திங்கள், 25 ஆகஸ்ட், 2014

Karnataka: பாஜக கோட்டையான பெல்லாரியில் காங்கிரஸ் வெற்றி

கர்நாடகா இடைத்தேர்தலில், பாரதீய ஜனதா கட்சியின் கோட்டையாக திகழ்ந்த பெல்லாரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் முதல்–மந்திரி எடியூரப்பா, ஸ்ரீராமலு, பிரகாஷ் ஹூக்கேரி ஆகியோர் வெற்றி பெற்று எம்.பி.க்கள் ஆனார்கள். இதையடுத்து, அவர்கள் 3 பேரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கர்நாடக சட்டசபைக்கு காலியாக இருந்த சிகாரிபுரா, பெல்லாரி புறநகர், சிக்கோடி ஆகிய 3 தொகுதிகளுக்கு கடந்த 21–ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது.


காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி போட்டியிடாமல் புறக்கணித்ததால் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவியது. சிகாரிபுரா, பெல்லாரி புறநகர் தொகுதிகள் பா.ஜனதாவின் வசம் இருந்தன. பா.ஜனதாவின் கோட்டையாக விளங்கிய 2 தொகுதிகளையும் தக்க வைத்துக்கொள்ள மீண்டும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில் பா.ஜனதா இருந்தது. இந்நிலையில் பெல்லாரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பெல்லாரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கோபால கிருஷ்ணன் 33,144 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சிகாரிபுரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள  முன்னாள் முதல்–மந்திரி எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா முன்னிலையில் உள்ளார்.

சிக்கோடி தொகுதி காங்கிரஸ் வசம் இருப்பதால், அங்கு எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்று காங்கிரஸ் கணக்கு போட்டது. அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.dailythanthi,in

கருத்துகள் இல்லை: