வியாழன், 6 டிசம்பர், 2012

உங்க பெயரையே நான் இழுக்கலை! Why This கொலவெறி டாக்டரே?

Viruvirupu
“நான் கருத்து கூறியபோது, ராமதாஸின் பெயரையே உச்சரிக்கவில்லை. அப்படியிருந்தும் அவருக்கு ஒய் திஸ் கொலவெறி என்மீது?” என்று கேட்டிருக்கிறார், கருணாநிதி.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், “கருணாநிதிக்கு, என் மீதும், வன்னியர்கள் மீதும் எந்த அளவுக்கு வன்மம் இருக்கிறது என்பதை, நாங்கள் செய்வதை சாதிய அரசியல் என்று அவர் சொல்வதில் இருந்து உணர முடிகிறது” என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு பற்றி கருத்து தெரிவித்தபோதே, கருணாநிதி அவ்வாறு தெரிவித்தார்.
என்ன சொல்கிறார், கருணாநிதி,
“செய்தியாளர் ஒருவர் என்னிடம், ‘டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து சாதிப் பிரச்சினைகளை கிளப்புகின்ற வகையில் பேசிக் கொண்டே இருக்கிறாரே, அதைப்பற்றி அரசு நடவடிக்கை எடுக்கவில்லையே?’ என்று கேட்டார். அதற்கு பதில் கூறிய நான், ‘சாதி வெறியை கிளப்புகிறவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதுதான் எங்களுடைய கருத்து’ என்றுதான் பதில் அளித்திருக்கிறேன்.

கேள்வி கேட்ட செய்தியாளர்கள் பா.ம.க. பற்றி கேட்ட போதிலும், நான் அளித்த எந்தப் பதிலிலும் ‘பா.ம.க.’ என்ற வார்த்தையையோ, டாக்டர் ராமதாஸ் என்ற பெயரையோ பயன்படுத்தவே இல்லை.
அப்படியிருந்தும், என்மீது நெருப்பை வாரிக் கொட்டியிருக்கிறார், ராமதாஸ்.
‘வன்னியர்கள் மீது கருணாநிதிக்கு எந்த அளவுக்கு வன்மம் இருக்கிறது என்பதை உணர முடிகிறது’ என்கிறார் ராமதாஸ். அதன் பின்னணியை பாருங்கள். வன்னியர்கள் உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இடஒதுக்கீடு வேண்டுமென்று இவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதிலே சிலர் உயிரிழக்க காரணமாக இருந்தார்களே தவிர, வேறு எதையும் சாதிக்கவில்லை.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான், இவரை வீரபாண்டி ஆறுமுகம் மூலமாக நேரில் அழைத்து வரச்செய்து கலந்துரையாடி, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு தி.மு.க. ஆட்சியிலே வழங்கி 28–3–1989–ல் உத்தரவிடப்பட்டது.
இதையெல்லாம் டாக்டர் ராமதாஸ் வசதியாக மறந்து விட்டு அல்லது மறைத்துவிட்டு, வன்னியர்கள் மீது எனக்கு வன்மம் இருப்பதாகப் பேசியிருக்கிறார் என்றால், அவர் எந்த அளவிற்கு என் மீது ‘‘வன்மம்’’ கொண்டுள்ளார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. டாக்டருக்கு மட்டுமல்ல; நான் எல்லோருக்கும் விடுக்கும் வேண்டுகோள் – வெறுப்பு அரசியல் வேண்டாமே!” இவ்வாறு கூறியுள்ளார், தி.மு.க. தலைவர் கருணாநிதி.
இந்த விஷயத்தில், தி.மு.க. தலைவர் சொல்வது சரியானதே. டாக்டர் ‘ஆத்திர அரசியலில்’ எல்லா திசையிலும் அடிக்கிறார்!http://viruvirupu.com/

கருத்துகள் இல்லை: