செவ்வாய், 11 ஜூன், 2013

ராஜ்யசபா MP பதவிக்கு குதிரை பேரம் ப்ளஸ் கூட்டணி பேரம் ! சுதீஷ், பிரேமா. கனிமொழி ?

ராஜ்யசபாவுக்கு, ஆறு எம்.பி.,க்களை தேர்வு செய்ய நடக்கும் தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஐந்து எம்.பி.,க்கள் உறுதியாகிவிட்ட நிலையில், மீதமிருக்கும் ஒரு இடத்தை கைப்பற்றுவது எந்தக் கட்சி என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், குதிரை பேரத்துக்கான வேலைகளை, அரசியல் கட்சிகள் துவங்கிவிட்டன என, ஒருபுறம் கூறப்பட்டாலும், கூட்டணிகள் புதிதாக உருவாகும் என்றும் அரசியல்வட்டாரங்களில் கூறப்படுகிறது.ராஜ்யசபா எம்.பி.,க் களான, மைத்ரேயன், இளவரசன் (அ.தி.மு. க.,), கனிமொழி, சிவா (தி.மு.க.,), ஞானதேசிகன் (காங்.,), டி.ராஜா (இந்திய கம்யூ.,), ஆகியோரின் பதவி காலம், ஜூலை, 24ம் தேதி நிறைவு பெறுகிறது.ஆளுங்கட்சி பலம்காலியாகும் இந்த இடங்களுக்கு, இம்மாதம், 27ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஒரு எம்.பி.,யை தேர்வு செய்ய, 34 எம்.எல்.ஏ.,க்கள் தேவை. சட்டசபையில், தற்போது அ.தி.மு.க.,விற்கு, 151 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதன்மூலம், நான்கு எம்.பி.,க்களை அ.தி.மு.க., தேர்வு செய்யும். இதுபோக, 15 எம்.எல்.ஏ.,க்கள் அ.தி.மு.க., வசம் உள்ளனர்.தே.மு.தி.க.,வின் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேரும், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியவற்றின் தலா, இரு எம்.எல்.ஏ.,க்கள், பார்வர்ட் பிளாகின், ஒரு எம்.எல்.ஏ., என, ஐந்து பேரும் அ.தி.மு.க., வசம் உள்ளனர். இதனால், நான்கு எம்.பி.,க்களை தேர்வு செய்தது போக, 26 எம்.எல்.ஏ.,க்கள் அ.தி.மு.க.,வுக்கு அதிகமாக உள்ளனர்.


மார்க்சிஸ்ட் கம்யூ.,வுக்கு, 10 எம்.எல்.ஏ.,க்களும், இந்திய கம்யூ.,வுக்கு, எட்டு எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். இந்திய கம்யூ.,வுக்கு ராஜ்யசபா "சீட்' கொடுக்கவில்லை என்ற கோபத்தில், அவர்கள் .தி.மு.க.,வுக்கு அதரவு அளிக்கா விட்டாலும், மார்க்சிஸ்ட் கம்யூ.,விடம் உள்ள, 10 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன், ஐந்தாவது எம்.பி., இடத்தை அ.தி.மு.க., வெல்லும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் பலம்:

ஆறாவது எம்.பி., யை தேர்வு செய்யும் அளவுக்கு எந்தவொரு எதிர்க்கட்சிக்கும் தனித்த பலமில்லை. தி.மு.க.,வில், 23 எம்.எல். ஏ.,க்கள் உள்ளனர். சட்டசபை எதிர்க்கட்சியான தே.மு.தி.க.,வுக்கு கணக்குக்கு, 29 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தாலும், ஆறு எம்.எல்.ஏ.,க்கள் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிப்பதால், அக்கட்சியின் பலம், 23 ஆக குறைந்து விட்டது.பிற எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஐந்து எம்.எல். ஏ.,க்களையும், பா.ம.க., மூன்று எம்.எல்.ஏ.,க்களையும் கொண்டுள்ளன. இந்த நான்கு கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் இருந்தால், ஒரு எம்.பி.,யை எளிதாக தேர்வு செய்யலாம். ஆனால், தே.மு.தி. க.,வை, பா.ம.க., ஆதரிக்குமா என்பது சந்தேகம். அதேபோல், மத்திய கூட்டணியிலிருந்து வெளியேறி விட்ட, தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்குமா என்பதும், உறுதியாகத் தெரியவில்லை.

இதனிடையே, தி.மு.க., - தே.மு.தி.க., கட்சிகள் ஒன்றிணைந்து விட்டால், காங்கிரஸ், பா.ம.க., தயவு அவற்றுக்கு தேவையில்லை. ஆனால், இவையெல்லாம் நடக்காவிட்டால், கட்சி மாறி ஓட்டுப் போடுவது உறுதியாகும். கட்சியில், முக்கியத்துவம் இல்லை என, கருதும் எம்.எல்.ஏ.,க்களை அடையாளம் கண்டு, விலை பேச அரசியல் கட்சிகள் தயாராகிவிட்டன என, அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


17ல் முடிவு:

இதற்கிடையே, தி.மு.க.,வை தவிர்த்து விட்டு, மார்க்சிஸ்ட் மற்றும் சிறு கட்சிகளின் ஆதரவைப் பெற்று, தனி அணி மூலம், ஒரு எம்.பி., பதவியைக் கைப்பற்ற, தே.மு.தி.க., திட்டமிடுகிறது. இதற்காக, மார்க்சிஸ்ட் மற்றும் சிறு கட்சிகள் சிலவற்றின் ஆதரவைப் பெறும் முயற்சிகளை, தே.மு.தி.க., மேற்கொண்டு உள்ளது.ராஜ்யசபா தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதை முடிவு செய்ய, மார்க்சிஸ்ட் மாநிலக் குழுக் கூட்டம், சென்னையில் இம்மாதம், 17ம் தேதி கூடுகிறது. இதில், யாருக்கு ஆதரவு என்பது முடிவு செய்யப்படும் என, அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

- நமது நிருபர் குழு - dinamalar.com

கருத்துகள் இல்லை: