத்தையும் ஒன்றாக முன்வைத்தார். இந்த நிலையில், மீனாட்சிபுரத்தில் அம்பேத்கரை பின்பற்றக்கூடிய மக்கள், கலாசார ரீதியாக அவரோடு மாறுபட்ட நிலைப்பாடுகளை மேற்கொள்ளும் போக்குகளைப் பார்த்தேன். அரசியல் ரீதியாக அவரைத் தலைவராக ஏற்றாலும் கலாசார ரீதியாக சிலர் கிறிஸ்தவத்தை ஏற்பதையும் இஸ்லாத்தை ஏற்பதையும் பார்க்க முடிகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டை தாலுகாவில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள மக்கள் அம்பேத்கரை அரசியல்ரீதியாக ஏற்றவர்கள்தான். ஆனால், அவர்கள் ஏன் அம்பேத்கரைப் பின்பற்றி பௌத்தத்தை ஏற்கவில்லை; இஸ்லாத்தை ஏற்றார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இரண்டாவதாக, இஸ்லாமியர்கள் திட்டமிட்டு, தலித்துகளை ஏமாற்றி வற்புறுத்தி, அச்சுறுத்தி மதமாற்றம் செய்ய வைத்தார்கள் என்றும் அதில் அரபு நாட்டுப் பணம் பின்னணியில் உள்ளது என்கிற குற்றச்சாட்டுகளும் இன்னும் இருக்கவே செய்கின்றன. ஆகவே சாதிக் கொடுமைகளால் இவர்கள் மதம் மாறினார்களா அல்லது வேறு காரணங்களால் மதம் மாறினார்களா என்று அறியும் வேட்கையும் எனக்குள் உருவானது.
இஸ்லாத்தை ஏற்றதால் அவர்களின் சமூக மதிப்பு உயர்ந்திருக்கிறதா, அவர்கள் சாதிக் கொடுமைகளிலிருந்து விடுபட்டிருக்கிறார்களா என்ற கேள்விக்கும் விடைதேட வேண்டிய தேவை எழுந்தது. ஆகவேதான் இந்த மதமாற்றம் குறித்து ஆராய்ச்சி செய்யும் முடிவுக்கு வந்தேன். அதற்கு எனக்கு வழிகாட்டியவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் கு. சொக்கலிங்கம் அவர்கள். ஏற்கனவே, நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் குற்றவியல் முதுகலை படிக்கும்போது அவர் பேராசிரியராக இருந்தவர்.

கே. இந்த ஆய்வில் உங்களுக்கு என்ன முடிவு கிடைத்தது?
மீனாட்சிபுரம்ப. அச்சுறுத்தலால் தலித்துகளை மதம் மாற்றினார்கள் என்பது உண்மையல்ல என இந்த ஆய்வில் உறுதியாகியிருக்கிறது. காவல்துறையின் வன்முறையும் அரசு அதிகாரிகளின் தலித் விரோத நடவடிக்கைகளும்தான் மதம் மாறக் காரணிகளாக இருந்துள்ளன என்பதை இந்த ஆய்வில் உறுதிப்படுத்தியுள்ளேன்.
கே. தமிழ்நாடு முழுவதுமே ஜாதிக்கொடுமைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால், மீனாட்சிபுரத்தில் மட்டும் தலித்துகள் மொத்தமாக மதம் மாற எந்தச் சம்பவம் தூண்டுதலாக அமைந்தது?
ப. சாதிக் கொடுமைகள் இந்தியா முழுவதும் இருக்கவே செய்கின்றன. இது அடிப்படையான காரணி. மீனாட்சிபுரத்தில் சாதிக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறும் எண்ணத்தோடு இருந்த மக்களுக்கு மதம் மாற வேண்டும் என்ற சிந்தனையைத் தூண்ட உடனடிக் காரணியாக ஒரு சம்பவம் நடந்தது. 1980 டிசம்பரில் மீனாட்சிபுரம் அருகே மேக்கரை என்னும் மலையடிவாரப் பகுதியில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான ஒரு பண்ணையில் மறவர் சமுதாயத்தைச் சார்ந்த இருவர் கொல்லப்பட்டனர். அந்த இரட்டைக் கொலையில் மீனாட்சிபுரத்தைச் சார்ந்த தலித்துகள் குறிப்பாக தங்கராஜ் என்பவரும் அவருடைய கூட்டாளிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று காவல்துறையினர் மீனாட்சிபுரம் குடியிருப்புக்குள் நுழைந்து, கண்ணில் பட்டவர்களையெல்லாம் கைதுசெய்து, விசாரணை என்ற பெயரில் மிக மோசமான வன்முறைகளை, கொடுமைகளைச் செய்திருக்கிறார்கள். மாதக் கணக்கில் இது நடந்திருக்கிறது.
அத்துடன் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறை ஆய்வாளர் கொல்லப்பட்டவர்களின் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு மேல் உள்ள மாநில அளவிலான உயர் காவல்துறை அதிகாரிகள் சிலரும் அதே சமூகத்தைச் சார்ந்தவர்கள். அதனால்தான் இந்த ஒடுக்கு முறை கூடுதலாக உள்ளது என தலித் மக்கள் கருதினார்கள். இதனால் அரசாங்கத்தின் மீதிருந்த நம்பிக்கையை அவர்கள் இழக்க நேர்ந்தது. இந்த நிலையில்தான் சாதிக் கொடுமைகளுக்கும் அரசு ஒடுக்குமுறைகளுக்கும் ஒரு முடிவுகட்ட மத மாற்றத்தை வழிமுறையாக அவர்கள் தேர்வுசெய்தார்கள். ஆகவே, காவல்துறை மற்றும் அதிகாரிகளின் ஒடுக்குமுறை சாதியின் பெயரால் நிகழ்ந்தது என்பது இந்தப் பகுதிக்கான தனிக் காரணியாக உள்ளது.

மீனாட்சிபுரம்
கே. மதம் மாறுவதன் மூலம் காவல்துறையின் அத்துமீறல்களிலிருந்து விடுதலை கிடைக்கும் என அவர்கள் நம்பக் காரணம் என்ன?
ப. காவல்துறையிடமிருந்து மட்டுமல்ல; சமூகப் புறக்கணிப்பு உள்ளிட்ட பல கொடுமைகளிலிருந்து தப்ப முடியும் என நினைத்தார்கள். இந்து மதத்தில் பள்ளர் என்ற ஜாதியில் இருப்பதால்தானே இப்படி நடக்கிறது; நாம் மதம் மாறிவிட்டால் பிற்காலத்திலாவது நமது வாரிசுகள் நிம்மதியாக இருப்பார்கள் என எதிர்கால நலனை மனதில் கொண்டு அவர்கள் இந்த முடிவை எடுத்தார்கள்.
கே. மதம் மாறும்போது பௌத்தத்திற்கு மாறும்படி அம்பேதகர் கூறியிருந்த நிலையில், மீனாட்சிபுரம் மக்கள் இஸ்லாத்தைத் தேர்வுசெய்தது ஏன்?
ப. இஸ்லாத்தில் மட்டும்தான் சமூக பாதுகாப்பு கிடைக்கிறது. மறுபடியும் ஜாதி தொடர்வதில்லையென நினைக்கிறார்கள். ராமைய்யா என்பவர் இந்தச் சம்பவம் நடப்பதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவத்திற்கு மாறினார். தனக்கு ராசைய்யா எனப் பெயர் சூட்டிக்கொண்டார். அங்கேயும் சாதியின் பெயரால் இழிவும் கொடுமையும் தொடர்ந்ததால் அவர் கிறிஸ்தவத்தைவிட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். தற்போது இப்ராஹிம் எனப் பெயர் சூட்டிக்கொண்டிருக்கிறார். ராமைய்யா ராசைய்யாவானார். ராசைய்யா இப்ராஹிமானார். அவர்தான் அங்கு கட்டப்பட்ட மசூதிக்கு முதல் முத்தவல்லி. அதற்குப் பிறகு அவரை முஸ்லிமாகத்தான் சமூகம் பார்க்கிறது. காவல்துறை அவரைச் சீண்டவில்லை.

கே. பௌத்தத்தை ஏன் அவர்கள் ஏற்கவில்லை. இங்குள்ள பௌத்ததில் ஜாதிப் பாகுபாடு உள்ளதா?
ப. மகாராஷ்டிரத்தில் பௌத்தம் நிறுவப்பட்ட ஒன்றாக உள்ளது. இங்கே அப்படி இல்லை. அம்பேத்கர் அங்கே 10 லட்சம் பேரை மாற்றியதுபோல இங்கே நடக்கவில்லை. தவிர, மீனாட்சிபுரத்தைச் சுற்றிலும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கைதான் அதிகம். பக்கத்துக் கிராமங்களில் ஒருவேளை பௌவுத்தர்கள் அதிகம் இருந்திருந்தால் அம்மாதிரி சிந்தனை ஏற்பட்டிருக்கும். ஆனால், மீனாட்சிபுரத்தைச் சுற்றியுள்ள கடையநல்லூர், தென்காசி போன்ற பகுதிகளில் வேறு மதத்தினர் என்று பார்க்கும்போது முஸ்லிம்களே அதிகம் இருந்தனர். அவர்களும் முன்பு தலித்துகளாக இருந்து மதம் மாறியவர்கள்தான். அவர்களுக்குக் கிடைக்கும் மரியாதையை இவர்கள் கவனித்தார்கள். இது அவர்களுக்கு ஒரு உந்துதலைத் தந்திருக்கலாம்.
இரண்டாவதாக, அம்பேத்கர் மதம் மாறும்போது பௌத்தம் இடஒதுக்கீடு கிடைக்கக்கூடிய சமூகமாக அங்கீகரிக்கப்படவில்லை. பிற்படுத்தப்பட்டோர் அடுக்கில்தான் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று பௌத்தத்திற்கு மாறியவர்கள் ‘புதிய பௌத்தர்கள்’ என்று அழைக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் அவர்களுக்கு இடம் கிடைக்கிறது. ஆனால், இஸ்லாத்திற்கு மாறினால் அப்படி ஒரு நிலை இல்லை. எனவேதான் இடஒதுக்கீடு உரிமையை இழந்தும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
கே. மீனாட்சிபுரத்தில் இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களாகத்தானே கருதப்படுவார்கள்?
ப. ஆமாம். அவர்கள் கல்வி, அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பு, அதற்கான இட ஒதுக்கீடு ஆகியவற்றைப் பற்றி கவலைப்படவில்லை. மனிதன், மனிதனாக வாழ வேண்டும். சமூக மதிப்புதான் முக்கியம் என நினைத்தார்கள்.

கே. இந்த மதமாற்றம் நடந்தபோது அரசும் தமிழக அரசியல் கட்சிகளும் எப்படி நடந்துகொண்டன?
ப. அரசு எப்போதுமே மதமாற்றத்திற்கு எதிராகத்தான் இருந்திருக்கிறது. அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். “இது அரபு நாட்டுப் பணம் செய்த வேலை” என்று சொன்னார். சில நாட்களுக்குப் பிறகு சட்டப்பேரவையில் விவாதம் நடந்தபோது பேசிய நாவலர் நெடுஞ்செழியன், “அவர்கள் சமூகக் கொடுமைகளால்தான் மாறினார்கள்” என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். மதம்மாறியவர்களை அதிகாரிகள் மிரட்டினார்கள். சம்பவம் நடந்தவுடனேயே பா.ஜ.க. தலைவரான வாஜ்பேயி அங்கு சென்றார்.
அப்போது இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் யோகேந்திர மக்வானா அங்கு சென்றார். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் அப்போதைய தலைவரான இளைய பெருமாள் சென்றார். பிற கட்சிகள் ஏதும் இது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால், இந்து அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்., விஸ்வஹிந்து பரிஷத், ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகள் மிகப் பெரிய யாகம் நடத்தி, அங்குள்ள மக்களுக்கு பள்ளிக்கூடங்களைக் கட்டித்தருகிறோம், கழிப்பறைகளைக் கட்டித்தருகிறோம் என்றெல்லாம் ஆசைகாட்டினார்கள். அப்போது அவர்கள் கட்டிக்கொடுத்த பள்ளிக் கட்டடம் இப்போதும் இயங்கிவருகிறது.
அம்பேத்கர் லட்சக்கணக்கானவர்களோடு மதம் மாறியபோது இந்திய அளவில் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால், இந்து மதத் தலைவர்கள் யாரும் அங்கே போகவில்லை. இங்கே பெரிய, பெரிய தலைவர்கள் வந்து இறங்கினார்கள். பேரணி நடத்தினார்கள். பன்பொலியிலிருந்து மீனாட்சிபுரம் வரை ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வாஜ்பேயி நடந்தே சென்றார். மறு மதமாற்றத்திற்கும் முயற்சித்தார்கள். எல்லா வசதிகளையும் செய்து தருவதாகச் சொன்னார்கள். ஆனால், மதம் மாறிய 180 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் யாரும் இந்து மதத்திற்கு மீண்டும் திரும்பவில்லை. மீண்டும் மதம் மாறிய சம்பவத்தை வைத்து கருப்பாயி என்று புத்தகம் வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் யாரும் திரும்பவும் இந்து மதத்திற்கு மாறவில்லை.

மீனாட்சிபுரம்
கே. பிறகு எப்படி மதம் மாறியவர்களில் சிலர் மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்பியதாக பேச்சுகள் அடிபடுகின்றன?
ப. என்ன நடந்ததென்றால் முதலில் 200 குடும்பங்கள் மதம் மாற முடிவுசெய்தனர். ஆனால், மதமாற்றம் நிகழ்ந்த தினத்தன்று 180 குடும்பத்தினர் மட்டுமே நிகழ்வில் பங்கேற்று மதம் மாறினர். 20 குடும்பங்கள் பின்வாங்கிவிட்டனர். இந்த 180 குடும்பங்களில் இருந்து யாரும் மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்பவில்லை. ஆனால், திருமண உறவு என்று வரும்போது மதம் பார்க்காமல் சிலர் சம்பந்தம் செய்கிறார்கள். அப்போது தம்பதிகளில் ஒருவர் இந்துவாகவும் ஒருவர் முஸ்லிமாகவும் இருப்பார்கள். மதம் மாறியவரின் உறவினர்கள் இந்துவாக இருப்பார்கள். அவர்கள், மதம் மாறியவரை பழைய இந்துப் பெயரைச் சொல்லி அழைப்பார்கள். அவ்வளவுதான்.
தவிர, மதம் மாறியவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் பிறவி முஸ்லிம்களாகிவிட்டார்கள். அவர்களுக்கு பழைய வரலாறு தெரியாது. அது குறித்த நினைவும் கிடையாது.
கே. புதிதாக மதம் மாறியவர்களோடு ஏற்கனவே இஸ்லாமியர்களாக உள்ளவர்கள் திருமண உறவுகளை மேற்கொள்கிறார்களா?
ப. செய்கிறார்கள். ஆனால், அது பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து நடக்கிறது. மிக வசதியான முஸ்லிம்கள் இவர்களோடு திருமண உறவு வைத்துக்கொள்ள மாட்டார்கள். நடுத்தர வசதியுள்ள முஸ்லிம்கள் செய்துகொள்கிறார்கள்.



கே. மதம் மாறிய குடும்பங்களின் பொருளாதாரம், சமூக நிலை மேம்பட்டிருக்கிறதா?
ப. கூரை வீடு போட்டிருந்தவர்கள், ஓட்டுவீட்டில் இருக்கிறார்கள். ஓட்டுவீட்டில் இருந்தவர்கள் காரை வீட்டில் வசிக்கிறார்கள். 50 சதவீதம் பேருக்கு மேல் அரபு நாடுகளுக்கு வேலைக்குப் போயிருக்கிறார்கள். உமர் ஷரீஃப் என்பவர் பிரதான சாலையில் பெரிய வணிக வளாகத்தைக் கட்டியிருக்கிறார். இன்றும் அவர் பள்ளராக இருந்திருந்தால் இந்த நிலைக்கு அவரால் வந்திருக்க முடியாது.
என்னுடைய அறிக்கையில் இவர்களது பொருளாதார மேம்பாட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது, “There is no significant change in their economic conditions” என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். அதாவது பெரிய அளவில் பொருளாதார மாற்றமில்லை எனச் சொல்லியிருக்கிறேன். யாரும் பெரிய தொழிலதிபராக வரவில்லை. கணிசமான எண்ணிக்கையில் விவசாயத் தொழிலாளர்களாக இருக்கிறார்கள். வீடு மாறியிருக்கிறது. உணவு மாறியிருக்கிறது. வெளிநாடுகளுக்கு போகிறார்கள். அவ்வளவுதான்.
அதேவேளையில் அவர்களை அழுத்திக்கொண்டிருந்த சமூக அடக்குமுறையிலிருந்து தற்போது விடுபட்டிருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்ட உண்மை.

மீனாட்சிபுரம்
கே. அந்தத் தருணத்தில் தமிழகத்தில் இருந்த தலித் அமைப்புகளின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?
ப. இப்போது இருப்பதைப் போன்ற சூழல் 35 ஆண்டுகளுக்கு முன்பாக இல்லை. தலித் இளைஞர்கள், அம்பேத்கர் இயக்கங்களில் செயல்பட்டவர்கள்தான் மத மாற்றத்திற்கான பணிகளை மேற்கொண்டவர்கள். திருநெல்வேலியில் இதற்கென ஒரு சபை இருக்கிறது. அது இஷா அத்துல் சபை. முன்பு நான் குறிப்பிட்ட தங்கராஜ் என்பவர் மறவர் இனப் பெண் ஒருவரை கேரளாவுக்கு அழைத்துச் சென்று, மதம் மாறி திருமணம் செய்து திரும்பிவந்தார். அவர்தான் முதன் முதலாக தனிநபராக மதம் மாறியவர். மதம் மாறிய பிறகு யூஃசுப் எனப் பெயர் சூட்டிக்கொண்டார்.
இதையெல்லாம் பார்த்த தலித் இளைஞர்கள் தாங்களும் எப்படி மதம் மாறுவது என யோசித்தபோது இஷா அத்துல் சபையை அணுகினார்கள். அவர்கள் முதலில் மறுத்துவிட்டார்கள். மீண்டும் மீண்டும் அவர்களைச் சந்தித்து, மதம் மாற விரும்பும் குடும்பங்களின் பெயர்ப் பட்டியலைத் தந்து சம்மதிக்கச் செய்தார்கள். பிறகு அவர்களும் மீனாட்சிபுரத்திற்கே வந்து, மதம் மாறிவிரும்பும் குடும்பங்களிடம் பேசி, அவர்கள் உறுதியாக இருக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொண்டார்கள்.
இதெல்லாம் நடந்தபோது, காங்கிரஸ் கட்சித் தலைவர் இளையபெருமாள் அவர்களைத் தவிர வேறு யாரும் தலித் தலைவர்கள் அங்கு சென்றதாகத் தெரியவில்லை.
கே. இந்த மத மாற்றம் அரசியல் ரீதியாக அவர்களை உயர்த்தியதா?
ப. அப்படிச் சொல்ல முடியாது. எந்தக் கட்சியிலும் மாவட்டத் தலைவராகவோ மாநிலப் பொறுப்பாளராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ யாரும் ஆகவில்லை. ஆனால், ஒரு பெரிய சமூகத்தோடு இணைந்ததால் அச்சுறுத்தல் இல்லை.
கே. அவர்கள் வாக்களிக்கும்போது தங்களை என்னவாகக் கருதி வாக்களிக்கிறார்கள்?
ப. அவர்கள் தங்களை இஸ்லாமியராகக் கருதித்தான் வாக்களிக்கிறார்கள். அவர்களுடைய உறவினர்கள் என்று வரும்போது ஒருவேளை தங்கள் பழைய சமூககூறுகளோடு அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.
கே. இந்த மத மாற்ற சம்பவத்திற்குப் பிறகு அங்குள்ள தலித் மக்களைப் பற்றிய அரசாங்கத்தின் பார்வை மாறியிருக்கிறதா?
ப. முன்பைப்போல அரசின், அரசு அதிகாரிகளின் அத்துமீறல்கள் அங்கு நடப்பதில்லை. இந்த சம்பவத்திற்குப் பிறகும் இதற்கு ஒரு ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற மண்டைக்காடு கலவரத்திற்குப் பிறகும் நியமிக்கப்பட்ட நீதியரசர் வேணுகோபால் கமிஷன், கட்டாய மதமாற்றத்தை தடை செய்யும் சட்டத்தை பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில்தான் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை ஜெயலலிதா கொண்டுவந்தார். இது மீனாட்சிபுர சம்பவத்தின் எதிரொலிதான்.
கே. இந்த சம்பவத்திற்குப் பிறகு அரசு அங்கு வசதிகள் எதையும் மேம்படுத்திக்கொடுத்ததா?
ப. அந்த நேரத்தில் பல வாக்குறுதிகள் தரப்பட்டிருக்கின்றன. மீண்டும் இந்துவாக மாறும்படி கோரியிருக்கிறார்கள். சாலை போட்டுத்தருகிறோம், வீடு கட்டித்தருகிறோம் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், எதையும் செய்யவில்லை. ஒரு சில இந்து அமைப்புகள் சில வீடுகளைக் கட்டித்தந்துள்ளன. அவ்வளவுதான்.
bbc

கருத்துகள் இல்லை: