ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

2 நிமிட கேள்விக்கு 5 நிமிட அம்மா புராணம்! இதய தெய்வம் புரட்சி தலைவி காவேரி தாய்......


திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் திமுக சார்பில், தமிழக சட்டமன்றத்தில்
ஜனநாயகம் படும் பாடு என்ற தலைப்பில் நேற்று இரவு பொதுக் கூட்டம் நடந்தது. அதில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சட்டசபையில் அதிமுகவுக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்கட்சியாக தேமுதிக உள்ளது. 23 உறுப்பினர்களை கொண்டுள்ள திமுக எதிர்கட்சியாக கூட இல்லை. ஆனாலும், மக்கள் மன்றத்தை பொறுத்த வரை திமுகதான் எதிர்கட்சியாக செயல்படுகிறது. எனவேதான் திமுகவினர் கூட்ட தொடர் முழுவதும் சபைக்கு வரக் கூடாது என்ற ஜெயலலிதாவின் ஆணையை சபாநாயகர் நிறைவேற்றி உள்ளார். சட்டசபையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் 2 நிமிட கேள்வி கேட்க 5 நிமிடம் ஜெயலலிதாவை புகழ்கின்றனர். முக்கிய பிரச்னைகள் குறித்து பேச நேரமில்லா நேரம் (ஜீரோ அவர்ஸ்) ஒதுக்கப்படும். அந்த நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா 110வது விதியின் கீழ் அறிக்கை வாசிக்கிறார்.
இவ்வாறு கூறப்படும் திட்டங்கள் வெறும் அறிவிப்புகளாக மட்டுமே உள்ளன. சத்துணவு திட்டத்தை திமுக தலைவர் குறை கூறிய தாக சட்டசபையில் அமைச்சர் கூறுகிறார். ஆதாரம் கேட்டால் 5 நாள் கழித்தும் கொடுக்கவில்லை. இதை தட்டி கேட்டதற்காக திமுக உறுப்பினர்களை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றுகின்றனர். சென்னை மாநகரம் தற்போது குற்ற வழக்கில் முதலிடத்தில் உள்ளது. ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் பதிவான எத்தனையோ வழக்குகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன. எனக்கு குடும்பமில்லை. நான் துறவி போல் வாழ்கிறேன் என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் கூறி இருக்கிறார். எதில் துறவி என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு, முன் னாள்அமைச்சர்கள் செல்வராஜ், கரூர் சின்னசாமி உள்பட முக்கிய பிரமுகர்கள், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை: