புதன், 20 ஜூலை, 2016

பியூஷ் மனுஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சேலம் நீதிமன்றம்

சேலத்தில் உள்ள முள்ளுவாடி கேட் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் முயற்சியை ரெயில்வே நிர்வாகம் தொடங்கியது. இதனைக் கண்டித்து போராட்டம் நடத்திய சேலம் குடிமக்கள் அமைப்பைச் சேர்ந்த பியூஷ் மனுஷ், கார்த்திக், முத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கார்த்திக், முத்து ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றம், பியூஷ் மனுஷுக்கு மட்டும் ஜாமீன் வழங்கவில்லை. அவரை சிறையில் காவலர்கள் அடித்து உதைத்ததாக அவரது மனைவி மோனிகா குற்றம் சாட்டினார். இந்நிலையில், பியூஷ் மனுஷின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சேலம் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, பியூஷ் சார்பில் அவரது மனைவி மோனிகா வாதாடினார்.


இப்போது பியூஷ் மனுஷ் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டு வந்ததாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

இதனை மறுத்த மோனிகா, தன் கணவர் பொதுநலனுக்காக மட்டுமே போராடியதாகவும், சேலம் மக்கள் குழு மீதுதான் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, பியூஷ் மனுஷுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கினார். மூன்று வாரங்களுக்கு தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும், பியூஷ் மனுஷ் கொலைக் குற்றவாளியோ தீவிரவாதியோ அல்ல என்று கூறிய நீதிபதி, சமூக அக்கறையோடு செயல்படுவோர் பொறுப்பறிந்து செயல்படவேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.

ஜாமீன் கிடைத்ததையடுத்து பியூஷ் மனுஷ் நாளை சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்.  மாலைமலர்.காம்

கருத்துகள் இல்லை: