புதன், 27 ஆகஸ்ட், 2014

விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம்: குற்ற பத்திரிகை

ஸ்ரீபெரும்புதூர்: மவுலிவாக்கம், 11 மாடி கட்டட வழக்கில் தொடர்புடைய, எட்டு பேர் மீது, சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார், நேற்று முன்தினம், ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். கட்டட விபத்திற்கு, விதிமீறல்கள் தான் காரணம் என, விசாரணைகுழுவினர் தெரிவித்துள்ளனர்.


சென்னை, மவுலிவாக்கத்தில், கடந்த ஜூன் மாதம், 28ம் தேதி, 11 மாடி அடுக்குமாடி கட்டடம், இடிந்து விழுந்தது. இதில், 61 பேர், உடல் நசுங்கி இறந்தனர். 27 பேர், காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த, குன்றத்தூர் போலீசார், கட்டட உரிமையாளர் மனோகரன், அவரது மகன் முத்து காமாட்சி, பொறியாளர்கள் சங்கர் ராமகிருஷ்ணன், துரைசிங்கம், கட்டட வரைபடம் தயாரித்த வெங்கட சுப்ரமணியம், கட்டட கலை நிபுணர் விஜய் பர்கோத்ரா ஆகிய ஆறு பேரை, விபத்து நடந்த அன்று கைது செய்தனர்.இதன் பின், இவ்வழக்கை விசாரிக்க, தமிழக அரசு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தது. அக்குழுவினர், கட்டட உரிமையாளரின் உறவினரும், பங்குதாரரான பாலகுருசாமி, பொறியாளர் கார்த்திக் என, இரண்டு பேரை கைது செய்தனர். அனைவரும், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கை, சிறப்புபுலனாய்வுக் குழு போலீசார், விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், 400 பக்கங்கள் கொண்ட, குற்றப் பத்திரிகையை, சிறப்பு புலனாய்வு குழு போலீசார், நேற்று முன்தினம், ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் இடம், தாக்கல் செய்தனர்.இந்த வழக்கில், உயிருடன் மீட்கப்பட்ட, 27 பேர் உட்பட, 340 பேர், சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.கட்டட தொழில்நுட்ப, சிறப்பு வல்லுனர்கள் கருத்துருக்கள், இணைக்கப்பட்டுள்ளன.சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார், கட்டுமான நிறுவனம் எந்தெந்த வகையில், அரசு விதிகளை மீறி செயல்பட்டு உள்ளது என்ற, கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இதில், சி.எம்.டி.எ., அனுமதி வழங்கிய வரைபடத்தை மாற்றியதும், அனுமதி பெற்ற பரப்பளவுக்கும் அதிகமான பரப்பளவில் கட்டுமானப் பணிகள் நடந்து உள்ளதையும், தெரியப்படுத்தி உள்ளனர்.கட்டுமானப் பணிக்கு பயன்படுத்திய ஜல்லி, சிமென்ட், இரும்பு கம்பிகளை ஆய்வு செய்து, தொழில்நுட்ப வல்லுனர்களின் அறிக்கையையும் இணைத்து உள்ளனர். கட்டடம் கட்டப்பட்ட இடத்தில் மண் பரிசோதனை அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.குற்றம்சாட்டப்பட்ட எட்டு பேருக்கும், வரும் செப்., 3ம் தேதி, காவல் நீட்டிப்புக்கு வரும்போது, நகல் வழங்கப்படும் என, நீதித்துறையினர் தெரிவித்தனர். dinamalar.com

கருத்துகள் இல்லை: