ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

மன்னார்குடிக்கு காங்கிரசை விற்க தயாரான திருநாவுக்கரசு ... முறியடித்த ப.சிதம்பரம்

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிலை எடுக்க முயன்ற தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசரின் முயற்சியை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடைசி நேரத்தில் முறியடித்துள்ளார்.
சட்டப்பேரவையில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பாக முடிவெடுக்க காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம், சத்தியமூர்த்தி பவனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது “எடப்பாடி பழனிசாமி அரசு கவிழ்ந்தால் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடும். குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது மறைமுகமாக பாஜக ஆட்சிதான். எனவே, பாஜகவுக்கு சாதகமான நிலை உருவாகாத வகையில் முடிவெடுக்க வேண்டும்” என திருநாவுக்கரசர் பேசியதாக கூறப்படுகிறது. 
பாஜகவை காரணம் காட்டி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு நிலை எடுக்க திருநாவுக்கரசர் திட்டமிட்டதாக கூறப்பட்டது. கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், “கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை கட்சி மேலிடத்தில் தெரிவிப்போம். அதன்பிறகு சனிக்கிழமை (நேற்று) காலை 9 மணிக்கு முடிவை அறிவிப்போம்” என்றார்.
அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங் கோவன், “காங்கிரஸ் மேலிடத்தின் முடிவுக்கு எதிராக திருநாவுக்கரசர் செயல்படுகிறார். அதிமுகவைச் சேர்ந்தவர் போலவே அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன” என குற்றம்சாட்டியிருந்தார்.
சனிக்கிழமை காலை 9 மணிக்கு முடிவை அறிவிப்போம் என திருநாவுக்கரசர் கூறியிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கே, எடப்பாடி பழனி சாமி அரசுக்கு எதிராக வாக்களிக்கு மாறு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராம சாமிக்கு தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் குறுஞ்செய்தி அனுப்பி னார். இதனை அவர் செய்தி யாளர்களுக்கும் அறிவித்தார்.
இதன் பின்னணியில் ப.சிதம் பரம் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார். இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, “எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கில் திருநாவுக்கரசர் காய்களை நகர்த்தி வந்தார். இதனை உணர்ந்துகொண்ட ப.சிதம்பரம், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முகுல் வாஸ்னிக் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அரசுக்கு ஆதரவு தெரிவித்தால் காங்கிரஸின் நிலைமை மோசமாகிவிடும். சசிகலா மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எனவே, கூட்டணி கட்சியான திமுகவைப் பின்பற்றி அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என விளக்கமாக எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் அறிவுரைப்படி எதிர்த்து வாக்களிக்குமாறு கே.ஆர்.ராம சாமிக்கு தகவல் தரப்பட்டது. ஈவிகேஎஸ் இளங்கோவனும் திருநாவுக்கரசருக்கு எதிராக மேலிடத் தலைவர்களிடம் புகார் தெரிவித்தார். இதனால் திருநாவுக்கரசரின் முயற்சி முறியடிக்கப்பட்டது” என்றார்.
tamilthehindu

கருத்துகள் இல்லை: