infolanka.com/org/slvs/adikaram. Dr E W Adikaram had already become an admirer of Mahatma Gandhi, and joined the Navajeevana movement of Mr. Jayawardhana of Wellampitiya, a Gandhian who changed his name to Jayaramdas and advocated the wearing of home-spun khadi and the consumption of country rice in place of imported foods that were then fashionable among the middle class people of the time.
gandhitoday.in ஜெயராம்தாஸ் ஜான் ஸ்டீபன் பெரேரா ஜெயவர்தனே. சுருக்கமாக ஜெ.பி.எஸ் ஜெயவர்தனே எனும் இயற்பெயர் கொண்ட ஜெயராம்தாஸ் ஜெயவர்தனே. இவரைப் பற்றி அறிந்துகொண்டது அண்மையில் நான் வாசித்த Gandhi and Lanka எனும் நூல் வழியாகத்தான். இவரைப் பற்றி அறிந்து கொண்டதும் இப்படியும் சிலர் ரத்தமும் சதையுமாக வாழ்ந்தார்களா என்ற பிரமிப்பு எனக்கு ஏற்பட்டது. ஜெயராம்தாஸ் நிஜம், புனைகதையின் பாத்திரமல்ல. இவரது வாழ்க்கை குறிப்பை கண்டு எனக்கேற்பட்ட வியப்பையும் பெருமிதத்தையும் பதிவு செய்தாகவேண்டியது எனது கடமை என்று நம்புகிறேன். சர்வோதயா விஸ்வ லேகா இலங்கையிலிருந்து தொகுத்து வெளியிட்டிருக்கும் Gandhi and Lanka என்ற நூலின் மின்னூல் வடிவை நண்பர் இராட்டை பகிர்ந்து கொண்டிருந்தார். 1905 தொடங்கி 1948 வரையிலான காலகட்டத்தில் காந்தி இலங்கை குறித்து எழுதிய/ பேசிய கருத்துகளின் தொகுப்பு நூல் இது. 1927-ஆம் ஆண்டில் சிலகாலம் காந்தி இலங்கையின் வெவ்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டார். நவம்பர் 15, 1927 அன்று கொழும்பு நாலந்தா வித்யாலயாவில் உரையாற்றும் அத்தியாயத்தின் அடிக்குறிப்பில் ஜெயவர்தனே பற்றிய விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அக்குறிப்பை அடிப்படையாகக் கொண்டே இக்கட்டுரை எழுதப்படுகிறது.
1886ஆம் ஆண்டில் பிறந்தவர் ஜெயவர்தனே. இலங்கையின் மேற்கு பகுதியில் கொழும்புக்கு அருகில் உள்ள வெல்லம்பிட்டிய (wellampitiya) மாகாணப் பகுதியில் பிரம்மாண்டமான பங்களாவில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த ஜெயவர்தனே தன் காலத்தில் அப்பகுதியின் மிகப்பெரிய செல்வந்தராகத் திகழ்ந்தவர் என்று இலங்கையின் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையில் குணதாச லியனாயகே பதிவு செய்கிறார்.
உயர்வகை வைன், விஸ்கி என பல மது வகைகள் சரளமாகப் புழங்கிய இல்லம் அவருடையது. இலங்கையின் அந்நாளைய கவர்னர் எங்கு சூட் தைத்துக் கொள்வாரோ அதே தையல்காரரிடம்தான் இவரும் தைத்துகொள்வாராம். வெளிநாடுகளில் இருந்து புத்தகங்களைத் தருவித்து வாசிக்கக்கூடிய வசதி வாய்ப்பு அமைந்தவர் என்பதும்கூட தேர்ந்த படிப்பாளியாக அவர் அறியப்பட காரணமாயிருந்திருக்கலாம்.
ஜெயவர்தனே, ‘ஆப்சர்வர்’ ஆங்கில செய்தி இதழின் ஆசிரியர் குழுமத்தில் ஒருவராக சில காலம் பணிபுரிந்தார். அதன் பின்னர் ரயில்வே விரிவாக்கத் துறையில் உயர் பதவிகளை வகித்தார். இப்பணிகளின் வருவாயை நம்பி அவருடைய வாழ்க்கையோ அல்லது நிதிநிலையோ இல்லை. எனினும், ஒரு சமூக அந்தஸ்து வேண்டியே அவர் இப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இவ்வகை பணிகள் மூலம் ஈட்டிய பொருள் அனைத்தையும் நண்பர்களுக்காக எவ்வித மனத்தடையுமின்றி வாரியிறைக்க அவரால் முடிந்தது.
இப்படிப்பட்ட ஊதாரி செல்வந்தரான ஜெயவர்தனேதான் காந்தியின் இலங்கை பயணத்தின்போது உடனிருந்து அவருடைய உரைகளை சிங்களத்தில் மொழியாக்கம் செய்தது.
புனைவு எட்ட முடியாத தொலைவுகளில் வாழ்க்கை இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு தன் முழு ஆற்றலையும் திரட்டிச் சென்று தன்னை இருத்திக்கொண்ட மனிதர்களின் கதைகள் எப்போதும் சுவாரசியமானவை. ஜெயவர்த்தனேயின் கதையும் அத்தகையதே. அசுவாரசியமான, அர்த்தமற்ற, நிறமிழந்த அன்றாட நிகழ்வுகளை மட்டுமே வாழ்வாக அறிந்தவர்கள்தாம் நம்மில் பெரும்பாலானவர்கள். அலுப்புடன் ஒரே வேகத்தில் கரை தொட்டு மீளும் அலைகளின்மீது அமர்ந்து தொலைதூரத்து இலக்கை பற்றிய கனவுகளுடன், அங்கு நம்மைக் கொண்டு சேர்க்கும் வலிமை மிகுந்த சூறைக்காற்றுக்கு காத்துக் கொண்டிருக்க மட்டுமே நம்மால் இயலும். நம்மைச் உடைத்து சிதைத்து கரை சேர்க்கும் புயலொன்று வரும்போது, மனம் உடைவதற்கு அஞ்சி ஓரத்தில் முடங்கிவிடும். வெகு சிலரே தம் வாழ்க்கையை தாம் விரும்பிய இலக்கிற்காக தரத் துணிந்தவர்கள். நாம் வாசிக்கும் வரலாறு அத்தகைய மனிதர்களால் நிறைந்ததே.
ஜெயவர்தனேவின் வாசிப்புப் பழக்கம் அவருக்கு காந்தியை அறிமுகம் செய்திருக்கிறது. 1920களின் மத்தியில் அங்குமிங்கும் காந்தியின் கருத்துக்களை வாசிக்கத் தொடங்கிய ஜெயவர்தனே காந்தியைத் தேடித் தேடி வாசிக்கத் தொடங்கினார். காந்தி எழுதிய, காந்தி தொடர்பாக எழுதப்பட்ட அத்தனை நூல்களையும் வாசித்து முடித்தார். மெல்ல காந்திய வாழ்க்கை முறைக்கு தன்னைப் பழக்கப் படுத்திக்கொள்ள தொடங்கினார். புலால் மறுத்தல், மது பழக்கத்தை கைவிடுதல் என அதுவரை அவருடைய அன்றாட வாழ்வின் பிரிக்க முடியாத பகுதிகளாக இருந்த ஆடம்பரங்களை உதறி மேலெழுந்தார். அதுவரை அவருடைய அடையாளமாக திகழ்ந்த ஐரோப்பிய உடைகளைக் களைந்து எளிய வெள்ளுடைக்கு மாறினார். காந்தி அவரை ஆக்கிரமித்து மெல்ல அவரை தமதாக்கிக் கொண்டிருந்தார். இத்தகைய மாற்றங்களைக் கண்டு ஜெயவர்த்தனேவின் சுற்றமும் நட்பும் குழம்பியதில் வியப்பேதும் இல்லை. அவருக்கு மனப் பிறழ்வு ஏற்பட்டதாகவே அவர்கள் எண்ணத் தொடங்கினர்.
ஜெயவர்தனேவின் வாழ்க்கைமுறை மாற்றம் இத்துடன் நின்றுவிடவில்லை. ஆழத்தில் காந்தியை சந்தித்தாக வேண்டும் எனும் வேட்கை பெருகி அவரை ஆட்கொள்ளத் துவங்கியது. இந்தியாவிற்கே சென்று காந்தியை சந்தித்தாக வேண்டும், காந்திய கொள்கைகளை இலங்கையிலும் பரவலாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே அவருடைய கனவாக இருந்தது. உந்துதலுக்கு அடிபணிந்து 1925 ஆம் ஆண்டில் ஜெயவர்தனே அவருடைய மனைவியையும் ஐந்து குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு காந்தியைக் காண இந்தியாவிற்கு பயணமானார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய தலைவர்களை உருவாக்கிய சபர்மதி ஆசிரமத்தில் காந்தி அக்காலகட்டத்தில் வாழ்ந்து வந்தார். நெரிசலான வணிக மையமான அகமதாபாத்தில் இருந்து சற்று தொலைவில், சபர்மதி ஆற்றின் மறுகரையில் அமைதியான சூழலில் அமைந்திருந்த ஆசிரமம் அது. முப்பது நபர்களுடன் தொடங்கப்பட்ட சின்னஞ்சிறிய ஆசிரமம், மெல்ல வளர்ந்து 230 நபர்களின் வாழிடமாக மாறியிருந்தது.
மரங்களின் ஊடாக வெள்ளையடிக்கப்பட்ட குட்டை சுவர்கள் கொண்ட குடில்கள் எழுந்து நின்ற அங்கு, தொலை தேசத்திலிருந்து குடும்பத்துடன் வந்து சேர்ந்த ஜெயவர்தனே ஒன்றும் மிகையான உற்சாகத்துடன் வரவேற்கப்படவில்லை. ஆசிரமத்தில் காந்தியை சந்தித்து, காந்திய வாழ்க்கை முறையை அங்கு சில காலம் குடும்பத்துடன் தங்கியிருந்து முழுவதுமாக அறிந்து கொள்ள வேண்டும் எனும் தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார் ஜெயவர்தனே.
ஜெயவர்தனேவின் செழிப்பான பின்புலத்தையும் ஊதாரியான வாழ்க்கை முறையையும் பற்றி ஓரளவுக்கு அறிந்து கொண்ட காந்தி, ஜெயவர்தனே ஏதோ உந்துதலில் வழி தவறி தன்னை நோக்கி வந்துவிட்டதாகக் கருதியிருக்கக்கூடும். சபர்மதி ஆசிரமத்தின் கடுமையான ஒழுக்க விதிகளை அவர்களால் பின்பற்ற முடியும் என அவருக்கு தோன்றவில்லை.
காந்திய ஆசிரம வாழ்க்கை என்பது அத்தனை எளிதானதல்ல. அனைவருக்கும் உரியதும் அல்ல. கடுமையான ஒழுக்க விதிகள் அங்கு பின்பற்றப்பட்டன. அருண் காந்தி ஒரு கட்டுரையில் விரிவாக அவர் கண்ட ஆசிரம வாழ்வை விவரிக்கிறார். காந்தி, தான் உருவகித்த லட்சிய சமூகத்தின் மாதிரியாக தன் ஆசிரமத்தை உருவாக்க முயன்று அதில் பெருமளவு வெற்றியும் கண்டார்.
ஆசிரமத்து வாழ்க்கை கடினமானதாக இருந்தாலும், சமூகமும் இதே அளவு கட்டுக்கோப்பாக இருந்தே ஆகவேண்டும் என அவர் எதிர்பார்க்கவில்லை. காந்தி ஆசிரமத்தை ஓர் பயிற்சி மையமாகவே எண்ணினார். அங்கு பயிற்றுவிக்கப்பட்ட சமூக பணியாளர்கள் வெளியில் வந்து மேம்பட்ட எதிர்கால சமூகத்தை உருவாக்க முனைய வேண்டும் என்பதே அவருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. தம்மை பிறரிலும் பிறரை தம்மிலும் காணும் ஒருமை கைவர வேண்டும் என்பதே அவருடைய கனவு,என்று எழுதுகிறார் அருண் காந்தி.
ஆசிரமவாசிகள் சாதி சமய பாகுபாடின்றி ஒன்றாக இணைந்து சமைத்து அமர்ந்து உண்டு வாழ்ந்தனர். சுழற்சி முறையில் ஆசிரமவாசிகளின் பொதுக் கழிவறையை சுத்தம் செய்தல் உட்பட அனைத்து பணிகளும் அனைவருக்கும் வழங்கப்பட்டன. எத்தனையோ பேர் அன்றாடம் இப்படி காந்தியை சந்தித்துவிட்டு ஆசிரம வாழ்வின் நெறிமுறைகளுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சில நாட்களிலேயே காணாமல் போன வரலாறு உண்டு. காந்தி ஜெயவர்தனேவை அப்படிப்பட்ட ஒரு மனிதராகவே கருதியிருக்கக்கூடும்.
இந்த ஆரம்ப சூரத்தனமும், ஆர்வமும் கொஞ்ச காலத்தில் வடிந்துவிடும் என்ற எண்ணத்தில் காந்தி, “நீங்கள் அவசரப்பட்டு அகலக்கால் வைத்துவிட்டீர்கள், உங்கள் குடும்பத்தை அழைத்துக் கொண்டு உடனே ஊர் திரும்புங்கள்” என்று எள்ளல் தொனியில் அறிவுரைகூறி அனுப்பி வைக்க முயன்றிருக்கிறார். அபார மன உறுதி கொண்ட ஜெயவர்தனே காந்தியின் இந்த அறிவுரைக்கு செவிமடுக்கவில்லை. “நான் காந்திய அடிப்படைகளை கற்றறியாமல் இங்கிருந்து செல்ல மாட்டேன்” என்று உறுதியாக தன் நிலைப்பாட்டில் நின்றார்.
ஆசிரமத்தில் தங்கியிருக்க அனுமதி அளிக்கப்படாத காரணத்தால், கடுமையான வட இந்திய குளிரையும் பொருட்படுத்தாமல் ஓரிரவு முழுவதும் கம்பளியை போர்த்துக் கொண்டு குடும்பத்துடன் ஒரு புளியமரத்தடியில் கழித்தார். விடிந்த பின்னர் முந்தைய இரவு நடந்த நிகழ்வுகளை அறிந்து கொண்ட காந்தியின் மனம் ஜெயவர்தனேவின் நேர்மையையும் திண்மையையும் கண்டு வியக்கிறது. அவருடைய குடிலுக்கு அவர்களை அழைத்து உரையாடுகிறார்.
விரிவாக அவர்களுடன் உரையாடிய காந்திக்கு, மாற்றங்கள் பெயரிலிருந்து தொடங்கும் போலும். ஜான் ஸ்டீபன் பெரேரா ஜெயவர்தனே ஜெயராம்தாஸ், எளிய ஜெயவர்தனேவாக மாறினார். அவருடைய மனைவி மார்கரெட் ஜெயவர்தனே மங்களதேவி ஜெயவர்தனேவானார். அவர்களுடைய மூத்த மகன் ஹெர்மன் ஜெயவர்தனே ஹரிதாஸ் ஜெயவர்தனேவானார். அதற்கு பின்னர் அவர்கள் குடும்பத்திற்கு என்று ஒரு குடிலை ஒதுக்கினார் காந்தி. ஐந்து குழந்தைகளில் கடைசி இரண்டு குழந்தைகள் மட்டும் வயதில் மிக இளையவர்களாக இருந்தனர், அவர்களைத்தவிர மீதமிருந்த குழந்தைகள் அனைவருமே ஆர்வத்துடன் வெவ்வேறு ஆசிரம பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். ஆசிரம செயல்பாடுகளைத் தவிர்த்து அவர்கள் பருத்தி சாகுபடி செய்து, நூல் நூற்று, துணி நெய்தாக வேண்டும். குறுகிய காலத்தில் மூத்த சகோதரர்கள் இருவரும் நூல் நூற்பதிலும், துணி நெய்வதிலும் மிகுந்த தேர்ச்சி அடைந்தனர்.
ஆறு மாத ஆசிரம வாழ்விற்குப் பிறகு ஜெயராம்தாஸ் குடும்பத்துடன் வெல்லம்பிட்டியவிற்கு திரும்பினார். ஊர் திரும்பியவுடன் முதல் காரியமாக அவர் செய்தது இதுதான்- எளிமையான வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான அடிப்படை பொருட்களை மட்டும் வைத்துக் கொண்டு, அத்தனை ஆண்டுகளாக சேர்த்து வைத்த மதிப்புமிக்க பொருட்கள் அனைத்தையும் தன் வீட்டிலிருந்து வீசி எறிந்தார். எவருக்கு அவை தேவையோ அவற்றை அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும் என்பதே அவருடைய முடிவாக இருந்தது. அவருடைய இல்லத்தையே ‘உத்தியோக மந்திரா’ என்று பெயர் மாற்றி காந்திய ஆசிரமமாக மாற்றினார். தோட்டம் முழுவதும் பருத்தி நடப்பட்டது. நூல் நூற்பதும், நெசவும் முழுமூச்சுடன் நடைபெற்றது.
மெல்ல ஜெயராம்தாசின் அமைப்பு குறித்த தகவல் பரவலாகியது. டாக்டர்.அதிகாரம் http://www.dailynews.lk/2005/10/21/fea06.htm என்று பிற்காலங்களில் அறியப்பட்ட பிரபல இலங்கையின் பௌத்த கல்வியாளர், சமூக சிந்தனையாளர், ஜெயராம்தாசின் அமைப்பிற்குள் தம்மை இணைத்துக் கொண்டார்.
எட்வர்ட் வினிஃப்ரெட் அதிகாரம் எனும் இயற்பெயர் கொண்ட டாக்டர். அதிகாரம், வீரசேன அதிகாரம் என்று ஜெயராம்தாஸால் பெயர் சூட்டப்பட்டார். கடுமையான தேரவாத பௌத்தர் என்று அறியப்பட்ட டாக்டர். அதிகாரம் லண்டன் சென்று கல்வி கற்று, ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்று இலங்கை திரும்பியவர். ஆனந்த சாஸ்திரலயாவில் ஆசிரியராக இணைந்தவர். தலைமை ஆசிரியராக பணியாற்றியவர். ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு இறுக்கமான மத அமைப்புகள் மீது நம்பிக்கை இழந்து, தலைமை ஆசிரியர் பணியைத் துறந்து இந்தியாவிற்கு வந்து ரமணர், ஜெ.கே, இமாலயத்து யோகிகள் எனச் சுற்றித் திரிந்து தனக்கான ஆன்மீக தேடலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட ஓர் ஆளுமை. பல்வேறு கல்வி அமைப்புகளை இலங்கையில் உருவாக்கியவர். மூன்று முக்கியமான அமைப்புகளை துவக்கியவர் - இலங்கையில் சைவ உணவு கழகம், இளம் சிந்தனையாளர்கள் அமைப்பு, கிருஷ்ணமூர்த்தி அமைப்பு ஆகியவற்றை தன் காலத்தில் தொடங்கி நிர்வகித்தவர். ஏதோ ஒருவகையில் காந்தியின் தாக்கம் அவருடைய வாழ்நாள் முழுவதும் நீடித்தது.
ஜெயராம்தாசுடன் இணைந்து கொண்ட மற்றொருவர் போதிபல வைத்யசேகரா. பிற்காலங்களில் இலங்கையின் இடது சாரி கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டவர். பௌத்த அறிஞராக திகழ்ந்த வால்போல ராகுலா, அமெரிக்க பல்கலைகழகத்தில் பேராசிரியரான முதல் பௌத்த அறிஞர் எனும் பெருமை இவரையே சாரும்.
ஜெயராம்தாஸ் ராகுலா மற்றும் அதிகாரத்துடன் தொடர்ந்து உரையாடி வந்தார். தங்கள் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு பத்திரிக்கை அவசியம் என ஜெயராம்தாஸ் அவர்களிடம் வலியுறுத்தி வந்தார். ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து போராட மக்களின் குரலாக ஒலிக்கும் ஒரு பத்திரிக்கையை உருவாக்க வேண்டும் என மக்களின் உதவியை நாடினார். மக்களிடமிருந்து வசூல் செய்த பணத்தைக் கொண்டு அச்சு யந்திரத்தை வாங்கி ஒரு அச்சுக்கூடத்தை நிறுவினார்.
தங்களது புதிய முயற்சியைப்பற்றி காந்திக்கு எழுதினார் ஜெயராம்தாஸ். பதிப்பகத்திற்கு நவஜீவன என்றும், பத்திரிக்கைக்கு நவஜீவனிய என்றும் பெயரிட்டு பதில் எழுதினார் காந்தி. ஜெயராம்தாஸ் அதன் முதன்மை ஆசிரியராக திகழ்ந்தார். ராகுல தேராவும், அதிகாரமும் அவருக்கு உதவியாக பணியாற்றினர்.
காந்தி 1927 ஆம் ஆண்டில் ஒரு பெரும்குழுவுடன் இலங்கைக்கு பயணமானார். காந்தி இலங்கையில் அவருக்கு நெருக்கமான இலங்கை தமிழர் வீட்டில்தான் தங்கினார். ராஜாஜி உட்பட பல தேசிய சுதந்திர போராட்ட தலைவர்கள் அந்த குழுவில் இடம் பெற்றிருந்தனர். குழுவின் செய்தி தொடர்பாளராகவும், அவர்களுடைய பயண திட்டத்தை நிர்வகிப்பவராகவும் ஜெயராம்தாஸ் பணியாற்றினார். காந்தியை சந்திக்க வேண்டுமென்றால் முதலில் அவர்கள் தொடர்பு கொள்ள வேண்டியது ஜெயராம்தாஸைதான்.
இலங்கையில் 1934ஆம் ஆண்டு கடுமையான வறட்சி ஏற்பட்டது. நெல் சாகுபடி தண்ணீர் பற்றாக்குறையால் நின்றுபோனது. தென்னம்பிள்ளைகள் எல்லாம் காய்ந்து சுக்கலாகி உடைந்து போயின. ஏற்கெனவே பரவியிருந்த மலேரியா கொள்ளை நோயாக உருமாறியது. பஞ்சம் காரணமாக நிலவிய ஊட்டசத்து குறைப்பாடு நோய் எதிர்ப்பு சக்தியை வலுவிழக்கச் செய்தது. பட்டினியில் வாடிய குழந்தைகளையும் முதியவர்களையும் நோய்கள எளிதில் பீடித்து மரண எண்ணிக்கையைப் பெருக்கின. இலங்கையில் கொத்து கொத்தாக உயிர்களைப் பறித்துச் சென்ற 1934-35 மலேரியா நோய் பற்றிய சித்திரம் உண்மையில் வாசிக்கையைக் குறித்த பீதியேற்படுத்துகிறது.
கிராமம் முழுவதும் சுரத்தால் பீடிக்கப்பட்டு எவருடைய கண்காணிப்பும் இன்றி, ஆதரவும் இன்றி மக்கள் வாடினர். தூரத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு பெரும்பாலானவர்களால் செல்ல இயலவில்லை. செல்லக்கூடிய குடும்ப உறுப்பினரும் பலமணிநேரம் வெயிலில் காத்து நின்று சிறிய புட்டியில் க்வினைன் வாங்கி வந்து குடும்பத்துக்கே பகிர்ந்தளிப்பார். கேகேல்லா பகுதியில் பிறந்த குழந்தைகளில் ஐம்பது சதவிகிதம்கூட உயிர் பிழைக்கவில்லை. ஆங்கிலேய அரசாங்கம் தொடக்கத்தில் இந்த தொற்று நோயை சரிவர கவனிக்கவில்லை. 1935 ஆம் ஆண்டின் மத்தியில் மலேரியவின் மிக மோசமான வகையான மூளை மலேரியா பரவி பல உயிர்களைப் பறித்தது. அரசாம்கத்தினர் இதை ஒரு வித அலட்சிய பாவத்துடன் அணுகினர். அதுவே மரண எண்ணிக்கையை பலமடங்காக உயர்த்தியது. மருத்துவ சேவைகளும் ஏனோதானோவென்று இருந்தன. இதர கொள்ளை நோய்களான பிளேக், காலரா போல அல்லாது மலேரியா கிராமப்புறங்களை அதிகம் பாதித்த காரணத்தினால் இலங்கை அரசாங்கமும் ஆங்கிலேயே அரசாங்கமும், அந்நாளைய ஊடகமும் துவக்கத்தில் பெரிதாக இதைப் பொருட்படுத்தவில்லை.
கேகெலா மற்றும் குருநேகளா பகுதிகள்தான் மலேரியாவின் மையப் புள்ளியாக திகழ்ந்தன. மக்கள் கொத்துகொத்தாக மரணமடைவதை அறிந்து ஜெயராம்தாஸ் கவலையுற்றார். அவருடைய ஆதரவாளர்களுடன் கேகேல்லா பகுதிக்கு சென்று தற்காலிக மருத்துவ சேவை மையங்களைத் திறந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று உறுதி கொண்டார். விரிவாக அன்றைய சூழலை விவரித்து காந்திக்கு கடிதம் எழுதினார் ஜெயராம்தாஸ். தான் செய்ய வேண்டிய உதவி எதுவும் உண்டா, என்று பதில் எழுதியிருந்தார் காந்தி. மருத்துவர்களின் பற்றாக்குறைதான் மிகப் பெரிய பிரச்சனை என்று அவருக்கு எழுதினார் ஜெயராம்தாஸ். ஆனால், அக்கடிதம் இலங்கை கடற்கரையை கடப்பதற்கு முன்னரே அவர் மலேரியாவால் பாதிக்கப்பட்டார்.
ஜெயராம்தாசின் நண்பர்களும் ஆதரவாளர்களும் அவரை வேல்லம்பிடியா பகுதிக்குத் திரும்பி, சரிவர சிகிச்சை எடுத்துகொள்ளுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர் அதற்கு செவிமடுக்கவில்லை. பிடிவாதமாக ஊர் திரும்ப மறுத்துவிட்டார். “இங்கு அப்பாவி மக்கள் கொத்துகொத்தாக மரணித்துக் கொண்டிருக்கும்போது, நான் இவர்களை இங்கு தவிக்க விட்டு எப்படி நிம்மதியாக ஊர்திரும்ப முடியும்? இந்நோயால் நான் இங்கு மரணமடைவேன் என்றாலும் கூட நான் என் இறுதி மூச்சுவரை, என்னால் இயன்றவரை இவர்களுக்காக சேவை செய்வேன்,” என்று உறுதியாக இருந்தார் அவர். உடல்நிலை நாளடைவில் மேலும் மோசமாகி அக்டோபர் 5, 1935 ல், அவருடைய 49 ஆவது வயதில் மரணமடைந்தார் ஜெயராம்தாஸ்.
இணையத்தில் இவரைப்பற்றி அறிந்துகொள்ள தொடர்ந்து தேடி வருகிறேன் எனினும் மேலதிக தகவல்கள் ஏதும் சரிவர கிடைக்கவில்லை. புகைப்படம்கூட கிடைக்கவில்லை. இன்று அவர் இலங்கையில்கூட சரிவர நினைவு கூரப்படுகிறாரா என்று தெரியவில்லை. ஜெயராம்தாசின் தியாக வாழ்க்கை ஆழத்தில் மனதை அனத்திக்கொண்டே இருக்கிறது. இந்தியாவிலும் எத்தனையோ ஜெயராம்தாஸ்கள் வாழ்ந்த காலமுண்டு. என்ன வேண்டும் இவர்களுக்கு? இன்று இத்தகைய தியாக/ தீர செயல்களை எளிதில் சுத்த மூடத்தனம் என்று புறம் தள்ளிவிட முடியும். கருணை கசியும் இதயம் கொண்ட சென்ற யுகத்து மாமனிதர்களை கண்ணீருடன் நினைவு கூர்ந்து சிரம் தாழ்த்தி வணங்குவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கு இல்லை.
-சுகி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக