வியாழன், 15 நவம்பர், 2012

நேருவுக்கு சம்பத் எழுதிய கடிதம் மொழிப்போர் / அத்தியாயம் 12

ஆர். முத்துக்குமார்

7 ஏப்ரல் 1960 அன்று இந்திய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்திடம் இருந்து புதிய ஆணை ஒன்று வெளியானது. 1965 ஆம் ஆண்டு முதல் இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆகிவிடும். அதற்கான ஆயத்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதுதான் அதன் உள்ளடக்கம்.
இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆங்கிலமே இருக்கும் என்ற பிரதமர் நேருவின் வாக்குறுதியை அடித்து நொறுக்கும் வகையில் வெளியான இந்த அறிவிப்பு இந்தி பேசாத மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, தமிழ்நாட்டு முக்கிய அரசியல் அமைப்புகளான திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன குடியரசுத் தலைவரின் இந்தித் திணிப்பு அறிவிப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்குத் தயாராகின.
இந்தி என்னும் விஷ விருட்சத்தின் ஆணிவேரைக் கெல்லி எறிய ஒரே வழிதான் இருக்கிறது. அது, நாட்டுப் பிரிவினை. இந்திய யூனியன் வரைபடத்தில் தமிழ்நாடு தவிர்த்த மற்ற பகுதிகளுக்குத் தீவைத்து எரிக்கும் போராட்டத்தை நடத்தவேண்டும் என்று அழைப்பு விடுத்தார் திராவிடர் கழகத் தலைவர் பெரியார். திராவிடர் கழகத்தைப் பின்பற்றி திமுகவும் போராட்டத்தில் இறங்கத் தயாரானது.

18 ஜூன் 1960 அன்று குமாரபாளையத்தில் திமுக பொதுக்குழு கூடியது. இரண்டு நாள்களுக்கு நடந்த ஆலோசனைகளுக்குப் பிறகு மத்திய அரசின் இந்தித் திணிப்பு குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 30 ஆகஸ்டு 1960க்குள் குடியரசுத் தலைவர் தனது உத்தரவைத் திரும்பப்பெறவேண்டும். இந்தி பேசாத மக்களைக் கலந்தாலோசிக்காமல் இந்தி பற்றி முடிவெடுப்பதில்லை என்று அறிவிக்கவேண்டும். தவறினால், மறுநாளில் இருந்து இந்தி ஆதிக்கத்தில் இருந்து தென்னகத்தை விடுவிக்கும் விடுதலைப்போர் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
போராட்டத்தை நடத்துவதற்கு வசதியாக ஈ.வெ.கி. சம்பத் தலைமையில் போராட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் இரா. நெடுஞ்செழியன், க. அன்பழகன், மு. கருணாநிதி, கே.ஏ. மதியழகன் உள்ளிட்ட பலரும் இடம்பெற்றனர். போராட்டக்குழுவினர் விளக்கக் கூட்டங்கள், கண்டனக் கூட்டங்கள் ஆகியவற்றுக்கு ஏற்பாடுசெய்து, கலந்துகொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
திமுகவின் போராட்ட அறிவிப்பு முதலமைச்சர் காமராஜரின் கவனத்துக்குச் சென்றது. திமுகவினர் போராட்டம் நடத்தினால் அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டியிருக்கும் என்றார். முக்கியமாக, துப்பாக்கி இருக்கிறது. அதில் தோட்டாவும் இருக்கிறது என்று காமராஜர் பேசியதாக அண்ணாவுக்கு செய்தி வந்தது. “1938லே மொழிப்போர் நடந்தபோது மூன்று இளைஞர்கள்தான் தியாகம் செய்தனர். தற்போது திமுகவில் 3300 கிளைகள் இருக்கின்றன. மூன்று லட்சம் தொண்டர்கள் இருக்கிறார்கள்’ என்று காமராஜருக்குப் பதில் கொடுத்தார்.
பின்னர் பொதுக்குழுத் தீர்மானங்களைப் பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. அப்படியொரு பொதுக்கூட்டத்தில் பேசிய போராட்டக்குழுத் தலைவர் ஈ.வெ.கி. சம்பத்தின் பேச்சு கவனிக்கத்தக்கது.
‘காமராசருக்கு நாட்டு மக்கள் மீது, மொழியின் மீது நல்லெண்ணம் இருக்குமானால், இங்கு நடைபெறுவதை டில்லிக்கு எடுத்துச்சொல்லி, குடியரசுத் தலைவரின் தாக்கீதை நிறுத்திவைக்கச் சொல்லவேண்டும்… ஆனால் அவர் நம்முடைய மைதானத்துக்குள்ளே புகுந்து ஏதாவது செய்ய முடியுமா? என்று பார்க்கிறார். அதுதான் முடியாது’
பொதுக்குழுத் தீர்மானங்களை மக்களுக்கு விளக்கியதோடு நிறுத்திக்கொள்ளாமல் போராட்டக்குழுத் தலைவர் என்ற முறையில் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்துக்குக் கடிதம் ஒன்றை எழுதினார் ஈ.வெ.கி.சம்பத். ‘தவறான யோசனை அடங்கிய 27 ஏப்ரல் 1960 தேதியிட்ட தங்களுடைய கட்டளையில் அடங்கியிருக்கக்கூடிய, அச்சுறுத்துகின்ற கேடுகளை, திராவிட சமுதாயம் முழுதுமே எதிர்த்துக்கொண்டு இருப்பதுடன், மேற்படி கட்டளையைத் தாங்கள் திரும்பப்பெற்றுக்கொள்வதை பேராதரவுடன் எதிர்நோக்கி இருக்கிறது’ என்று எழுதியிருந்தார் ஈ.வெ.கி. சம்பத்.
திமுக சார்பில் பல பொதுக்கூட்டங்கள் நடந்தன. அவற்றின்மூலம் தமிழ் மக்கள் மத்தியில் இந்தித் திணிப்புக்கு எதிரான உணர்வுகள் மேலோங்கத் தொடங்கின. நிலைமை மோசமடைவதைத் தடுக்கும் வகையில் திமுக நடத்தும் கூட்டங்களுக்கு அனுமதி வழங்க மறுத்தது காமராஜர் தலைமையிலான தமிழக அரசு. ஏற்கெனவே தரப்பட்ட அனுமதிகளும் திரும்பப்பெறப்பட்டன. ஆனாலும் தடையை மீறிப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.
குடியரசுத் தலைவரின் இந்தித் திணிப்பு உத்தரவுக்குக்கு திராவிடர் கழகமும் திமுகவும் பலத்த எதிர்ப்புகளைத் தெரிவித்துக் கொண்டிருந்த சமயத்தில் 14 ஜூலை 1960 அன்று மதுரையில் கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, குடியரசுத் தலைவரின் இந்தித் திணிப்பு உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.
காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியதற்கு மறுநாள் ஈ.வெ.கி.சம்பத் தலைமையிலான இந்தி எதிர்ப்புப் போராட்டக்குழு கூடியது. இரா. நெடுஞ்செழியன், என்.வி. நடராசன், கே.ஏ. மதியழகன், க. அன்பழகன், மதுரை முத்து, கோவை. ராசமாணிக்கம், அன்பில் தர்மலிங்கம், கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அந்தக்கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
  1. சென்னையில் திமுக சார்பாக இந்தி எதிர்ப்பு மாநாட்டை நடத்துவது.
  2. போராட்டத்தில் ஈடுபட விருப்பமுள்ளோரின் பட்டியலைத் தயார்செய்து போராட்டக்குழுத் தலைவருக்கு அனுப்புமாறு கிளைக்கழகச் செயலாளர்களைக் கேட்டுக்கொள்வது.
  3. திமுக ஆதரவு மாணவர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு போராட்டத்தில் கலந்துகொள்வதில் இருந்து விலக்களிப்பது.
  4. போராட்ட நிதிக்காக 20 ஜூலை 1960 முதல் 27 ஜூலை 1960 வரை உண்டியல் மூலம் நிதிபெற்று தலைமைக் கழகத்துக்கு அனுப்பிவைக்குமாறு கழக நிர்வாகிகளைக் கேட்டுக்கொள்வது.
திட்டமிட்டபடி இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்று சென்னை கோடம்பாக்கத்தில் 1 ஆகஸ்டு 1960 அன்று கூடியது. மாநாட்டுக்கு முன்பாக இந்தி எதிர்ப்பு சுவரொட்டிகளைத் தயார் செய்து சுவர்களில் ஒட்டுவதற்குத் தயாராகினர் திமுக தொண்டர்கள். ஆனால் அவற்றுக்கு அரசு திடீர் தடை விதித்தது. அதுவும், ஆபாச சுவரொட்டித் தடுப்புச் சட்டத்தின்கீழ். அரசின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்கு பலத்த ஆதரவு இருந்தது.
விரைவில் தமிழ்நாட்டுக்குச் சுற்றுப்பயணம் வரவிருக்கும் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டவேண்டும் என்றும் இந்தித் திணிப்பு அறிவிப்பைத் திரும்பப் பெறுக என்று கோஷங்களை எழுப்பவேண்டும் என்றும் அந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. அந்தப் போராட்டத்தின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி அண்ணா பேசினார்.
கறுப்புக்கொடி காட்டுகிற நேரத்தில் குடியரசுத் தலைவரைத் திரும்பிப் போ என்று எவரும் சொல்லக்கூடாது. “இந்தி ஒழிக! கட்டளையைத் திரும்பப் பெறுக!’ என்றுதான் முழங்க வேண்டும். குடியரசுத் தலைவர் செல்லும் காரில் எதையும் எவரும் எறியக்கூடாது. அவர் தங்கியிருக்கும் கட்டிடத்துக்கு அருகில் எவரும் செல்லக்கூடாது. இவற்றை மீறுபவர்களை துரோகிகள் என்று சொல்லமாட்டேன்; மாறாக, அவர்கள் என் தம்பிகளே அல்ல!
போராட்ட தினத்தன்று தொண்டர்கள் ஏந்த வேண்டிய கறுப்புக்கொடிகளை அந்த மாநாட்டில் வைத்தே தலைவர்கள் வழங்கினர் அண்ணா. போராட்டம் பெரிய அளவில் இருக்கும் என்பதை உணர்ந்த மத்திய உள்துறை அமைச்சர், இந்தி ஆட்சி மொழி குறித்த அரசின் நிலைப்பாட்டை விளக்கும் வகையில் பேசினார்.
பிரதமரின் வாக்குறுதியில் இருந்து மாறுபடும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. அவர் அளித்த உறுதிமொழிக்கு ஏற்பவே அரசின் நடவடிக்கைகள் இருக்கும். இவையெல்லாம் குடியரசுத் தலைவரின் ஆணையிலேயே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1965க்குப் பிறகும் ஆங்கிலம் நீடிக்கவேண்டும் என்பதைத் திட்டவட்டமாகத் தீர்மானித்துவிட்டோம். இதை உறுதி செய்யும் வகையில் 1965க்கு முன்பாகவே நாடாளுமன்றத்தில் புதிய மசோதா கொண்டுவரப்படும்.
குடியரசுத் தலைவருக்குக் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தை நடத்துவது என்று முடிவுசெய்துவிட்ட நிலையில், அதுகுறித்து பிரதமர் நேருவுக்குக் கடிதம் எழுதினார் போராட்டக்குழுத் தலைவர் ஈ.வெ.கி. சம்பத். அந்தக் கடிதத்தில், ‘ஏற்க மறுக்கும் மக்கள் மீது இந்தி ஒருபோதும் திணிக்கப்பட மாட்டாது’ என்ற பிரதமர் நேருவின் உறுதிமொழியை நினைவூட்டிய சம்பத், அந்த உறுதிமொழியை உருக்குலைக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் உத்தரவு அமைந்துவிட்டதைப் பதிவுசெய்தார். மேலும், இந்தி பேசாத மக்ககளுக்கு பிரதமர் நேரு முன்னர் அளித்த உறுதிமொழியை மீண்டும் ஒருமுறை அளிக்கும் பட்சத்தில், இந்தப் பிரச்னையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையை இந்த சந்தர்ப்பத்தில் தணிக்கும் என்று நம்புவதாக எழுதியிருந்தார்.
அதற்குப் பதில் கடிதம் எழுதினார் பிரதமர் நேரு. அந்தக் கடிதத்தில், ‘மொழிப்பிரச்னை பற்றி நான் மக்களவையில் அளித்த வாக்குறுதிக்குப் புறம்பான காரியங்களை எப்போதும், எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் நிறைவேற்ற வாய்ப்பில்லை… நாங்கள் அளித்த வாக்குறுதிக்குக் கட்டுப்பட்டே இருக்கிறோம்’ என்று எழுதினார். இத்தனைக்குப் பிறகும் குடியரசுத் தலைவருக்குக் கறுப்புக்கொடி காட்டி அவரை அவமதிப்பது தமக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்றும் நேரு அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
நேருவின் பதில் கடிதம் குறித்து திமுகவின் போராட்டக் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட அதேசமயத்தில், ஐதராபாத் இந்தி பிரசார சபாவில் பேசிய குடியரசுத் தலைவர், ‘எதிர்காலத்தில் மொழிப்பிரச்னை குறித்து பரிசீலிக்கும்போது அல்லது விவாதிக்கும்போது, இந்தி பேசாத சகோதரர்களின் இடர்கள், உணர்ச்சிகள் புறக்கணிக்கப்பட மாட்டாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். நமது பிரதமர் அடிக்கடி பொதுமக்களிடமும் மக்களவையிலும் கூறியிருப்பது போன்று, இந்தி எவர் மீதும் திணிக்கப்பட மாட்டாது’ என்றார்.
பிரதமர் நேரு எழுதிய வாக்குறுதிக் கடிதம், குடியரசுத் தலைவரின் ஐதராபாத் பேச்சு ஆகிய இரண்டையும் மையமாக வைத்து 4 ஆகஸ்டு 1960 அன்று ஆய்வுசெய்தது திமுக போராட்டக்குழு. எதிர்பார்த்த இடத்தில் இருந்து நம்பிக்கை தரக்கூடிய உறுதிமொழிகள் பிரதமர் நேருவிடம் இருந்து கிடைத்துவிட்டதால் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது என்று அறிவித்தார் திமுக பொதுச்செயலாளர் இரா. நெடுஞ்செழியன். போராட்டம் முடிவுக்கு வந்தது, அப்போதைக்கு!

கருத்துகள் இல்லை: