ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

ஹெல்மெட் . உடன் பயணிப்பவர்களுக்கும் கட்டாயம்! பெண்கள், குழந்தைகள் நிலை என்ன? முழு விவரம்

Accident rate in Tamilnadutamil.indianexpress.com :இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்பது கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என்றும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. பத்திரிக்கை, தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்திருக்கிறார்.
இதனால், இனி பின்னால் உட்கார்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டியது மீண்டும் கட்டாயமாக்கப்படுகிறது.
விபத்துகளில் உயிரிழப்பை தடுப்பதற்காக இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று 1985-ம் ஆண்டே தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பின், 1988-ல் வெளியான மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 129-லும் ஹெல்மெட் கட்டாயம் என்று வலியுறுத்தப்பட்டது.

டெல்லியில் இருசக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து செல்லும் பெண்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என 2014ம் ஆண்டே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, மகாராஷ்டிரா, ஆந்திரா, உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பின்னால் பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணிவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஏன், நீதிமன்றம் இந்த விவகாரத்தில் இவ்வளவு கண்டிப்புடன் நடந்து கொள்கிறது தெரியுமா?
தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 51 லட்சத்து 47 ஆயிரம் மோட்டார் வாகனங்கள் உள்ளன. அதில் 2 கோடியே 11 லட்சத்து 44 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள். அதிக விபத்தில் சிக்குபவர்கள் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தான். தமிழகத்தில் விபத்தில் ஆண்டிற்கு 17 ஆயிரம் பேர் இறக்கின்றனர். பலியானவர்களில் 70 முதல் 90 சதவீதம் பேர் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமலும், காரில் ‘சீட் பெல்ட்’ அணியாமலும் சென்றவர்கள் தான்.
தமிழகம் தான் சாலை விபத்தில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் சாலை விபத்து 37 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆண்டுக்கு  சராசரியாக 60,000 சாலை விபத்துக்கள் நடக்கின்றன. இதில் ஆண்டுதோறும் 17,000 பேர் உயிரிழக்கின்றனர்.
தமிழகத்தில் 2001ம் ஆண்டினை ஒப்பிடும்போது, 2017ல் வாகனங்கள் எண்ணிக்கை 156 சதவீதம் அதிகரித்துள்ளது. 2017ல் சாலை விபத்தால் 16,157 பேர் உயிரிழந்துள்ளனர். 2018ல் 11,962 ஆகவும், 2019ல் 7,761 ஆகவும், 2020ல் 3,572 ஆகவும் உயிரிழப்பை தடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2016-ம் ஆண்டு ஹெல்மெட் அணியாததால் விபத்தில் சிக்கி 4,091 பேர் இறந்துள்ளனர். அதன்பின்னர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு எடுத்த கடும் நடவடிக்கையின் காரணமாக 2017-ம் ஆண்டு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 2,956 ஆக குறைந்துள்ளது. 6.4 சதவீதம் விபத்து குறைந்துள்ளது.
2016ல் நாள் ஒன்று சராசரியாக சாலை விபத்தில் 47 பேர் உயிரிழந்தனர். 2017ல் அது 44 ஆக குறைந்துள்ளது. பெரும்பாலான விபத்துக்கள் பைக்குகளால்(38.73 சதவீதம்) தான் ஏற்படுகிறது. பைக்கில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாததால் தான் 72 சதவீதம் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
ஹெல்மெட் இனி யாருக்கெல்லாம் கட்டாயம்?
2015 ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கு பிறகு, மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தின் 129வது பிரிவின் படி, அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும், பின் இருக்கையில் பயணிப்பவர்களும், ISI முத்திரை பெற்ற ஹெல்மெட் அணிவது கட்டாயம்.
சீக்கியர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர தேவைப்படும் விதிவிலக்குகளை அந்தந்த மாநில அரசு வழங்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 2007ல் தமிழக அரசு கொண்டுவந்த விதிகளின் படி, தலைப்பாகை அணியும் ‘மெய்வழிச்சாலை’ பிரிவை சேர்ந்தவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் இல்லை. இருசக்கர வாகன பின் இருக்கையில் பயணம் செய்யும் பெண்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் இல்லை, ஆனால். வாகனம் ஓட்டும் பெண்களுக்கு ஹெல்மெட் கட்டாயம். இருசக்கர வாகன பின் இருக்கையில் பயணம் செய்யும் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் இல்லை. எனினும், தற்போது நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் 4 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே ஹெல்மெட் விலக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பைக்கில் பின்னால் உட்கார்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணியாவிட்டால் என்ன தண்டனை?
இரு சக்கர வாகன ஓட்டுநர் மற்றும் பயணிப்பவர் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும். தவறும் பட்சத்தில், மோட்டார் வாகனச் சட்டம் – 1988, பிரிவு 206-இல் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, சம்மந்தப்பட்ட இரு சக்கர வாகனத்தின் அனைத்து ஆவணங்கள் மற்றும் ஓட்டுநரின் உரிமம் ஆகியவை
பறிமுதல் செய்யப்படும்.
இந்திய தர நிர்ணய சான்று பெற்ற புதிய தலைக்கவசம் மற்றும் அதனை வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றை காண்பித்தால் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் விடுவிக்கப்படும்
பைக்கில் பின்னால் உட்கார்ந்து செல்பவர்கள் இனி செய்ய வேண்டியது என்ன?
தரமான ஹெல்மெட்டை கண்டறிந்து வாங்க வேண்டியது தான், அவர்கள் செய்ய வேண்டிய முதல் வேலை.
ஹெல்மெட்டுகளில் எத்தனை வகை உள்ளன?
உலகம் முழுக்க ஃபுல்ஃபேஸ், ஓப்பன் ஃபேஸ், ஃப்ளிப்-அப், டூயல் பர்பஸ், த்ரீ குவார்ட்டர், மாடுலர், ஹாஃப், மோட்டோகிராஸ் என்று 8 வகை ஹெல்மெட்கள் உள்ளன. ஆனால், இந்தியாவில் புழக்கத்தில் இருப்பவை நான்கு வகைகள்தான்.
1. ஓப்பன் ஃபேஸ் – அதாவது திறந்த வகை ஹெல்மெட். இதுதான் பேஸிக் மாடல். பெண்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், இதை லேடீஸ் ஹெல்மெட் என்கிறார்கள். ஆனால், இதை ஆண்களும் பயன்படுத்தலாம். வேகமாகப் பயணிக்காதவர்களுக்கு இது பெஸ்ட். தலைப் பகுதி முழுவதையும் இது பாதுகாத்தாலும், முகத்துக்கு வைஸர் மட்டுமே பாதுகாப்பு.
இந்த Open Face வகை ஹெல்மெட்கள் பெங்களூரு மற்றும் மைசூர் நகரங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.
2. ஃபுல் ஃபேஸ் – பொதுவாக, நாம் அனைவரும் பயன்படுத்தும் ஹெல்மெட் இது. தாடை முதல் தலை முழுவதையும் பாதுகாக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பழைய ஃபுல் ஃபேஸ் மாடலில், ஏர் வென்ட்டுகள் இல்லாமல் இருந்தன. இப்போது வரும் அனைத்து மாடல்களிலும் ஏர் வென்ட்டுகள் இருப்பதால், வியர்க்குமோ என்று பயப்படத் தேவை இல்லை.
3. ஃப்ளிப் அப் – இதுவும் ஃபுல் பேஸ் மாடல்தான். ஆனால், வெயிலில் முகம் வியர்க்கக் கூடாது என்று விரும்புபவர்கள், கீழே உள்ள பட்டனைப் பயன்படுத்தி, தாடைப் பகுதியை மேலே ஏற்றிக்கொள்ளலாம். இது, பார்ப்பதற்கு ஓரளவு ஓப்பன் ஃபேஸ் மாடல் போல இருக்கும். இதிலேயே ஆட்டோ கூலிங் ஆப்ஷனும் உண்டு. அதாவது, வெயிலில் செல்பவர்களுக்கு வைஸர் இல்லாமல், கண்களை மட்டும் கவர் செய்யுமாறு கூலிங் கிளாஸை இறக்கிக்கொள்ளலாம். இரவில் வெளிச்சமாகவும், பகலில் கூலிங்காகவும் இது இருப்பதால், ஓட்டுவதற்கு சுகானுபவமாக இருக்கும். ஆனால், ஆபத்து நேரத்தில் இதில் முழுப் பாதுகாப்பு கிடைக்காது.
4. மோட்டோ கிராஸ் – இதுவும் ஒரு வகையில் ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்தான். இதில் தாடைப் பகுதிக்கென்று சிறப்புப் பாதுகாப்பு இருக்கும். இதை ‘ஸ்கெலிட்டன் ஹெல்மெட்’ என்றும் சொல்கிறார்கள். பைக் ஓட்டும்போது கீழே விழ நேர்ந்தால், முகம் தரையில் அடிபட வாய்ப்பு இருக்கிறது. அந்த மாதிரி நேரங்களில், இந்த மோட்டோ கிராஸ் ஹெல்மெட் உங்களுக்கு உற்ற நண்பனாக இருக்கும். முன்பு டர்ட் பைக் ரேஸ்களில்தான் இதைப் பெரிதும் பயன்படுத்தினார்கள். இது, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால், இப்போதைய இளைஞர்களை இது மிகவும் கவரும். இதில், தலைக்கு மேலே சன் ஷேடு இருப்பதால், வெயில் மற்றும் மழை உங்களை நேரடியாகத் தாக்காது!.
ஹெல்மெட் அணிவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட ஹெல்மெட்டைத் தேர்ந்தெடுப்பது ரொம்ப முக்கியம். காஸ்ட்லியாக வாங்க விரும்புபவர்கள் ஜெர்மன், அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த இம்போர்ட்டட் ஹெல்மெட்டுகள் வாங்கலாம். ஐரோப்பா பிராண்டுகளில் ECE குறியீடு இருக்கும். Economic Commissions for Europe என்பதுதான் இதன் சுருக்கம். இதை கவர்ன்மென்ட் ஆஃப் யுகே வெப்சைட்டில் செக் செய்து கொள்ளலாம். வட, தென் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்த ஹெல்மெட்டுகளில் DOT (Department of Transportation) எனும் கோட் நம்பரும் சர்ட்டிஃபிகேட்டும் இருக்கிறதா என்று செக் செய்துகொள்ளுங்கள்.
நம் ஊர்களில் DOT ஸ்டிக்கர்கள் டூப்ளிகேட்டாகக் கிடைக்கின்றன. ஆனால் ஒரிஜினல் ஹெல்மெட்களில் DOT கோடு, மோல்டு செய்யப்பட்டிருப்பதை வைத்துக் கண்டுபிடிக்கலாம். ஜெர்மன் தயாரிப்பில் SCHNELL என்ற குறியீட்டை வைத்துக் கண்டுபிடிக்கலாம். இதில் கவனமாக இருக்க வேண்டும்.
இந்தியாவுக்கு ISI முத்திரை. இதிலும் நிறைய போலியான ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவதால், கவனம் தேவை. ISI முத்திரை இல்லாத ஹெல்மெட்டை விற்கவோ, ஸ்டாக் வைத்திருக்கவோ கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகவே, மக்கள்  ISI முத்திரை உண்மைதானா என்பதைக் கண்டறிய www.bis.org.in என்ற இணையதளத்தில், ISI மற்றும் CM/L நம்பரை வைத்துச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை: