திங்கள், 8 பிப்ரவரி, 2016

ஸ்டாலின் உபயத்தில் திமுக மீது சவாரிசெய்ய பாஜக கடும் முயற்சி.....

சட்டசபை தேர்தல் கூட்டணி விவகாரத்தில், கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே மல்லுக்கட்டு நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கி உள்ளது. அதனால், கூட்டணி அமைப்பதற்காக, தமிழகத்தின் பிரதான கட்சிகளான, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில் ரகசிய பேச்சுகள் துவங்கி உள்ளன. அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை, அக்கட்சியின் தலைமை என்ன நினைக்கிறதோ, அதை ஏற்றுக் கொள்வோர் மட்டுமே கூட்டணி பேச்சில் பங்கேற்க முடியும்.ஆனால், தி.மு.க.,வில் அப்படியில்லை. கூட்டணி சேரும் கட்சிகள், தொகுதிகளை நிறைய கேட்டு, கடைசி வரை பலம் பார்ப்பது வாடிக்கையானது. இந்நிலையில், 'தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ஜ., கூட்டணி அமையப் போகிறது; அப்படி அமையும் கூட்டணி வெற்றி பெற்றால், முதல்வராக ஸ்டாலின் இருப்பார்' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியிருப்பது, தி.மு.க.,வில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 'நமக்கு நாமே' பயண திட்ட நிகழ்ச்சிகள் உட்பட, அனைத்து நிகழ்ச்சிகளிலும், 'தி.மு.க., தலைவர் கருணாநிதியே அடுத்த முதல்வர்' என, சொல்லி வந்த ஸ்டாலின், சாமியின் இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவிக்காததுடன் அமைதியாகவும் உள்ளார்.


அதனால், 'இந்த கருத்தின் பின்னணியில் ஸ்டாலின் உள்ளார்' என, கருணாநிதி கண்டறிந்து, ஸ்டாலின் தரப்பினர் மீது கடும் கோபத்தில் உள்ளார். இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றால், ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என, திரைமறைவில் அவரின் குடும்பத்தினர் பல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட ஏற்பாட்டில் ஒன்று தான், ஸ்டாலினின் நமக்கு நாமே பயண திட்டம். இதன் பின்னரும், முதல்வர் விஷயத்தில் கருணாநிதி உறுதியாக இருந்ததால், ஸ்டாலின் தரப்பினரால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்நிலையில், ஸ்டாலினின் சகோதரி செல்வி களமிறங்கி, சாமிக்கு வேண்டப்பட்ட சந்திரலேகா ஐ.ஏ.எஸ்.,சை சந்தித்து பேசியுள்ளார். அவர் மூலம் சுப்பிரமணியன் சாமியை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

அப்போது, 'தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைய சாமி உதவ வேண்டும்' என, கேட்டுக் கொண்டதோடு, 'ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும்' என்ற நிபந்தனையையும், பா.ஜ., தரப்பில் முன்வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதை ஏற்ற சாமி, பா.ஜ., மேலிட ஒப்புதலுடன் தன் சித்து விளையாட்டுகளை ஆரம்பித்தார். அதன் பின், பா.ஜ., - தே.மு.தி.க., - தி.மு.க., கூட்டணி பற்றிய அவரது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் பின்னணியை அறிந்த கருணாநிதி, ஸ்டாலின் தரப்பு முயற்சியை தடுக்கும் காரியங்களில் இறங்கி உள்ளார். தன் மகள் கனிமொழி மூலமாக காங்கிரசுடனும், தே.மு.தி.க.,வுடனும் பேசிக் கொண்டிருக்கும் அவர், விரைவில், காங்கிரஸ் உடன் தான் கூட்டணி என்ற அறிவிப்பை வெளியிடவும் ஆர்வமாக உள்ளார்.>குடும்பத்தினர் தவிப்பு: இதற்காக, காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் ஒரு சுற்று பேச்சு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக, கருணாநிதியுடன் பேச்சு நடத்த, முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், சென்னை வரவுள்ளார்.அத்துடன்,ஸ்டாலின் தரப்பு விரும்புவது போல, பா.ஜ., உடன் கூட்டணி இல்லை என்பதை உறுதி செய்யும் விதமாக, அடுத்த மாதம் திருச்சியில் நடைபெற உள்ள சமூக நீதி மாநாட்டில் பங்கேற்கவும், கருணாநிதி சம்மதம் தெரிவித்துள்ளார்.இந்த மாநாட்டில்,a>பீகார் முதல்வர் நிதிஷ் குமார், முன்னாள் முதல்வர் லாலு உட்பட, மதச்சார்பற்ற கொள்கையை பின்பற்றும் பல தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.கருணாநிதியின் இந்த நடவடிக்கையை அறிந்ததும், அவரை, திருச்சி மாநாட்டில் பங்கேற்காமல் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஸ்டாலின் தரப்புதற்போது இறங்கி உள்ளது.இப்படி காங்கிரசா... பா.ஜ.,வா... என, கூட்டணி அமைப்பதில் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இடையில் கடும் முட்டல், மோதல் நிலவுகிறது. இருப்பினும், இறுதியில் யார் கை ஓங்கும் என புரியாமல் கருணாநிதி குடும்பத்தினரே தவித்து வருகின்றனர். இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன. 'துக்ளக்' விழாவில் ஸ்டாலின் மருமகன்! சமீபத்தில், 'துக்ளக்' பத்திரிகை ஆண்டு விழா நடந்தது. அந்த விழாவில், 'தி.மு.க.,வை தான் விமர்சிப்பர். அதனால் அவ்விழாவுக்கு, தி.மு.க., சார்பில் யாரும் செல்ல வேண்டாம்' என, கட்சியினருக்கு கருணாநிதி உத்தரவிட்டிருந்தார். இருந்தும், கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த ஸ்டாலின் மருமகன் சபரீஷன் விழாவில் பங்கேற்றுள்ளார். வழக்கமாக பத்திரிகையாளர் சோ, தி.மு.க.,வை விமர்சிப்பார்; ஆனால், ஸ்டாலினை விமர்சிக்கமாட்டார். மாறாக, அவரது தியாகம், உழைப்பு ஆகியவற்றை பாராட்டுவதோடு, தி.மு.க.,வை வழிநடத்தும் தகுதி ஸ்டாலினுக்கு இருப்பதாகவே சொல்வார். தி.மு.க.,வை விமர்சித்தாலும் பரவாயில்லை; ஸ்டாலினை துாக்கிப் பிடிக்கின்றனர் என்பதாலேயே அவ்விழாவுக்கு சபரீஷனை, ஸ்டாலின் குடும்பத்தினர் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
- நமது சிறப்பு நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை: