திங்கள், 27 ஆகஸ்ட், 2018

கலைஞர் புகழஞ்சலி கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்கவில்லை

News18 : திமுக தலைவர் கலைஞரின் புகழஞ்சலி கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
 சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், “தெற்கில் உதித்தெழுந்த சூரியன்” என்ற தலைப்பில் திமுக சார்பில் வரும் 30-ம் தேதி நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான பட்டியலை திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
அதில், காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத், மதசார்பற்ற ஜனதா தள எம்.பி. தேவ கவுடா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் எம்.பியுமான பரூக் அப்துல்லா, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சிதாராம் யச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும் எம்.பியுமான ராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. தெரிக் ஓப்ரென் உள்ளிட்ட தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.


இந்தக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்கிறார் என்று தகவல் வெளியானது. ஆனால், அதனை மறுத்து பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், அமித் ஷா கலந்துகொள்ள மாட்டார் என்று கடந்த 24-ம் தேதி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது வெளியான தகவலின் அடிப்படையில், கருணாநிதியின் புகழஞ்சலி கூட்டத்தில் பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்கவில்லை என்றும், அவருக்கு பதிலாக பாஜக சார்பில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. <

கருத்துகள் இல்லை: