வியாழன், 21 நவம்பர், 2013

பார்ப்பனர் சாப்பிட்ட எச்சில் இலைகளில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணமாம்!

கருநாடக மாநிலத்தில் நடக்கும் காட்டுமிராண்டித்தனம்!

பெங்களூரூ, நவ. 20- கருநாடகாவில் அத்தேகுக்கே சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கேவலமான பிரார்த்தனை செய்வது வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது அங்கப்பிரதட்சணம் செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். இதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று மாநில முதலமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இது தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றதில் நிலுவையில் உள்ளது.

தட்சிண கருநாடக மாவட்டத்தில் அத்தேகுக்கே சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 3 நாட்கள் மாதே ஸ்நானா பிரார்த்தனை நடை பெறும். பார்ப்பனர்கள் சாப்பிட்டு வைத்த எச்சில் இலைமீது கீழ்தட்டு வகுப்பைச் சேர்ந்த பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்பது வழக்கத்தில் இருந்து வருகிறது. இவ்வாறு நேர்த்திக்கடன் செய்தால் அவர்கள் நினைத்தது நிறைவேறும் என்று நம்பப் படுகிறதாம்.
இந்தப் பிரார்த்தனை முறை கீழ்தட்டு மக்களை அவமதிப்பதாகும் என்று தட்சிண கருநாடக கல்லியா தாலுகாவைச் சேர்ந்த கருணாகர் என்னே மஜல், மங்களூரு தாலுகாவைச் சேர்ந்த ஜெயக்குமார் கிரேமத், கே.நாராயண செட்டி ஆகியோர் மாநில முதலமைச்சர் சித்தராமய்யாவிடம் மனு கொடுத் தனர். எச்சில் இலை மீது கீழ்தட்டு மக்கள் அங்கப் பிரதட்சணம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.
நீதிமன்றத்தில் வழக்கு
மதவழிபாட்டுத் தலங்களில் எல்லோரும் சமமே. இதில் பார்ப்பனர்கள், பார்ப்பனர் அல்லாதவர் என்ற பாகுபாடு கூடாது. ஆனால் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பார்ப்பனர்கள் சாப்பிட்டு தெருவில் போட்ட எச்சிலை மீது பார்ப்பனர் அல்லாத பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்று வலி யுறுத்தப்படுவது அவர்களை அவமானப்படுத்தும் செயலாகும். ஆகவே இதற்கு தடை விதிக்கப்பட்டே ஆக வேண்டும் என்று இந்த மனுவில் வலியுறுத்தி யுள்ளனர்.
இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாநில முதலமைச்சரின் அலுவலகம் உத்தரவிட்டது. ஆனால் இதுதொடர்பான எந்த உத்தரவும் தர வில்லை என்று கோவில் நிர்வாக அதிகாரி எம்.நாகராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தக் கேவலமான பிரார்த்தனையை மாற்றி அமைக்கக்கோரி கருநாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஒருசில பக்தர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கோவிலில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த நடைமுறையில் மாற்றம் செய்வதற்கு தடை விதித்தது. (என்ன கேவலம்!) இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காவல்துறையின் பாதுகாப்புடன் வழக்கம்போல் இந்தக் கேவலமான பிரார்த்தனை நடத்தப்பட்ட தாம். இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

கருத்துகள் இல்லை: