சனி, 25 பிப்ரவரி, 2017

ஜெயிலில் சசிகலா இளவரசி சுதாகரனுக்கு வேண்டிய வசதிகள் குறைவில்லாமல் கிடைக்கிறது!

தமிழகத்தைத் தாண்டி பெங்களூருவிலும் ஆயிரம் வாட்ஸ் கேள்வியாக இருப்பது, ‘சிறைக்குள் சசிகலா என்ன செய்துகொண்டிருக்கிறார்’ என்பதுதான். ‘‘ஆடைகளும் இடமும் மட்டுமே சக கைதிகளுக்கு வழங்கப்பட்டிருப்பவை போல இருக்கின்றன. இவை தவிர, ‘சிறப்பு ஏற்பாட்டில்’ எல்லா வசதிகளும் இவர்களுக்குக் குறைவில்லாமல் கிடைக்கின்றன’’ என்கிறார்கள், இந்தச் சிறையை நன்றாக அறிந்தவர்கள். சசிகலா சிறைக்குள் சென்ற முதல் நாளில், கடுமையாக நடந்துகொள்வதைப் போல சிறைத்துறை காட்டிக்கொண்டது. ஒரே நாளில், சிறையின் நெளிவு சுளிவுகளை சசிகலா தரப்பு கண்டுகொண்டது. அதன்பின், அவர்களுக்கான பாத்திரங்கள், பொருட்கள் அனைத்தும் புதியதாக வெளியில் இருந்து வாங்கிக் கொடுக்கப்பட்டன. மருந்துகள், புரோட்டீன் பவுடர் ஆகியவை வெளியில் இருந்தே போகின்றன. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் தங்கி இருக்கும் அறைகள் கொஞ்சம் விசாலமானது. இங்கே படுத்துக்கொள்ள இரும்புக் கட்டில்களும் போடப்பட்டுள்ளன. குளிர் அதிகமாக இருப்பதாக சசிகலா தெரிவித்ததையடுத்து, அவர்கள் அறைக்கு இரண்டு போர்வைகள் கூடுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

சசிகலாவின் ஒரு நாள் அட்டவணை

காலை 5:00 மணிக்கு எழுந்துகொள்ளும் சசிகலா, ஒரு மணி நேரம் அறையிலேயே அமர்ந்து தியானம் செய்கிறார். 6:30 மணிக்கு வெந்நீரில் குளித்து, இளவரசியோடு சிறைக்குள் இருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டுவிட்டு, அங்கு ஏற்கெனவே ஜெ. வைத்த துளசி மாடத்தைச் சுற்றி வருகிறார். பிறகு செய்தித்தாள்கள் படிக்கிறார். 8:30 மணிக்கு மேல் டிபனை சாப்பிட்டு முடிக்கிறார். பிறகு டி.வி., பார்க்கிறார்கள். மதிய உணவை 2:00 மணிக்குச் சாப்பிடுகிறார்கள். பிறகு இருவரும் குட்டி தூக்கம் போடுகிறார்கள். அதன்பிறகு வேறு பொழுபோக்கு இல்லாததால் மீண்டும் டி.வி பார்த்து நேரத்தைக் கழிக்கிறார்கள். மாலை 5 டு 6 மணி வரை இளவரசியின் மகன் விவேக் மற்றும் அவரோடு உறவினர்கள் இரண்டு பேர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள், கொண்டு வரும் உணவை சசிகலாவும், இளவரசியும் 7:30 மணிக்குச் சாப்பிட்டுவிட்டுத் தூங்குவதற்கு இரவு 11:00 மணி ஆகிறதாம்.

பெங்களூரிலேயே தங்கிவிட்ட விவேக்


சசிகலா சிறை சென்ற அன்று பெங்களூரு வந்த நடராசன், மறுநாளே சென்னை திரும்பிவிட்டார். ஆனால், இளவரசியின் மகன் விவேக் தன் மனைவியோடு பெங்களூரிலேயே தங்கிவிட்டார். தினமும் மாலை  5 மணிக்குச் சிறைக்குள் சென்று அத்தை சசிகலாவிடமும், அம்மா இளவரசியிடமும் பேசிவிட்டு இரவு 7:00 மணிக்குத்தான் வீடு திரும்புகிறார்.

ஆனால், சுதாகரனை யாரும் கண்டுகொள்வது இல்லை. அவரும் அலட்டிக்கொள்ளவில்லை. ‘‘சிறை விதிகளின்படி என்ன உணவு தருகிறீர்களோ, அதையே சாப்பிடுகிறேன். தனிப்பட்ட உணவு வேண்டாம்’’ என்று சிறைக்காவலர்களிடம் கூறிவிட்டார். களியையும் சப்பாத்தியையும் விரும்பிச் சாப்பிடுகிறார். வருடத்துக்கு ஐந்து கிலோ வீதம் நான்கு வருடங்களில், 20 கிலோ உடல் எடை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்.
மிரட்டும் சுதாகரன்

சுதாகரன் சிறைக்குள் சென்றதும் முதல் வேலையாகச் சிறைக்காவலர்களிடம் ‘திருநீறு வேண்டும்’ என்று ஒரு பாக்கெட் கேட்டு வாங்கிக்கொண்டார். நெற்றி முழுக்க திருநீறு பூசிக்கொண்டு, தன் சட்டை பாக்கெட்டில் வைத்திருக்கும் காளி படத்தை எடுத்து தனக்கு முன்பாக வைத்து, ‘ஓம் காளி, ஓம் மாரி, பத்திரகாளி’ என மந்திர உச்சாடனம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். இவர் தங்கி இருக்கும் அறையில் ஏற்கெனவே இரண்டு கைதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சுதாகரன் செய்வது அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்கள் சிறைக் காவலர்களிடம், ‘‘சுதாகரன் ஒரு மந்திரவாதியைப் போல நடந்துகொள்கிறார். எங்களுக்கு பயமாக இருக்கிறது. அவரது வழிபாடு எங்களை மிரட்டுவது போல இருக்கிறது. அவரை வேறு அறைக்கு மாற்றுங்கள்’’ என்று மிரட்சியோடு சொல்லியிருக்கிறார்கள். ‘‘கடந்த முறையும் அவர் இங்கு இருக்கும்போது இப்படித்தான் நடந்துகொண்டார். அதனால், அவர் அறையில் இருந்தவர்கள் மிரண்டு ஓடினார்கள். ஆனால், சுதாகரன் நல்லவர். தீவிரமாக சாமி கும்பிடுவார் அவ்வளவுதான். பயப்பட வேண்டாம்’’ என்று காவலர்கள் சமாதானம் செய்திருக்கிறார்கள். சுதாகரன் தினமும் பல மணி நேரம் காளி வழிபாடு செய்கிறார். இரவு ஒரு மணி வரை தூங்குவது இல்லை.

நடுங்கும் சசிகலா

பெண்கள் சிறையின் பகுதி-2 பிரிவில் சசிகலாவும், இளவரசியும் ஒரே அறையில் தங்கி இருக்கிறார்கள். இந்தப் பிரிவில் மொத்தம் 20-க்கும் மேற்பட்ட அறைகள் இருக்கின்றன. ஆனால், இதில் நான்கு அறைகளில் மட்டுமே பெண் கைதிகள் இருக்கிறார்கள். மற்ற அறைகள் காலியாக உள்ளன.

சிறையில் இருவர் ஒன்றாக இருக்க முடியாது. தனியாக இருக்கலாம். இல்லை என்றால் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் இருக்கலாம். 15-ம் தேதி இரவு உள்ளே வந்ததும், இரண்டு பேரையும் ஒரே அறையில் தங்க அனுமதித்தார்கள். மறுநாள் இவர்களை ‘‘தனித்தனி அறையில் இருந்துகொள்ளுங்கள். வசதியாக இருக்கும்’’ என்று சிறை அதிகாரிகள் சொன்னார்கள். ஆனால் சசிகலா, ‘‘மொழிப் பிரச்னையாக இருக்கிறது. தனி அறையில் இருக்க பயமாக இருக்கிறது. இரண்டு பேரும் ஒன்றாக இருந்து கொள்கிறோம்’’ என்று கூறியதையடுத்து அனுமதி கிடைத்திருக்கிறது. இருந்தபோதும், ‘எங்கே... இருவரையும் பிரித்து விடுவார்களோ’ என்று சசிகலா கவலையில் இருக்கிறார். அவரை நடுங்கவைக்கும் இன்னொரு பெயர், சயனைடு மல்லிகா.
சயனைடு மல்லிகா

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா என்கிற கெம்பம்மாள். ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட இவரை, வசதியில்லாத ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். கணவர் வேலைக்குச் சென்ற பிறகு வீட்டின் அருகே உள்ள வசதியான குடும்பத்துப் பெண்களிடம் சென்று அன்பாகப் பேசிப் பழகுவார். அவர்கள் வீட்டில் தனியாக இருக்கும்போது, நைசாகப் பேசி உணவில் சயனைடுவைத்து கொன்றுவிட்டு, வீட்டில் இருக்கும் நகைகளைத் திருடி வந்துவிடுவார்.  ஒரு கட்டத்தில் கெம்பம்மாளின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர், வீட்டை விட்டுத் துரத்திவிட, அவருக்கு காவி ஆடையும் சாமியார் வேடமும் கை கொடுத்தது.

ஏதாவது ஊரில், கோயிலில் போய் தங்குவார். கோயிலுக்கு வரும் வசதியான பெண்களைக் குறிவைத்து, பக்திக் கதைகள் சொல்லிப் பழகுவார். குடும்பக் கஷ்டங்கள் தீர வழிகாட்டுவதாகச் சொல்வார். உடல்முழுக்க நகைகளைப் போட்டுக்கொண்டு மதிய நேரத்தில் கோயில் குளக்கரைக்கு வரச் சொல்வார். நகைகளைக் கழற்றி வாங்கிக் கொண்டு, திருநீறைக் கொடுத்து, ‘‘இதை சாப்பிட்டுக்கொண்டே குளத்தைச் சுற்றிவந்து குளி” என்று சொல்வார். அவர் கொடுக்கும் திருநீறில் சயனைடு கலந்து இருக்கும் என்பதால், குளத்திலேயே பரிதாபமாக இறந்துவிடுவார்கள். நகைகளோடு கெம்பம்மாள் வேறு கோயிலுக்கு ஓடிவிடுவார். இங்கே குளத்தில் பெண் தடுமாறி விழுந்து இறந்ததாகப் பொதுமக்கள் நம்பிவிடுவார்கள். இப்படி ஆறு கொலைகளைச் செய்தவர்தான் கெம்பம்மாள்.

2006-ம் ஆண்டு இவர் கைதுசெய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா   சிறையில்   அடைக்கப்பட்டார். கேடி கெம்பம்மாள், ‘சயனைடு மல்லிகா’ என்ற புனைப்பெயரிலும் அழைக்கப்பட்டார். இவருக்கு 2010-ல் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. 2012-ல் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

கடந்த 2014-ல் ஜெயலலிதா இந்த சிறையில் இருந்தபோது கேடி கெம்பம்மாள், ‘‘நான் ஜெயலலிதாவின் தீவிர ரசிகை. அவரைப் பார்க்க வேண்டும்’’ என்று சிறைக் காவலர்களிடம் அடாவடி செய்ததோடு, ஜெயலலிதாவைச் சந்திக்க கடும் முயற்சி மேற்கொண்டார். ஆனால், இறுதி வரை ஜெயலலிதாவைப் பார்க்க முடியவில்லை. இவர் பகுதி-2 பிரிவில் சசிகலாவின் பக்கத்து அறையில் இருந்தார். இதனால், சசிகலா குலை நடுங்கிவந்தார். 18-ம் தேதி வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி முதல்வரானது உறுதியானதையடுத்து, அன்று மாலை சசிகலாவும் இளவரசியும் முதல் மாடிக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். சயனைடு மல்லிகா பெயரைச் சொல்லியே தமிழக சிறைக்கு மாறிவிட சசிகலாவுக்கு திட்டமும் உண்டாம். 
ஜெ. வைத்த துளசி மாடம்

ஜெயலலிதா, போயஸ் கார்டனில் காலையில் எழுந்ததும் துளசி மாடத்தைச் சுற்றுவது வழக்கம். கடந்த முறை பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபோது, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மூன்று பேரும் சிறைக்குள் இருக்கும் ராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் சென்று வருவார்கள். அவர்களோடு சிறைக்காவலர்களும் செல்வார்கள். அப்போது, ஜெயலலிதா சில பெண் காவலர்களிடம், ‘‘இந்த அம்மன் கோயில் முன்பு துளசி மாடம் வைத்தால் நன்றாக இருக்குமே’’ என்றார்.

அந்தப் பெண் பாதுகாவலர்கள் தங்கள் உயர் அதிகாரிக்குத் தகவல் கொடுக்க, உடனே மாடம் ரெடியானது. அடுத்த நாள் கோயிலுக்குவந்த ஜெயலலிதா, அதைப் பார்த்து வியப்படைந்தார். ‘‘நான் சொன்னதைப் போல மாடம் கட்டி இருக்கீங்க. இதில் துளசிச் செடியை காணோமே’’ என்று புன்னகைக்க, அந்தப் பாதுகாவலர்கள், ‘‘மேடம், உங்கள் கையால் நடுவதற்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கிறோம்’’ என்று துளசி செடியைக் கொடுத்தனர். ஜெயலலிதா அதை வாங்கி மாடத்தில் நட்டார். அவர் விடுதலை ஆனபிறகும் அந்த துளசி மாடத்தை சிறை ஊழியர்கள் பராமரித்து வந்தார்கள்.

இந்த முறை சிறைக்கு வந்திருக்கும் சசிகலாவும் இளவரசியும் 16-ம் தேதி காலை எழுந்ததும், அம்மன் கோயிலுக்குச் சென்றனர். அந்த துளசி மாடத்தைப் பார்த்து, ‘‘அக்கா வைத்த துளசி மாடம்’’ என்று கண் கலங்கிய சசிகலா, நாள்தோறும் காலையில் எழுந்து இந்த துளசி மாடத்தைச் சுற்றி வருகிறார்.

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: க.தனசேகரன், எம்.விஜயகுமார், ரமேஷ் கந்தசாமி, மீ.நிவேவதன்  விகடன்

கருத்துகள் இல்லை: