வெள்ளி, 14 ஜூன், 2013

அமைச்சர் சிதம்பரம்:தங்கம் வாங்கும் ஆசையை அடக்குங்கள்

புதுடில்லி: "தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆசையை கட்டுப்படுத்திக் கொண்டால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையில், குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும்' என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்து உள்ளார். அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது- மக்கள் தங்கம் வாங்க கூடாது என்பது தான், என் ஒரே விருப்பம். மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால், திருப்தி அளிக்கும் அளவிற்கு, தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது. தங்கம் மீதான சுங்க வரியை மேலும் உயர்த்தி, என் புகழை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. தங்கத்தில் போடப்படும் பணம் எல்லாம் தூங்கும் பணமே
சென்ற நிதியாண்டில், நிதிப் பற்றாக்குறை, 4.9 சதவீதமாக குறைந்துள்ளது. இதை, நடப்பு நிதிஆண்டில், 4.8 சதவீதமாக குறைப்பது சாத்தியமே. பணவீக்கமும் கட்டுக்குள் உள்ளது. கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு, நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்துள்ளது. வரி வருவாய் இலக்கு எட்டப்படும். இதர நாடுகளை விட, இந்திய கடன் பத்திர சந்தை, முதலீட்டிற்கு அதிக வருவாய் வழங்கி வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதற்கான, சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு, ஓரிரு தினங்களில் வெளியாகும். நிதிச் சந்தையை நிலைக்கு கொண்டு வர, ஐந்து அம்ச திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. முக்கிய துறைகளில், சீர்திருத்தங்களை மேம்படுத்தி, முதலீடுகளை அதிகரிக்கச் செய்வதற்கான, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. இது தொடர்பாக, நடப்பு ஜூன் மாதம், ஏராளமான அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். முக்கியமாக, நிலக்கரி மற்றும் எரிவாயு விலை நிர்ணயம், மின் உற்பத்தி நிலையங்களுக்கான நிலக்கரி ஒதுக்கீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில், அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்துவது, திறன் மேலாண்மை சார்ந்த செயல் திட்டம் போன்றவற்றில், அரசு முடிவெடுக்க உள்ளது. பங்குச் சந்தையில், அன்னிய முதலீடு தொடர்பாக, சந்திரசேகர் குழு அளித்த அறிக்கையை, "செபி' வரும், 25ம் தேதி பரிசீலிக்க உள்ளது.


பீதி வேண்டாம்:

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து, பீதி அடைய தேவையில்லை. நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகம் உள்ள, இதர நாடுகளின் கரன்சிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ரூபாய் மதிப்பு ஒரு நிலைக்கு வரும். ஆனால், அதன் ஏற்ற, இறக்கம் தான் கவலை அளிக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன் இழந்த மதிப்பை, ரூபாய் திரும்ப பெறும். ரூபாய் மதிப்பின் இழப்பை, கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டு உள்ள சரிவு ஈடு செய்யும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். dinamalar.cஓம்

கருத்துகள் இல்லை: