செவ்வாய், 13 நவம்பர், 2012

INCA மாயன் மக்கள் உருவாக்கிய அடையாளங்கள்


மோட்டார் சைக்கிள் டைரி / அத்தியாயம் 14
Sacsayhuamán
இன்கா மக்களின் தலைநகரமாக இருந்த குஸ்கோ (Cusco) பெருவில் தென்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நகரம். யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக 1983ல் அறிவிக்கப்பட்ட குஸ்கோ, தற்போதைய பெருவின் வரலாற்றுத் தலைநகரமாகவும் திகழ்கிறது.
முற்றிலும் மலைகளால் சூழப்பட்ட இந்நகரை வந்தடைந்த எர்னஸ்டோ முதல் பார்வையிலேயே தன் மனத்தை பறிகொடுத்துவிட்டார். ‘பல யுகங்களின் மாயப் புழுதி’ படிந்த தெருக்களில் உற்சாகமாக நடைபோட்டார் எர்னஸ்டோ. இன்கா மக்களின் படைப்புக் கடவுள் விராகோச்சா தனது மக்களுக்காகப் பிரத்தியேகமாகத் தேர்ந்தெடுத்த பகுதி என்று இது நம்பப்படுகிறது. டவான்டின்சுயு (Tawantinsuyu)) என்னும் பெயரால் குறிக்கப்பட்ட இன்கா சாம்ராஜ்ஜியம், புதிய எல்லைகளைத் தேடி தன் பரப்பை அதிகரித்துக்கொண்ட போது, குஸ்கோவும் அதன் ஒரு பகுதியாக மாறியது.
12ம் நூற்றாண்டில் குஸ்கோவில் வசித்த மேய்ச்சல் நிலப் பகுதி மக்கள், மான்கோ கபாக் (Manco Capac) என்னும் தலைவரால் ஒன்றிணைக்கப்பட்டனர். குஸ்கோ அப்போது உருவான ஒரு நகரம். 1438ல் சாபா இன்கா என்பவர் (பூமியை உலுக்குபவர்) ஆட்சியை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கினார். அவரும் அவருடைய மகன் டுபாக் என்பவரும் இணைந்து பெரும்பாலான ஆந்திய மலைப்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.
‘பல யுகங்களின் மாயப் புழுதி’ என்று எர்னஸ்டோ வர்ணித்திருந்ததற்குக் காரணம் அதன் பழைமை மட்டுமல்ல, பழைமையின் எச்சங்கள் இப்போதும் காணக்கிடைத்ததுதான். உலகத்தின் மையமாக, பூமியின் தொப்புளாக குஸ்கோ திகழ்வதாக மாயன் மக்கள் கருதினார்கள். http://www.tamilpaper.net/?p=7114
கோட்டை, கொத்தளங்கள் கட்டி தங்கள் பேரரசை உருவாக்கினார்கள். பின்னாள்களில் வந்த ஸ்பானிய ஆக்கிரமிப்பாளர்களால் குஸ்கோ வசப்படுத்தப்பட்டது. அப்போது மாயன் மக்கள் உருவாக்கிய அடையாளங்கள் பெருமளவில் சேதப்படுத்தப்பட்டன. கிட்டத்தட்ட நாகரிகங்கள் அனைத்தும் இப்படிப்பட்ட அழிவை உலகம் முழுவதிலும் சந்தித்துள்ளன. அனைத்து நவீன நகரங்களின் காலடியின்கீழும் முந்தைய தலைமுறைகளின் வரலாறு புதைந்திருக்கிறது. குஸ்கோவின் சோகக்குரல்‘சூறையாடப்பட்ட சிதிலமடைந்த கோயில்களிலும், கொள்ளையடிக்கப்பட்ட அரண்மனைகளிலும், மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்ட இந்தியர்களிடத்திலும்’ ஒலிக்கிறது என்கிறார் எர்னஸ்டோ.
தங்கள் நகரத்தைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு மாபெரும் கோட்டையை (Sacsayhuamán) இன்கா பழங்குடிகள் உருவாக்கியிருந்தார்கள். நாடோடிகளாகத் திரிந்துகொண்டிருந்த பழங்குடிகள் நிலையான ஓரிடத்தில் தங்கள் குடியிருப்பை அமைத்துக்கொள்ள முடிவு செய்தபோது பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்தக் கோட்டையை உருவாக்கியிருக்கவேண்டும். ஆக்கிரமிப்பாளர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக அமைக்கப்பட்ட கோட்டையாக அது இருக்கமுடியாது என்கிறார் எர்னஸ்டோ. ‘ஒன்றன் பின் ஒன்றாக அமைக்கப்பட்ட சுவர்களைப் பார்த்தால், எதிரிகள் தாக்கும்போது, அவர்ளை எதிர்த்து மூன்று புறங்களிலிருந்தும் திருப்பித் தாக்கமுடியும் என்பதும் இந்தப் பாதுகாப்பையும் உடைத்துக்கொண்டு எதிரிகள் உள்ளே ஊடுருவினால், இதே போன்ற இன்னொரு சுவரையும், அதற்கப்பால் மூன்றாவதாக ஒரு சுவரையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதும் நன்கு புலனாகிறது. தற்காப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் புதிய யுக்திகளை மேற்கொள்வதற்கும் எதிர்த்தாக்குதலைத் தீவிரப்படுத்துவதற்கும் இது உதவும்.’
கொச்சுவா பழங்குடிகள் கணிதத்தில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் கொண்டவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்று ஆச்சரியம் கொள்கிறார் எர்னஸ்டோ. இன்கா நாகரிகத்துக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவர்களாக அவர்கள் இருக்கவேண்டும் என்பது அவருடைய கருத்து.
குஸ்கோ மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், வேறு வழியின்றி கோட்டையைவிட்டு வெளியேறி பள்ளத்தாக்கை நோக்கி மக்கள் நகர்ந்திருக்கவேண்டும். ‘தங்களுடைய பெருமைக்குரிய நிகழ்காலத்தைப் பற்றிய உணர்வு மிக்கவர்களாக விளங்கிய அவர்கள் தங்கள் மேலாதிக்கத்துக்குக் கடந்த காலத்தில் விளக்கம் தேடத் தொடங்கினார்கள். எனவேதான், அந்தப் பிரதேசத்தில் அவர்களை வலிமை மிக்கவர்களாக மாற்றிய சர்வ வல்லமை பொருந்திய கடவுளைப் போற்றுவதற்காக கோயில்களையும் பூசாரிகளையும் அவர்கள் உருவாக்கினார்கள். கொச்சுவாக்களின் மேன்மைமை அவர்கள் வடித்த சிற்பங்களில் காணலாம். ஆகவேதான் குஸ்கோவின் தோற்றத்தால் கவரப்பட்ட ஸ்பானிய வீரர்கள் படிப்படியாக அதை வென்றார்கள்.’
ஸ்பானிய படையெடுப்பு இன்கா நாகரிகத்தின் பெருமிதங்களைத் தேடித்தேடித் தகர்த்தது. கோயில்கள் இடிக்கப்பட்டன. ஆனால் அவர்கள் கட்டியமைத்த கோட்டைகள் உறுதியாக நின்றன. ‘துயரமான இன்கா மக்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை வழங்கும் இக்கடவுளுக்குப் பதிலாக, மகிழ்ச்சியான மக்களின் துயரமான கடவுள் சிலையை நிறுவுவதில் இவர்கள் குரூரமான மகிழ்ச்சி அடைந்தார்கள்… இன்கா மக்களின் நிலத்தைப் பறித்தவர்களுடைய கட்டடங்களுக்கு எத்தகைய பேரழிவு ஏற்பட்டபோதிலும், சூரியக் யோயிலின் ஒரு கற்பாளம்கூட அசையவில்லை.’
இன்கா ரோகா அரண்மனையைக் கட்டிய இந்தியர்களின் உழைப்பை நினைத்து பார்க்கிறார் எர்னஸ்டோ. ‘தனது கடவுளர்களின் பயங்கரமான பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்பார்த்து ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருந்த இந்தியனோ, பெருமைக்குரிய கடந்தகாலம் ஒன்று இருந்ததற்கான தடயங்களை அழித்துவிட்டு புற்றீசல்கள் போல கிறிஸ்தவத் தேவாலயங்கள் உயர்ந்தெழுவதைக் கண்டான். காலனியாதிக்க வெற்றியாளர்கள் தங்கள் அரண்மனைகளின் அடித்தளங்களைப் பயன்படுத்திய இன்கா ரோகா அரண்மனையின் ஆறுமீட்டர் உயரச் சுவர்கள், தோல்வியடைந்த வீரர்களின் வேதனையையே அற்புதமாகப் பிரதிபலிக்கின்றன.’
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பிரதேசத்தை எர்னஸ்டோ ஆர்வத்துடன் சுற்றி வந்தார். வரலாற்றுப் பக்கங்கள் அவர் கண்முன்னால் உயிர்பெற்று எழுந்து நின்றன. குஸ்கோ இனியும் பூமியின் தொப்புள் அல்ல, அது ஒரு புள்ளி மட்டுமே. ‘அதன் புதையல்கள் கடல்வழியாகப் புதிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, வேறு பேரரசர்களின் அரண்மனைகளை அலங்கரிக்கின்றன.’ ஆக்கிரமிப்புகளும் சூறையாடல்களும் குஸ்கோவைத் தொடர்ந்து அச்சுறுத்தின. பின்னாள்களில் தங்கம் மற்றும் வெள்ளிச் சுரங்கங்கள் குஸ்கோவில் கண்டுபிடிக்கப்பட்டன என்றாலும், குஸ்கோ இன்றளவும் சுரண்டப்படும் ஓரிடமாகவே இருந்ததை எர்னஸ்டோ கண்டார்.
மலைத்தொடர்களுக்கு நடுவே குஸ்கோவின் வெளிச்சம் தொலைந்துபோனது. சுற்றுலாப் பயணிகள் வந்துபோகும் மங்கிய ஓர் அடையாளமாக அது மாறிப்போனது. ‘பெருவில் இருந்த வெளியேறிய செல்வங்கள்மீது இடைத்தரகர்கள் விதித்த வரிகளின்மூலம், லிமா என்னும் புதிய நகரம் குஸ்கோவுக்குப் போட்டியாக பசிபிக் கடற்கரையில் வளர்ச்சியடைந்தது. இந்த மாற்றத்தில் புரட்சிகரத் தன்மை எதுவும் இல்லாவிட்டாலும்கூட, இன்கா மக்களின் அற்புதமான தலைநகரம் படிப்படியாக கடந்த காலத்தின் நினைவுச்சின்னமாக மாறிப்போனது.’


கருத்துகள் இல்லை: