செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

சரிதா நாயர் கேரளா பிரமுகர்களுக்கு எதிரான பாலியல் ஆதாரங்களை வழங்கினார்

கேரளாவில் சோலார் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சரிதா
நாயர், அரசியல்வாதிகளுக்கு எதிராக கூறியிருந்த பாலியல் குற்றச்சாட்டுகளுக்கான கூடுதல் ஆதாரங்களை இன்று வழங்கினார். கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ள சோலார் மோசடி தொடர்பாக தொழிலதிபர் சரிதா நாயர், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன், கேரள தலைமை செயலக ஊழியர் ஜோப்பன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த கடந்த 2013–ம் ஆண்டு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் முன்பு சரிதா நாயர் உள்பட பலரும் ஆஜராகி சாட்சியம் அளித்து வருகின்றனர். அத்துடன் முதல்–மந்திரி உம்மன்சாண்டியும் கடந்த மாதம் இந்த கமிஷன் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.


இந்த கமிஷன் முன்பு வாக்குமூலம் அளித்த சரிதா நாயர், சூரிய மின்சக்தி ஊழல் விவகாரத்தில் முதல்–மந்திரி உம்மன்சாண்டிக்கு ரூ.1.90 கோடியும், மின்துறை மந்திரி ஆர்யாடன் முகமதுவுக்கு ரூ.40 லட்சமும் லஞ்சம் கொடுத்ததாக கூறினார்.

மேலும் பல்வேறு அரசியல்வாதிகளுக்கு எதிராக செக்ஸ் குற்றச்சாட்டுகளையும் கூறியிருந்த சரிதா நாயர், அது தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய சீல் வைக்கப்பட்ட உறையை விசாரணைக் கமிஷனிடம் ஒப்படைத்தார்.

இந்நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜரான சரிதா நாயர், அரசியல்வாதிகள் மீதான செக்ஸ் குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் வகையில் ஆடியோ, வீடியோ அடங்கிய கூடுதல் ஆதாரங்களை விசாரணைக் கமிஷனரிடம் வழங்கினார்.

விசாரணைக் குழுவிடம் தான் ஏற்கனவே அளித்த வாக்குமூலங்களை நியாயப்படுத்தும் வகையிலான ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை சீலிடப்பட்ட கவரில் வைத்து கொடுத்துள்ளதாகவும், வரும் நாட்களிலும் இதுபோன்ற ஆதாரங்களை வழங்க உள்ளதாகவும் சரிதா கூறினார். 

இவ்வழக்கில் திருப்பு முனையாக புதிய தகவல்கள் வெளியாகி வருவதால், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவான ஏப்ரல் 27-ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வது சந்தேகம் என விசாரணைக் கமிஷன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.maalaimalar.com

கருத்துகள் இல்லை: