ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

மக்கள் கோபத்தில் உள்ளனர் : நட்ராஜ் எம்.எல்.ஏ.

சசிகலாவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியைவிட்டு வெளியே வந்தபோது அவருக்கு சில எம்.எல்.ஏ.,க்களும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிக்கத் தொடங்கினர். இந்நிலையில், சுதாரித்துக்கொண்ட சசிகலா தரப்பு எம்.எல்.ஏ.,க்களை ஒட்டுமொத்தமாக கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கவைத்துவிட்டனர். இதில் சிக்காதவர் முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநரும், இந்நாள் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான நட்ராஜ். இவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் உடனே ஆதரவு அளித்துவிடவில்லை. நட்ராஜ் அந்தப் பக்கம் சாய்ந்துவிட்டார், இந்தப் பக்கம் சாய்ந்துவிட்டார் என்றெல்லாம் செய்திகள் கசிந்தபோது, “நான் எந்தப் பக்கமும் சாயவில்லை. நான் மக்கள் பக்கம்தான். நான் என் அலுவலகத்தில் அமர்ந்து மக்கள் பணியை செய்துகொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.
இறுதியில், “மக்களின் மனநிலையை உணர்ந்து நான் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிக்கிறேன்” என்று கூறினார். இப்போது எடப்பாடி பழனிச்சாமியின் அணி வெற்றிபெற்றுள்ளது. இதுகுறித்து மிகுந்த மனவேதனையோடு தன் முகநூல் பக்கத்தில் தன் கருத்துகளை அவர் பதிவு செய்துள்ளதாவது: சட்டசபையில் நடந்த வாக்கெடுப்பு ஜனநாயக விரோத அரசியலை நினைவுபடுத்துகிறது. புதிய பாதையில் செல்வதற்கான வாய்ப்பு அதிமுக எம்.எல்.ஏ.,க்களிடம் இருந்தது. ஆனால் மிகப் பெரிய வாய்ப்பை அவர்கள் தவறவிட்டுவிட்டார்கள்.
எம்.எல்.ஏ.,க்கள் நினைத்திருந்தால் தங்களின் சிறப்பான நடவடிக்கை மூலம் இளைஞர்களின் கவனத்தை அவர்கள் ஈர்த்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதை தவறவிட்டுவிட்டனர். சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் ஜனநாயக விரோதமாக நடைபெற்றது. இது மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபையில் நடைபெற்ற நிகழ்வுகள் உத்தரகாண்ட் நிகழ்வைவிட மிக மோசமாக இருந்தது.
சட்டசபையில், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தங்கள் தொகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்திக்கட்டும். பிறகு வாக்கெடுப்பு நடத்தலாம் என்று வலியுறுத்தினேன். மறைந்த ஜெயலலிதாவின் தாரக மந்திரம் 'மக்களால் நான் மக்களுக்காகவே நான் ' என்பதுதான். எனவே, மக்களின் எண்ணங்களைத்தான் சட்டசபையில் பிரதிபலிக்க வேண்டும். ஆனால் எம்.எல்.ஏ.,க்களின் மக்கள் விரோத செயலால் மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். சட்டசபை என்பது மக்களின் பிரச்னைகள் பற்றி பேசவேண்டிய சபை. எனவே, அவர்களின் கருத்தைக் கேட்டு அதன்பிறகு ஓட்டெடுப்பை நடத்தலாம் என்று கூறினேன். எங்கள் கருத்துகளை உன்னிப்பாகக் கேட்ட சபாநாயகர் சபையை ஒத்திவைக்க மறுத்துவிட்டார்; ரகசிய ஓட்டெடுப்பு நடத்த முடியாது எனக் கூறிவிட்டார். அதற்குப் பதில் அவசர அவசரமாக நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு முடிக்கப்பட்டது. 11 எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு ஓட்டு போட்டதாக ஆளுநர் தெரிவித்தார். 122 பேர் பழனிச்சாமி அரசை ஆதரித்து ஓட்டுப் போட்டனர் என்றும், இதன்மூலம் நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்றும் சபாநாயகர் தெரிவித்தார். ஆனால் இந்த ஓட்டெடுப்பில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கவில்லை. கட்சியின் கொறடா உத்தரவை நான் மீறியதால், நடவடிக்கை பாயும் என்ற சூழல் உள்ளது. இருப்பினும், என் மனசாட்சி தெளிவாக இருக்கிறது. மக்களின் எண்ணங்களை நான் பிரதிபலித்தேன் என்பதால் மகிழ்ச்சியாக உள்ளேன். பதவி என்பது எனக்குப் பெரிதல்ல. சரியான விஷயங்களுக்கு ஆதரவு தர வேண்டும்; மக்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலில் நான் ஒரு மக்களின் சேவகன். மக்களைவிட நான் அதிகாரம்மிக்கவன் என ஒருபோதும் நினைக்க மாட்டேன் என்று நட்ராஜ் கூறியுள்ளார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: