வியாழன், 6 டிசம்பர், 2012

டெல்லி அரசு திருப்பி கொடுக்கும் மின்சாரத்தை கேரளாவுக்கு கொடுக்கும் மத்திய அரசு

தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளாக கடுமையான மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் 2 மணி நேரமும் மற்ற மாவட்டங்களில் நீண்ட நேரம் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. மின்பற்றாக்குறையை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக் குறையை சமாளிக்க தமிழக அரசு மத்திய அரசிடம் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்கும்படி கோரிக்கை விடுத்தது.
மேலும் டெல்லி அரசு திருப்பி கொடுக்கும் மின்சாரத்தை தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார். இதை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டது. அரியானா மாநிலம் சஜ்ஜாரில் உள்ள இந்திரா காந்தி அனல் மின் நிலையத்தில் இருந்து டெல்லிக்கு 231.17 மெகாவாட் மின்சாரம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. டெல்லிக்கு மற்ற மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து போதுமான அளவுக்கு மின்சாரம் கிடைக்கிறது. இதனால் டெல்லி அரசு தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் 231.17 மெகாவாட் மின்சாரத்தை மத்திய மின் தொகுப்பிற்கு திருப்பித்தர முடிவு செய்தது.
இதையடுத்து மத்திய அரசு டெல்லி அரசு திருப்பி தந்த 231.17 மெகாவாட் மின்சாரத்தை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான கேரளா-ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி கேரளாவுக்கு 100 மெகாவாட்டும், ஆந்திராவுக்கு 131.17 மெகாவாட் மின்சாரத்தையும் மத்திய அரசு வழங்குகிறது. ஆனால் டெல்லி திருப்பி கொடுத்த மின்சாரத்தை தமிழக அரசுக்கு சிறிதளவு கூட வழங்க மத்திய அரசு மறுத்து விட்டது.

மத்திய மின் தொகுப்பில் இருந்து கேரளாவுக்கு தற்போது 1200 மெகாவாட் மின்சாரம் தினசரி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி திருப்பி கொடுக்கும் மின்சாரம் மூலம் கேரளாவுக்கு கூடுதலாக 100 மெகாவாட் கிடைக்கிறது.

மத்திய அரசிடம் கோரிக்கை எதுவும் வைக்காமலேயே கேரளாவுக்கு மின்சாரம் கிடைத்ததால் கேரள மின் வாரிய அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக கேரள மின் வாரிய பொறியாளர்  ஒருவர் கூறுகையில், மத்திய அரசு கூடுதலாக 100 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதன் மூலம் கேரளாவுக்கு தொடர்ந்து தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கும் என்றார்.

கருத்துகள் இல்லை: