செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

தருமபுரி இளவரசன் தற்கொலை என்று "உயர்" நீதிமன்றம் தீர்ப்பு

தற்கொலையே.. தீர்ப்புமேல்முறையீடுதருமபுரி மாவட்டம், செல்லாங்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் திவ்யா. இவரை நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன், காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் அங்கு பெரும் வன்முறை வெடித்தது. இதையடுத்து, மிரட்டல் அதிகமானதன் காரணமாக திவ்யா தனது தாயுடன் இருக்க விரும்புவதாகக் கூறி, பிறந்த வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் 2013 ஜூலை 4ம் தேதி, தருமபுரி அரசு கலைக் கல்லூரி பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இளவரசன் இறந்து கிடந்தார். மகனின் மரணத்தில் மர்மம் நீடிப்பதாகக் கூறி, 2வது முறையாக உடல் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று இளவரசனின் தந்தை இளங்கோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய குழுவை நியமித்து, இளவரசன் உடலை பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.


வழக்கு விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்பதால் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும் என்று தந்தை இளங்கோ மீண்டும் மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, அரூர் டிஎஸ்பி சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அரூர் டிஎஸ்பி அளித்த அறிக்கையில், மது அருந்திய நிலையில் ரயிலில் அடிபட்டு இளவரசன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். காதல் பிரிவு, மனைவியை பிரிந்த துயரத்தில் அவர் இருந்துள்ளதால் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளவரசனின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் கொண்ட குழுவின் அறிக்கைகளில் வேறுபட்ட தகவல்கள் இடம்பெற்று உள்ளன. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி கூடுதல் டிஎஸ்பி தலைமையில் விசாரணை செய்யப்பட்ட அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் இளவரசன் இறப்பு குறித்து அனைத்து தரப்பிடமும் விசாரணை செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, அவர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையே ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், இளவரசன் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று கூறி வழக்கை மொத்தமாக முடித்து வைத்துவிட்டது. சிபிசிஐடி அறிக்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று வழக்கறிஞர் ரஜினி தெரிவித்துள்ளார்.

மேலும், திவ்யா இளவரசன் காதல் தொடர்பான அனைத்து ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாக கூறிய அவர், லோக்கல் போலீசார் செய்த விசாரணை போன்றே சிபிசிஐடி போலீசாரும் தற்கொலை என்ற கோணத்தில் வழக்கை விசாரித்து முடித்துவிட்டனர் என்றார். மேலும், இந்த வழக்கை மேல்முறையீடு செய்வது குறித்து இளவரசனின் தந்தை இளங்கோவிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்று வழக்கறிஞர் ரஜினி கூறியுள்ளார்  tamiloneindia

கருத்துகள் இல்லை: