ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

பழ.கருப்பையா : ஊழல் என்றால் அம்மா தான். மற்றவர்கள் எல்லாம் சும்மா....

மொத்தமாக ஊழல் செய்யும் முறையை கண்டுபிடித்தது  அம்மா தான். மற்றவர்கள் எல்லாம் சும்மா" என பேசி பழ.கருப்பையா பரபரப்பை கிளப்பி உள்ளார்.
தமிழக அரசியலின் அண்மைகால பரபரப்பு பழ.கருப்பையா தான். துக்ளக் ஆண்டு விழாவில் சொந்த கட்சியை தாக்கி பழ.கருப்பையா பேசிய பேச்சம், பத்திரிகைகளுக்கு அவர் கொடுத்த பேட்டியும், இவற்றுக்கு எதிர்வினையாக அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டதும், அவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் தான் தமிழக அரசியலின் சமீபத்திய அண்மை காலச் சம்பவங்கள்.
தற்போது அவர் அ.தி.மு.க.வில் இல்லை. எம்.எல்.ஏ.வாகவும் இல்லை. ஆனால், இன்னும் இவர் அரசியலைவிட்டு விலகிவிடவில்லை. அதனால், இவற்றோடு நிறுத்திக்கொள்ளாமல் அடுத்த கட்ட பரபரப்புகளுக்கு தனது பேச்சின் மூலம் அச்சாரமிட்டு இருகிறார் பழ.கருப்பையா.

திருப்பூரில், புத்தக கண்காட்சியையொட்டி நடந்த கருத்தரங்கில் 'அரசியல் அறம்' எனும் தலைப்பில் பேசினார் பழ.கருப்பையா. துக்ளக் ஆண்டு விழாவுக்கு முன்னரே பழ.கருப்பையாவிடம் தேதி வாங்கப்பட்ட கூட்டம் இது. திட்டமிட்டு இது நடக்கவில்லை என்றாலும், தனது பேச்சில் இன்றைய அரசியல் சூழலை பற்றி கடுமையாக விமர்சித்தார்.

இந்த கூட்டத்துக்கு பின் பழ.கருப்பையாவிடம் பேசினோம், ''நான் இன்னுட் திகைப்பு அலையில் இருந்து விடுபடவில்லை. அடுத்த கட்ட நகர்வுகளை கவனித்து வருகிறேன். காலை தூக்கும் போதே வைத்தாக வேண்டும் என என்ன கட்டாயம் இருக்கிறது? எது சீரானது என யோசிக்க வேண்டி இருக்கிறது. பல அரசியல் நிகழ்வுகள் நிகழவிருக்கின்றன. எதிர்பாராத திருப்பங்கள் எல்லாம் நிகழும். அத்தகைய நிலையை நோக்கித்தான் தமிழகம் இருக்கிறது. அதை எல்லாம் கவனித்து நல்ல முடிவெடுக்கலாம் என எதிர்பார்த்திருக்கிறேன்.
என் வீடு தாக்கப்பட்டபோது எல்லா எதிர்கட்சித்தலைவர்களும், குறிப்பாக கலைஞர், ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் உட்பட அத்தனை பேரும் எனக்கு ஆறுதலாக இருந்தனர். ரஜினிகாந்த் உட்பட பலர் எனக்கு ஆறுதல் சொன்னார்கள். அதன் விளைவாக தான் தனி மனிதனாக திருப்பூர் வந்து செல்ல முடிகிறது. ஆனால் நான் பேச இருந்த பல கூட்டங்களை ரத்து செய்துவிட்டார்கள். கலகம் நடக்கும் என அந்த கட்சிக்காரர்கள் அச்சுறுத்தியதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால் அதாவது இன்னும் ஒன்று அல்லது ஒன்றரை மாதத்தில் பெரிய மாற்றங்கள் நடக்கும். இப்போது அணி சேர்ந்திருப்பது எல்லாம் சரியாக இருக்காது. சீட்டுக்கட்டு மாறுவது போல எல்லாம் மாறும். ஏனென்றால், நிகழ்வுகளுக்கு ஏற்ப தான் அரசியல் இருக்க முடியுமே தவிர, அரசியலுக்கு ஏற்ப நிகழ்வுகளை நாம் உருவாக்க முடியாது. அத்தகைய நிலையில் நாம் யோசித்து செய்ய வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன்.

என் வீட்டின் மீதான தாக்குதலுக்கு பின்னர் எனக்கு பாதுகாப்பு எதுவும் வழங்கப்படவில்லை. சம்பவம் நடந்த அன்று மட்டும் வீட்டின் முன் போலீசார் இருந்தார்கள். அதோடு அவர்கள் போய்விட்டார்கள். தாக்கிய மனிதர்கள் அந்த வட்டத்தைச் சேர்ந்தவர்கள் தான். அவர்களை எனக்கு நன்றாக தெரியும். அவர்களை போலீஸ் ஸ்டேஷனிலேயே ஜாமீன் கொடுத்து, எழுதி வாங்கிக் கொண்டு வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். இதெல்லாம் என்ன நியாயம்?

ஒரு முதல்வருக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு, குடிமகனுக்கு அப்படியான பாதுகாப்பு வேண்டாம். நியாயமாக தவறு செய்வதர்களை தண்டித்தால் அடுத்த முறை திரும்ப செய்ய மாட்டான். ஆனால் அங்கிருந்தே வீட்டுக்கு போக சொல்லி விட்டால், என்ன நினைப்பார்கள்? இந்த செயல் முதல்வருக்கு பிடிக்கிறது. எனவே முதல்வரின் கவனத்தை கவர இன்னொருமுறை தாக்குவோம் என்று தானே நினைப்பார்கள். யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது. இது நல்ல முறையில்லை.

தி.மு.க.விலும் தாக்கப்பட்டுள்ளீர்கள். அ.தி.மு.க.வில் தாக்கப்பட்டுள்ளீர்களே என கேட்கிறீர்கள். நான் என்னை சார்ந்து தனி மனித அடிப்படையில் முடிவு எடுக்கமாட்டேன். பெருவாரியான மக்களின் நன்மை குறித்து ஆலோசித்து தான் முடிவெடுப்பேன். என்னை வைத்து அல்ல, நாட்டை வைத்து நாம் எல்லோரும் ஒரு முடிவெடுக்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம். இந்த தீமைகள் எல்லாம் ஒழிந்தால் தான் நல்லது.

நான் தனிப்பட்ட முறையில் சொல்கிறேன். ஒட்டு மொத்தமாக ஊழலில் ஈடுபடுவது  இந்த அ.தி.மு.க. ஆட்சியில் தான் உள்ளது. மற்றவர்கள் உதிரி உதிரியாய்  ஊழல் செய்திருக்கிறார்கள். மையப்படுத்தி ஊழல் செய்யும் முறையை கண்டுபிடித்தது அம்மா தான். மற்றவர்கள் எல்லாம் சும்மா. அந்த வகையில் இந்த புதிய தீமையை, முன்பைவிட பல மடங்கு பெருகி நிற்கின்ற இந்த தீமையை அகற்ற வேண்டியது என்பது நம் முதல் வேலை.

சொத்துக்குவிப்பு வழக்கின் முடிவு எப்படி இருக்கும் என்பதை என்னால் கண்டுபிடிக்க தெரியாது. எதுவும் அறம் சார்ந்து நடக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். ஏனென்றால் கடவுள் மிகப்பெரியவன்" என்றார்.

- ச.ஜெ.ரவி   விகடன்,com

கருத்துகள் இல்லை: