புதன், 20 நவம்பர், 2013

ரூ.3 கோடி முறைகேடு! கெஜ்ரிவாலை கண்டித்த ஹசாரே வீடியோவால் பரபரப்பு!


கடந்த ஆண்டு ராம்லீலா மைதானத்தில் நடந்த கூட்டத்திற்காக வசூலிக்கப்பட்ட தொகையில் 3 கோடி ரூபாய் அளவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் முறைகேடு செய்துள்ளதாக வெளியாகி உள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிரான இயக்கத்திலிருந்து பிரிந்து ஆம் ஆத்மி கட்சி என்ற அரசியல் கட்சி தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், அன்னா ஹசாரேவுக்கும் தற்போது மோதல் வெடித்துள்ளது. தனது பெயரை அரவிந்த் கெஜ்ரிவால் பயன்படுத்தக் கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்ததுடன், தனது பெயரில் பணம் திரட்டப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவால் முறைகேடு குறித்து அன்னா ஹாசரே அப்போதே கண்டித்ததாக புதிய வீடியோ ஆதாரம் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த தொகை அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவாளர்களால் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது குறித்து அன்னா ஹசாரே அதிருப்தி தெரிவித்த காட்சியும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ அரவிந்த் கெஜ்ரிவாலை களங்கம் செய்யும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 11 மாதங்களாக இந்த வீடியோவை வெளியிடாமல், டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு 15 நாட்களே இருக்கும் நேரத்தில் வெளியிட என்ன காரணம் என்றும்கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் எங்கள் வெற்றியை தடுக்க அரசியல் கட்சிகள் செய்யும் சதி என்று ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மீம் அப்சல் கூறுகையில், அரசியல் கட்சி தொடங்க தமது பெயரில் வெளிநாடுகளில் இருந்து பணம் திரட்டியதாக ஆம் ஆத்மி கட்சி மீது அன்னா ஹசாரே குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும். அரசியல் கட்சிகள் ஊழலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியவர்கள் தற்போது ஒருவருக்கு ஒருவர் குறை கூறிக்கொள்வது வேடிக்கையாக உள்ளது. ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறுபவர்கள், சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை: