செவ்வாய், 30 ஏப்ரல், 2013

திருமாவளவன் :மரக்காணம் உண்மையை உரத்துச் சொன்ன முதல்வருக்கு நன்றி!

 விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ’’மரக்காணம் வன்முறை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.  இவ்விவாதத்தில் கலந்துகொண்டு தேமுதிக சார்பில் பண்ருட்டி இராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட்கட்சி சார்பில் குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கே.பாலகிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சி சார்பில் மருத்துவர் கிருஷ்ணசாமி, இந்திய குடியரசுக் கட்சி சார்பில் செ.கு. தமிழரசன், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சரத்குமார் ஆகியோர் உரையாற்றியுள்ளனர்.  நிறைவாக,  தமிழக முதல்வர்  விளக்கம் அளித்துள்ளார்.இவ்விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அனைவரும் மரக்காணத்தில் தலித் மக்கள் தாக்கப்பட்டது, குடிசைகள் எரிக்கப்பட்டது, அரசுப் பேருந்துகள், தனியார் வண்டிகள் தாக்கப்பட்டது மற்றும் எரிக்கப்பட்டது ஆகிய வன்முறைகளைக் கண்டித்துள்ளனர்.
நிறைவாக உரையாற்றிய முதல்வர், மாமல்லபுரத்தில் நடந்த விழாவில் பேசிய பா.ம.க. நிறுவனர் மருத்து வர் இராமதாசு காவல்துறையின் நிபந்தனைகளை மீறியதைச் சுட்டிக்காட்டி அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.  அத்துடன், அவ்விழாவில் பங்கேற்பதற்காக வந்தவர்கள் பெரும்பாலும் குடிபோதையில் வந்துள்ளனர் என்றும் அவர்கள் பொதுமக்களுக்கு இடையூறுதரும் வகையில் வன்முறையில் ஈடுபட்டதையும் ஆபாசமாகப் பேசியதையும் சுட்டிக்காட்டியுள்ளார். 
“இந்த விழாவில் கலந்துகொள்ள வந்தவர்கள் பயணம் செய்த வாகனங்களின் பதிவு எண்களை காவல் துறையினர் பின்னர் ஆய்வு செய்து சரிபார்த்தபோது சில வேன்களின் பதிவு எண்கள் போலியானவை எனத் தெரியவந்துள்ளது.  இரு சக்கர வாகனங்களுக்கு வழங்கப்பட்ட பதிவு எண்களை சில வேன்களுக்குப் போலியாகப் பயன்படுத்தியுள்ளனர்.  எனவே வேண்டுமென்றே சட்டம்-ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்துவதற்காகத் திட்டமிட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது எனக் கூறியிருப்பதன் மூலம் யார் திட்டமி ட்ட வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என்பதை தமிழக முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அப்பாவி தலித் மக்களின் குடிசைகளையும், இசுலாமியர்களின் கடைகளையும் தாக்கித் தீ வைத்தி ருப்பதுடன் அரசுப் பேருந்துகளையும் தனியார் வண்டிகளையும் கொளுத்தியுள்ளனர் என்பதை அம்பலப்படுத்தியுள்ளார்.  மாநாட்டிற்கு வந்தவர்கள் தாறுமாறாக வண்டி ஓட்டியதில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும்போது வழியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் பிற கட்சிகளின் கொடிகளையும் விளம்பரப் பதாகைகளையும் சேதப்படுத்தியுள்ளனர் என்றும், வாலாஜாபாத் அருகே திடீர் சாலைமறியலில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்ததையும் குறிப்பிட்டிருக்கிறார்.
மாமல்லபுரம் நிகழ்ச்சிக்காக பா.ம.க.வினர் செய்த விளம்பரங்களில் பிற சமூகத்தினரின் உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையில் சுவர் விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகளில் எவ்வாறு விளம்பரப் படுத்தியிருந்தனர் என்பதையெல்லாம் சுட்டிக்காட்டியதுடன், வன்முறையைத் தூண்டியவர்கள் மற்றும் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்திருக்கிறார். 
பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் இவ்விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது தலித் மக்களின் மீது, குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகளின் மீது, ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைக் கூறி அவதூறாகப் பேசியபோது, முதல்வர்  குறுக்கிட்டு அவற்றை அவைக்குறிப்பிலிருந்து நீக்கும்படிச் செய்திருக்கிறார்.
பொய்யுரைகளையும், அவதூறுகளையும் திரும்பத் திரும்பச் சொல்லுவதன் மூலம் உண்மையாக்கி விடலாம் என்று அதட்டிப் பேசி, அதன் மூலம் தமிழகத்தில் அமைதியைச் சீர்குலைக்கவும் அப்பாவி மக்களிடையே மோதலை உண்டுபண்ணவும் திட்டமிட்டவர்களின் சதி முயற்சிகளை முறியடித்திருக்கிறார்.
வாய்மையே வெல்லும்; சனநாயகமே நிலைக்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சரியான நேரத்தில்  தமிழக முதல்வர்  உண்மையை உலகுக்கு உரத்துச் சொல்லி, தமிழகத்தில் அமைதியை நிலைநாட்டவும் சமூக நல்லிணக்கத்தைப் பேணவும் வழி வகுத்திருக்கிறார்.
முதல்வர் அவர்களின் இந்த விளக்கம் கடந்த சில மாதங்களாக வன்முறைக் கும்பலால் பாதிக்கப்பட்டுவரும் தலித் மக்களுக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது.  இந்நிலையில்,  முதல்வர் அவர்களுக்கும் விவாதத்தில் கலந்துகொண்டு சாதியவாத சக்திகளின் வன்முறைப் போக்குகளைக் கண்டித்து உரையாற்றிய அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித் துக்கொள்கிறோம்.
அரசியல் உள்நோக்கம் ஏதுமின்றி, உண்மையின்  பக்கமும் சனநாயகத்தின் பக்கமும் நின்று குரல்கொடுத்த அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் இந்த நேரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் மனப்பூர்வமான நன்றி யைத் தெரிவித்துக்கொள்கிறது. 
தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் சாதி-மத வேறுபாடுகளைக் கடந்து நல்லிணக்கமாகவும் அமைதியாகவும் வாழ்வதற்கு கட்சி, தேர்தல் போன்ற வரம்புகளையெல்லாம் தாண்டி, அனைத்துக் கட்சி யினரோடும் விடுதலைச் சிறுத்தைகள் என்றும் கைகோர்த்து நிற்போம் என்று உறுதியளிக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்’’என்று தெரிவித்துள்ளார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை: