வெள்ளி, 27 ஜூன், 2014

மதிமாறன் : பெண் தெய்வ விக்கிரகங்களை ஆண்கள் தொட அனுமதிக்க கூடாது ! அம்மன் கோவில்களில் பெண்கள் மட்டுமே அர்ச்சகராக வேண்டும்

பெண்களுக்கான ஒதுக்கீட்டை 100 சதவீதம் செய்ய வேண்டும். அதை கோயில்களில் இருந்து துவங்க வேண்டும். எல்லாக் கோயில்களிலும் பெண்கள் அர்ச்சகராக வேண்டும். குறைந்த பட்சம் பெண் தெய்வங்கள் உள்ள கோயில்களிலாவது, பெண்களை மட்டும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும்
மைதிலி யாருடனும் எப்போதும் பொறுப்போடு தான் பேசுவாள். அந்த பொறுப்பில் அன்பும் அக்கறையும் நிரம்பி வழியும். சில நேரங்களில் அந்த அன்பின் வடிவம் கோபமாகவும் இருக்கும். அந்தக் கோபம் நன்மையே செய்யும்.
என்னால் அவளுக்கு ஆன உதவியை விட அவளால் எனக்கான உதவிகளே அதிகம்.
அவளை எனக்கு 20 ஆண்டுகளாக தெரியும். நேரில் பேசிக் கொள்ளும்போது நீ, வா, போ என்றும் 3 வது நபர்களிடம் பேசும்போது
என்னை அவள் ‘அவன்’ என்பதும் அவளை நான் இதுபோல் ‘அவள்’ என்று சொல்வதும் தோழமையின் பொருட்டே.
இப்படி தனி மனித உணர்வுகளில் மென்மையான, அன்பான, அக்கறையான மைதிலி; சமூக விசயங்களில் அப்படியே நேர் எதிர்.
அவளின் பெண்ணியக் கருத்துக்களைத் தவிர வேறு எதுவும் அவளுக்கும் எனக்கும் ஒத்துப் போனதே இல்லை. அதிலும் சில நேரங்களில் பிரச்சினை தான்.

அதுவும் இட ஒதுக்கீடு என்றால் அவளுக்குக் கொலைவெறியே வந்துவிடும். இந்த நாட்டை கெடுப்பதே அதுதான். ஜாதி யை ஒழிப்பதற்கு அது தான் தடையாக இருக்கிறது என்று கொந்தளிப்பாள். இத்தனைக்கும் அவள் ஜாதி மறுப்புத் திருமணத்தை தீவிரமாக ஆதரிப்பவள் தான்.
நானும் எவ்வளவோ விளக்கமெல்லாம் கொடுத்திருக்கிறேன். ஆனாலும் அவளின் முன் முடிவு, எப்போதோ முடிவான ஒன்று. குடும்ப சூழல் அவள் வளர்ந்த முறை அதற்குக் காரணம்.
இட ஒதுக்கீட்டினால் தகுதி, திறமை போய் விடும், போய் விட்டது என்று பொங்குகிற அவள் தான். இப்போதெல்லாம் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக பேசுகிறாள்.
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனே அமல் படுத்த வேண்டும். ஆணாதிக்க அரசுகள் அதை வேண்டுமென்றே கிடப்பில் போட்டு விடுகின்றன என்று கடுமையாக பேசுகிறாள்.
இதே நியாயம் தானே ஜாதி ரீதியான இட ஒதுக்கீட்டிற்கும் என்றோ பெண்களுக்கான ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றோலோ துவங்கி விடும் சண்டை.
சரி. உள்ஒதுக்கீடே வேண்டாம்.
பெண்களுக்கான ஒதுக்கீட்டை 100 சதவீதம் செய்ய வேண்டும். அதை கோயில்களில் இருந்து துவங்க வேண்டும். எல்லாக் கோயில்களிலும் பெண்கள் அர்ச்சகராக வேண்டும். குறைந்த பட்சம் பெண் தெய்வங்கள் உள்ள கோயில்களிலாவது, பெண்களை மட்டும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்று சொன்னால்;
குருக்களாக, அர்ச்சகர்களாக இருக்கிற ஆண்களைப் போல் செம கடுப்பாகிறாள் மைதிலி. mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை: