செவ்வாய், 26 மார்ச், 2013

சன் டிவி: சிக்கிய ராஜாவை வைத்து சிக்காத ராஜாக்களைப் பிடிப்போம்!

சன் டிவி ராஜாபத்திரிகை முதலாளியை வசனகர்த்தாவாகவும், பத்திரிகையாளனாகிய தன்னை வாயசைக்கும் நடிகனாகவும் கருதிக்கொள்வதற்கு சம்மதிக்கும் மனோபாவம் எந்த அளவுக்கு பத்திரிகை உலகில் பண்பாட்டில் ஊடுறுவியிருக்கின்றதோ அந்த அளவுக்கு புள்ளி ராஜாக்களும் ஊடுறுவுவார்கள்.

சன் நியூஸ் புள்ளி ராஜா. படம்: சவுக்கு

சன் நியூஸ் தொலைகாட்சியின் ஆசிரியர் ராஜா வாசுதேவன், ஒரு பாலியல் குற்றச்சாட்டில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறார். அந்த டி.வி.யின் செய்தி வாசிப்பாளர் அகிலா என்ற பெண் கொடுத்த புகாரில் இந்த கைது நடந்திருக்கிறது. இது பத்தோடு பதினொன்றாக வந்து செல்லும் பாலியல் குற்றச்சாட்டு அல்ல. ஊருக்கெல்லாம் உபதேசிக்கும் ஊடகங்களின் யோக்கியதையை அப்பட்டமாக வெளியே கொண்டு வந்திருக்கிறது இந்தப் புகார்.
இதில் சிக்கி அம்பலப்பட்டிருக்கும் ராஜாவை தாங்கிப் பிடிக்கவும், காப்பாற்றவும் ஏராளமானோர் முயல்கின்றனர். ஆனால் எந்தவித பின்னணியும் இல்லாமல் தன் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் அத்துமீறலுக்கு எதிராக மாபெரும் ஊடக சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்து தன்னந்தனியாக போராடிக் கொண்டிருக்கிறார் அகிலா. இந்த நிலையில் இந்தப் பிரச்னையின் பன்முகப் பரிமாணங்களையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
சன் நியூஸ் தொலைகாட்சிதான் தமிழ்நாட்டின் முதல் 24 மணி நேர செய்தி சேனல். ஆரம்ப காலத்தில் இருந்து இதற்கு ஆசிரியராக செயல்பட்டு வரும் ராஜா வாசுதேவன் குறித்து தமிழ் ஊடகங்களில் இயங்கும் யாரும் அறிந்திராமல் இருக்க முடியாது. ராஜா என்ற பெயர் ஊடகவியலாளர்கள் மத்தியில் பிரபலம். தன்னிடம் வேலை பார்க்கும் நிருபர்களை, உதவி ஆசிரியர்களை, ஒளிப்பதிவாளர்களை எல்லோருக்கும் மத்தியில் கேவலமாக திட்டுவதிலும், அசிங்கப்படுத்துவதிலும் ராஜா கை தேர்ந்தவர். அதை தனது ஸ்டைலாகவே நிலைநாட்டிக் கொண்டவர். தன்னுடைய தகுதிக் குறைபாடுகளை மறைப்பதற்காகவே அவர் இவ்வாறு நடந்துகொள்கிறார் என்பது பலருக்கு புரிந்தாலும் அவரை எதிர்த்துப் பேச அங்கு ஆள் இல்லை. அவரது செல்வாக்கு அப்படி.

சன் டிவிக்கு முன் “பூமாலை” வீடியோ இதழ் நடத்தி வந்த காலத்தில் இருந்தே மாறன் சகோதரர்களுடன் இருக்கும் ராஜா நினைத்தால் யாரையும் வேலைக்கு வைத்திருக்க முடியும், தூக்கியெறிய முடியும். இவரது மனிதத் தன்மையற்ற செயல்களால் வேலை இழந்தவர்கள் ஏராளம். இது ராஜா என்ற தனிநபரின் குணாதிசயம் மட்டுமல்ல. சன் டிவி நிறுவனமே ஊழியர்களை கொத்தடிமைகளாக நடத்தும் “நாட்டாமை” நிறுவனம்தான்.
வெளித்தோற்றத்துக்கு பல்லடுக்கு கார்ப்பரேட் அலுவலம் போலத் தோற்றமளிக்கும் சன் டி.வி., நெட்டுக்குத்தாக நிற்கும் ஒரு  டீ எஸ்டேட். அங்கே பணியாற்றுபவர்களின் உடை நவ நாகரீகமாக இருந்தாலும்,  உத்தியோகம் கங்காணி வேலை அல்லது அடிமைப் பணிதான்.  ஆணோ பெண்ணோ நீங்கள் யாராக இருந்தாலும், தலைமையில் உள்ளவரை காக்கா பிடித்தால்தான் வேலையில் பிரச்னை இல்லாமல் தொடர முடியும். தனிநபர்களின் விருப்பங்களும், செல்வாக்குமே அந்த தொலைகாட்சியை இயக்குகின்றன. மேல் அதிகாரி, தனக்கும் கீழ் உள்ளவரை கைநீட்டி அடிப்பது எல்லாம் கூட அவ்வப்போது நடக்கும். சம்பளத்தை பொருத்தவரை மிக, மிக குறைவான ஊதியம்தான். இந்த சென்னை நகரில் 7 ஆயிரம் மாதச் சம்பளம் வாங்குபவர்கள் அங்கு உண்டு. 20 ஆயிரம் ரூபாய் என்பது சன் டி.வி.யில் மிகப்பெரிய சம்பளம்.
வெளியே கார்ப்பரேட்தனம்; உள்ளே பண்ணையார்தனம்’ என்ற இந்த சிஸ்டம் பல கோடிகளை மிச்சம் பிடித்துத் தருவதால் கலாநிதிமாறன் விரும்பியே இதை அனுமதித்திருக்கிறார். இந்த வேலையை அவருக்கு சரியாக செய்து தரும் பொருட்டு, சன் நெட்வொர்க்கின் ஒவ்வொரு சேனலுக்கும் ஒரு கங்காணி இருக்கிறார். அந்த வகையில் சன் நியூஸ் சேனலின் கங்காணிதான் இந்த ராஜா.
ராஜா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் ஒரு வதந்தி போல அவ்வப்போது வந்து செல்வதுண்டு. அவை புகாராகவோ, வழக்காகவோ இதுவரை மாறியதில்லை. செய்தி வாசிப்பாளர் அகிலா இந்த திருட்டுப் பூனைக்கு மணி கட்டியிருக்கிறார்.
கீழ் நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தை சேர்ந்த ஏழைப் பெண்ணான அகிலா, சன் நியூஸ் தொலைகாட்சியில் வேலைக்குச் சேர்ந்து ஏறக்குறைய ஓர் ஆண்டுகாலம் ஆகிறது. மணவிலக்கு வழக்கு நிலுவையில் உள்ள,  ஓர் ஆண் குழந்தையை வைத்திருக்கும் அகிலாவின் குடும்ப சூழலை நேர்முகத்தேர்வின் போதே தெளிவாக கேட்டுத் தெரிந்துகொண்ட ராஜா, அதன்பிறகு பொருத்தமான சந்தர்ப்பம் பார்த்து வக்கிரத்திற்கு நூல் விடுகிறார். எல்லோரிடமும் இஞ்சி தின்ற குரங்கு போல காரணமே இல்லாமல் சிடுசிடுக்கும் அவர், அகிலாவிடம் ஒரு விடலைப் பையனைப் போல வழிகிறார். இவை அனைத்தும் அந்தப் பெண்ணால் ஒலிப்பதிவு செய்யப்பட்டு புகாருடன் கொடுக்கப்பட்டுள்ளன. (சவுக்கு இணையதளத்தில் இதன் ஆடியோ பதிவை கேட்க முடியும்).
இந்தப் புகாரின் உண்மைத் தன்மை என்ன என்பதை போலீஸ் விசாரிக்கிறது. அது ஒரு பக்கம் நடக்கட்டும். ஆனால் ஒரு சாதாரண பாலியல் புகார் என்றாலே முந்திக்கொண்டு பரபரப்பை கிளப்பும் தமிழ்நாட்டு ஊடகங்கள் மிகப்பெரிய அதிகாரத்தில் இருக்கும் ஒரு நபர் மீதான ஆதாரப்பூர்வமான புகாரைப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை. குமுதம் ரிப்போர்ட்டர், தமிழக அரசியல், தினமலரின் திருச்சி பதிப்பு,           தி இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆகிய அச்சிதழ்கள் மட்டுமே இந்த செய்தியை வெளியிட்டன. அவர்களும் கூட பெண்ணின் நியாயத்தில் இருந்து அல்லாமல், ‘ராஜாவை அசிங்கப்படுத்த இது ஒரு வாய்ப்பு’ என்ற தங்களது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் கோணத்தில் இருந்து மட்டுமே செய்தியை வெளியிட்டார்கள். மாறன் சகோதரர்கள் மீதுள்ள கோபமும் இதை வெளியிடுவதற்கான முக்கியக் காரணம். ஒரே ஒருமுறை ஜெயா ப்ளஸ் தொலைகாட்சியில் இந்த செய்தி வெளியானது. அத்தோடு சரி.
மற்றபடி ‘தமிழ்நாட்டின் நாடித்துடிப்பு’ என்று பஞ்ச் டயலாக் பேசும் ஜூனியர் விகடன் உள்ளிட்ட விகடன் குழும இதழ்கள் ஒரு வார்த்தை கூட இதைப்பற்றி எழுதவில்லை. விகடன் டெலிவிஸ்டாஸின் சார்பாக சன் குழுமத்தில் வந்துகொண்டிருக்கும் சீரியல்கள், ஒவ்வொரு நாளும் லட்சங்களை அள்ளிக் கொட்டும்போது அவர்கள் நாடி எப்படித் துடிக்கும்?
சரி… இவர்களுக்கு நேரடி வர்த்தக நலன் இருக்கிறது, அதனால் எழுதவில்லை.
தினந்தந்தி, தினமணி, தினமலர், தி. ஹிண்டு, டைம்ஸ் ஆஃப் இண்டியா, நக்கீரன், டெக்கான் கிரானிக்கல் என வேறு யாரும் எழுதவில்லையே ஏன்? சன் நியூஸ் தொலைகாட்சியின் நேரடிப் போட்டியாளரான புதிய தலைமுறை தொலைகாட்சிக் கூட இந்த உண்மையை உலகுக்கு உரக்கச் சொல்லவில்லையே எதனால்? சன் குழுமத்தை அசிங்கப்படுத்த இது ஒரு நல்வாய்ப்பு என்றபோதிலும் ஜெயா டி.வி. அடக்கி வாசிப்பதற்கு என்ன காரணம்?
ஏனெனில் இவர்கள் கூட்டுக்களவாணிகள். “இன்று ராஜாவை பற்றி நாம் செய்தி வெளியிட்டால், நாளை நம் மீது ஒரு குற்றச்சாட்டு வரும்போது அவர்கள் செய்தி வெளியிடுவார்கள்”  என இவர்களின் ‘கூட்டு மனசாட்சி’ நினைக்கிறது. இதை, ‘ஒரு மீடியா பத்தி இன்னொரு மீடியாவுல நியூஸ் போடக்கூடாது. இது ஒரு எத்திக்ஸ்’ என்று அறம் பேசுகிறார்கள்.
“ஒரு திருடன் சக திருடனை காட்டிக் கொடுக்கக்கூடாது’ என்ற கட்டுப்பாடுதான் இவர்கள் கூறும் அறம். இன்று ராஜா சிக்கிக்கொண்டார். ஆனால் ஒவ்வொரு ஊடகத்திலும் சிக்காத ராஜாக்கள் பலபேர் இருக்கிறார்கள். அவர்களிடம் சிக்கி, பணியிடத்தில் கடும் தொந்தரவுகளுக்கு உள்ளாகி, அடுப்பங்கரைக்கே துரத்தப்பட்ட பெண்கள் எத்தனையோ பேர்.
ஊடகங்களின் மௌனத்தை மட்டுமல்ல… ஊடக கருத்து சொல்லிகளின் மௌனத்தையும் இங்கு நாம் அம்பலப்படுத்த வேண்டும். அ முதல் ஃ வரை அனைத்து பிரச்னைகளின் மீதும் ஆவேசமாக அறவுணர்ச்சிப் பொங்க கருத்து சொல்லும் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் ஒரு ஏழைப் பெண்ணுக்கு மிகப்பெரிய அதிகாரத்தினால் இழைக்கப்படும் அநீதி குறித்து எந்தக் கருத்தையும் சொல்லவில்லையே ஏன்? ‘நேர்படப்பேசு’ முதல் ‘விவாத மேடை’ வரை எல்லா இடங்களிலும் அவர் பேசும் கருத்துக்கு அவர் நேர்மையாக இருப்பாரேயானால் இந்த பாலியல் அத்துமீறல் குறித்து எழுதியிருக்க, பேசியிருக்க வேண்டும். இப்போதேனும் அதை செய்ய வேண்டும். மாணவர் போராட்டங்கள் குறித்து சன் நியூஸ் நேரலையில் பல மணி நேரம் உட்கார்ந்து கருத்து சொன்ன அ.மார்க்ஸ், அதே சன் நியூஸில் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்திருக்கும் அத்துமீறல் குறித்து ஒரு வார்த்தையும் எழுதவில்லை. இவர்கள் இருவர் மட்டுமல்ல… இவர்களைப் போன்ற பல நிலைய வித்வான்களும், வித்வான் வாய்ப்புக்கு காத்திருக்கும் அறிவு சீவிகளும் வாய் திறக்கவில்லை.
டாடாவுக்கு ‘கவிதை’ எழுதிய லீனா மணிமேகலையின் ‘கருத்து சுதந்திரத்திற்காக’ டாஸ்மாக் கடைகள் முதல் எல்லோ பேஜஸ் டைரக்டரி வரையிலான சகல இடங்களிலும் படைப்பாளிகளைச் சல்லடை போட்டு சலித்து கூட்டம் சேர்த்த கருத்துரிமைக் காவலர்கள்; ஜனநாயகம், மனித உரிமை, பெண்ணுரிமை உள்ளிட்ட சகலவிதமான உரிமைகளின் ஆசான்களும் அத்தாரிட்டிகளுமாகிய பீஷ்ம பிதாமகர்கள், துரோணாச்சாரிகள் .. எங்கே? அவர்களுடைய மவுனத்திற்கு காரணம் என்ன?
அதற்கு காரணம் அவர்களுடைய சுயநலமோ அடுத்த “படத்தில்” நமக்கு சான்ஸ் கிடைக்காமல் போய், தமிழகத்தின் முதல் பத்து அறிவுஜீவிகளில் ஒருவராக இல்லாமல் தொலைந்து போய்விடுவோமோ என்ற கவலையோ அல்ல. அவர்களுடைய மவுனத்துக்கு ஆழ்ந்த பொருள் இருக்கிறது. Greater common cause! அகிலா என்ற ஒரே ஒரு பெண்ணின் நியாயத்துக்காக அவசரப்பட்டு குரல் கொடுப்பதன் மூலம், ஈழத்தின் ஆயிரக்கணக்கான பெண்களுக்காகவும், அங்கே கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்காகவும் குரல் கொடுக்கும் வாய்ப்பை இழந்துவிடுவோமே என்ற கவலையின் காரணமாகத்தான் அவர்களால் தொண்டைக்குள்ளிருந்து வார்த்தையைத் துப்ப முடியவில்லை. ஒன்று பெரிதா ஆயிரம் பெரிதா என்று தீவிரமான ஆராய்ச்சியில் கடந்த சில நாட்களாகவே மூழ்கி, கடைசியில் ஆயிரம்தான் பெரிது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
இந்த இலட்சணத்தில் அரசியல்வாதிகள் மட்டமானவர்களாம். அறிவுசீவிகள் உத்தமர்களாம். பத்திரிகைகள், தொலைக்காட்சிகளின் தயவை நம்பி, அறிக்கை விட்டும், தொலைக்காட்சியில் மூஞ்சியைக் காட்டியும் தான் உயிரோடு இருப்பதை அன்றாடம் உறுதி செய்து கொள்ளவேண்டிய நிலையில் இருக்கும் எல்லா அரசியல்வாதிகளும் “ஊடகங்களின் மீதும் பத்திரிகை சுதந்திரத்தின் மீதும் பெருமதிப்பு வைத்திருப்பது” இதற்காகத்தான். தற்போது சன் டிவி புள்ளிராஜாவின் சுதந்திரமும் பத்திரிகை சுதந்திரத்திற்குள் வந்து விட்டது போலும்! எனவேதான் அறிவுஜீவிகள், இனமானக் காவலர்கள், புரட்சிப்புயல், உலகத்தமிழர் தலைவர்கள், தமிழ் மானத்தின் மொத்த குத்தகைதாரர்கள் மற்றும் உள் குத்தகைக்காரர்கள் உள்ளிட்ட யாரும் பேசவில்லை.
அமெரிக்கா முதல் ஆண்டிப்பட்டி வரை அநீதிகளை எதிர்த்து நாகரீகமாக அறிக்கை விடும் போலிக் கம்யூனிஸ்டுகள் எங்கே போனார்கள்? சிதம்பரம், வாச்சாத்தியில் உரிமைக்கு குரல் கொடுத்த வரலாறே நாங்கள்தான் என்று பொங்குபவர்கள் என்ன செய்கிறார்கள்? சன் டிவி என்றால் அத்தனை பயமா? இல்லை செய்தி அரங்கத்தில் நம்மையும் மதித்து முகம் காட்டுகிறார்களே என்ற நன்றி விசுவாசமா? ஆமென்றால் உங்கள் ஜனநாயக மாதர் சங்கத்தையும், சம்மேளனத்தையும் கலைத்து விடுங்கள்!
பத்திரிகையாளர்கள் சங்கம் என்ன செய்கிறது என்று தெரியவில்லை. பெண் பத்திரிகையாளர்களுக்கு வேறு தனி சங்கம் இருக்கிறதாம். இவர்கள் யாரும் ஏன் பேசவில்லை. பேசினாலே தங்கள் நிறுவனத்தில் தன்னை கட்டம் கட்டி விடுவார்கள் என்ற பயமா? அகிலாவும் இப்படி பயந்து பணிந்துவிடுவார் என்பதுதான் ராஜாவின் கணக்காக இருந்திருக்கிறது. தற்போது பத்திரிகையாளர் உலகில் நிலவும் மவுனத்தைப் பார்க்கும்போது, ராஜாவின் கணக்கில் தப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. அகிலாவின் விசயத்தில் மட்டும் ராஜாவின் கணக்கு பிசகிவிட்டது.
ஒருவேளை, ‘அந்தப் பெண் புகார் கொடுத்திருக்கிறார். அது உண்மையா, பொய்யா என்று தெரியாமல் எப்படி எழுதுவது?’ என கேட்கலாம். எனில், புகாரின் உண்மைத்தன்மை குறித்து யாரிடமேனும் விசாரித்தீர்களா? குறைந்தப்பட்சம் அந்தப் பெண்ணிடம் பேச முயன்றீர்களா? யாரும் எதையும் செய்யவில்லை. டெல்லியில் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமைக்காக இங்கே எழுந்த குரல்களில் ஒன்றை கூட இப்போது காணவில்லை. அரசு சலுகைகள் வாங்குவதற்கு மட்டுமே இயங்கும் பத்திரிகையாளர் சங்கங்கள், அகிலாவுக்கு ஆதரவாக சிறு முயற்சியையும் எடுக்கவில்லை.
அகிலா, என்ன தைரியத்தில் இப்போது புகார் கொடுத்திருக்கிறார்? அவருக்கு என்ன பின்னணி? எதுவுமில்லை. தன்னை துன்புறுத்தியவன் தண்டனை பெற வேண்டும் என்ற நியாயமான கோபம். தன்மான உணர்ச்சி. இதே கோபம் சக பத்திரிகையாளர்களாளுக்கும் வர வேண்டும். தமிழ் ஊடக உலகில் நிலவும் இந்த மோசமான மௌனம் கலைக்கப்பட்டாக வேண்டும். இப்படிப்பட்ட அச்சம் மிகுந்த மௌனமும், உதிரிகளாக பிரிந்துகிடக்கும் அவலமும்தான் ராஜா போன்ற ஊடகப் பொறுக்கிகளின் பலம். இதுதான் பத்திரிகை முதலாளிகளின் பலமும்.
இப்போது அகிலா தனித்துவிடப்பட்டிருக்கிறார். அவரது ஒழுக்கத்தை பற்றிய அவதூறுகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. ‘நான் எந்த தவறும் செய்யவில்லை. தவறிழைத்த பொறுக்கியின் மீது புகார் கொடுத்தேன். இதற்காக நான் ஏன் வேலைக்கு வராமல் இருக்க வேண்டும்?’ என்ற நியாயமான கோபத்துடன் மறுபடியும் வேலைக்குச் செல்லத் துவங்கியிருக்கிறார் அகிலா. ஆனால் முன்பே திட்டமிடப்பட்ட செய்தி வாசிப்பு அட்டவணையில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டிருக்கிறது. இப்போது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்துப் போடும் வகையில் நிபந்தனை ஜாமீன் பெற்றிருக்கும் ராஜா, இனிமேல் பழைய மாதிரி சன் நியூஸ் ஆசிரியராக செயல்படுவாரா, இல்லையா என்பது தெரியவில்லை. அது கலாநிதிமாறனின் ‘கருணயை’ப் பொருத்தது. ஒருவேளை ராஜா அலுவலகம் வந்தால் அப்போது என்னவும் நடக்கலாம். நிர்வாக ரீதியாக அகிலா வேறு ஊருக்கு பந்தாடப்படலாம் அல்லது மேலும் பல இன்னல்களுக்கு ஆளாகலாம்.
இது பொதுவாகப் பேசுவதற்கான தருணம் அல்ல. குறிப்பாக செயல்பட வேண்டிய தருணம். ராஜா என்ற நபரின் பாலியல் குற்றமாக மட்டும் இதனைப் பார்க்க கூடாது. இது தமிழகத்தின் ஊடக முதலாளித்துவ உலகம் நிலைநாட்டியிருக்கும் கொடுங்கோன்மையின் ஒரு வெளிப்பாடு. எங்கே தொழிற்சங்க உரிமைகளும், ஜனநாயக உரிமைகளும் உத்திரவாதம் செய்யப்பட்டிருக்கின்றனவோ அங்கே இத்தகைய தவறுகள் நடப்பதற்கான வாய்ப்பு வெகு வெகு குறைவு. எங்கே பத்திரிகையாளர்கள் உண்மையான பத்திரிகையாளர்களாக நடந்து கொள்கிறார்களோ அங்கே இத்தகைய இழிபிறவிகள் நடமாடுவதற்கான வாய்ப்பே அரிது.
பிழைப்புவாதம், காரியவாதம், தொழில் நேர்மையற்ற அடிமைத்தனம், அறிவையும் மனச்சான்றையும் சொந்த ஆதாயத்துக்காக எவ்வித தடுமாற்றமும் இன்றி அடகு வைக்கும் பண்பு, நிர்வாகத்தின் உத்தரவுக்கு ஏற்ப உண்மையை மாற்றி பொய் எழுதக் கூசாத கைகள், பத்திரிகை முதலாளியை வசனகர்த்தாவாகவும், பத்திரிகையாளனாகிய தன்னை வாயசைக்கும் நடிகனாகவும் கருதிக்கொள்வதற்கு சம்மதிக்கும் மனோபாவம் இவை எந்த அளவுக்கு பத்திரிகை உலகில் பண்பாட்டில் ஊடுறுவியிருக்கின்றதோ அந்த அளவுக்கு புள்ளி ராஜாக்களும் ஊடுறுவுவார்கள்.
அகிலா என்ற பெண் தொடங்கியிருக்கும் இந்தப்போராட்டத்தை தமிழகப் பத்திரிகையாளர்கள் உடனே பற்றிக் கொள்ளவேண்டும் என்று கோருகிறோம். ஒரு பெண்ணின் கவுரவப் பிரச்சினை என்ற எல்லையைத் தாண்டி பத்திரிகையாளர்கள் அனைவரின் கவுரவம், பணி சார்ந்த உரிமைகள் ஆகியவற்றை நிலைநாட்டிக் கொள்வதற்கான போராட்டமாக இதனை விரித்துச் சொல்ல முடியும்.
மற்றவர்களுக்காக காத்திருக்க வேண்டாம். பத்திரிகையாளர்களே கிளர்ந்தெழுங்கள். vinavu.com
மேலும் படிக்க:
சவுக்கு கட்டுரை: குட்டி ஆடுகளும் குள்ளநரிகளும்.

கருத்துகள் இல்லை: