புதன், 25 ஜூன், 2014

நீதிமன்றத்தில் போராட்டம் தாய் தேவையில்லை; தந்தைதான் வேண்டும் : தீர்ப்பை மாற்றி எழுதினார் நீதிபதி

பெல்லாரி: தாயுடன் செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் பிறப்பித்த  உத்தரவை ஏற்காமல் குழந்தைகள் தந்தையை பிடித்து கொண்டதை  பார்த்த நீதிபதி மனம் நெகிழ்ந்தார். கர்நாடகாவில் பெல்லாரி மாவட்டம், பசவதுர்கா கிராமத்தை சேர்ந்த  தேவேந்திரப்பாவுக்கும், ரத்னம்மா என்பவருக்கும் 23 ஆண்டுகளுக்கு  முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண், 2 பெண் பிள்ளைகள்  உள்ளனர். 13 ஆண்டுகளுக்கு முன் தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து  வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். நீதிமன்றம் மூலம்  விவாகரத்தும் வழங்கப்பட்டது. நான்கு பிள்ளைகளையும் தேவேந்திரப்பா  வளர்த்தார். இதனிடையே, தனது 2 பெண் பிள்ளைகளை தன்னிடம்  ஒப்படைக்கும்படி ரத்னம்மா, பெல்லாரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார்.


அதை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், கடந்த மாதம்  தேவேந்திரப்பாவை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டது. அவர்  ஆஜராகாததால், அவரை கைது செய்து சிறையில் அடைக்கும்படி  உத்தரவிட்டது. அதன்படி, 10 நாட்களுக்கு முன் தேவேந்திரப்பா கைது  செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு நேற்று நீதிபதி  ரகுநாத் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண் பிள்ளைகள்  இருவரும் தாயுடன் செல்ல வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.  இந்த தீர்ப்பை கேட்டதும் பிள்ளை நீதிமன்றத்தில் கதறி, புரண்டு  அழுதனர். ‘தாயுடன் செல்ல மாட்டோம். இத்தனை காலம் எங்களை  வளர்த்துவரும் தந்தையை விட்டு பிரிய மாட்டோம்’ என்று அழுதனர்.  பெண் பிள்ளைகளின் கண்ணீரும், அழுகையும் நீதிபதியை மனம் மாற்றம்  செய்தது.

தாயுடன் செல்லும்படி அவர் அறிவுறுத்தியும், ‘எங்கள் நலனை கருத்தில்  கொள்ளால் பிரிந்து சென்ற தாய்க்கு இப்போது மட்டும் எப்படி பாசம்  வந்தது? தாயை காட்டிலும் அதிகம் அன்பு காட்டி வளர்த்து வரும்  தந்தை எங்களுக்கு போதும்’ என்று 4 பிள்ளைகளும் பிடிவாதமாக  இருந்தனர். அவர்களின் உறுதியை பார்த்து நெகிழ்ந்துபோன நீதிபதி,  தனது தீர்ப்பை மாற்றினார். ‘தந்தை மீது பிள்ளைகள் இவ்வளவு பாசம்  வைத்திருக்கும்போது அவர்களை பிரிக்க எனக்கு மனமில்லை’ என்று  கூறியதுடன், 10 நாட்களாக சிறையில் உள்ள தேவேந்திரப்பாவை  விடுதலை செய்தும் உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து நீதிமன்றம் வந்த தேவேந்திரப்பாவை நான்கு  பிள்ளைகளும் அவரின் தோளை பற்றி கொண்டு, நாங்கள் வாழ்ந் தால்  உங்களோடுதான் வாழ்வோம். இல்லையென் றால் செத்து போவோம்  என்று கண்ணீர் மல்க கூறினர். பிள்ளைகளின் அன்பும், அழுகையும்  தேவேந்திரப்பாவை மட்டுமில்லாமல், நீதிமன்ற அறையில்  இருந்தவர்களை யும் நெகிழ வைத்தது. dinakaran,com

கருத்துகள் இல்லை: