சனி, 27 அக்டோபர், 2012

MGR: ரமணி என் படப்பாடல்களைப் பாடி மன அமைதியை இழந்த என்னை ச்ந்தோசப்படுத்தி விட்டார்!

உயிர் என்று ஒரு படம் 1971ல் வெளிவந்தது. முத்துராமன்,சரோஜாதேவி,லட்சுமி,நாகேஷ் நடித்த படம்.
பி.ஆர்.சோமு இயக்கத்த்தில்.அந்தப்படம் ரொம்ப சொற்ப நாளில் தயாரிக்கப்பட்டது.படத்தின் துவக்கத்தில் டைரக்டர் சோமு ஃபுல்சூட்டில் வந்து ஒரு குளோபை உருட்டியவாறு ”இறைவன் படைக்கும்போது மனிதனுக்கு கையை கொடுக்க மறக்கலாம்.காலைக்கொடுக்க மறக்கலாம்.கண்ணைக்கொடுக்ககூட மறக்கலாம்.ஆனால் எதைக்கொடுக்க மறந்தாலுமஆண்டவன்  ஒன்றை மட்டும் கொடுக்க மறப்பதே இல்லை. அது உயிர்!உயிர்!உயிர்!” (டைட்டில் ஆரம்பம்!)

பி.ஆர் சோமு அதற்கு முன் தெய்வசங்கல்பம்(1969) ஏ.வி.எம்.ராஜன் ,விஜயகுமாரி, முத்துராமன் நடிப்பில் இயக்கியவர்.
உயிர் படத்திற்குப்பிறகு எங்கள் குலதெய்வம், அழைத்தால் வருவேன், ராஜா யுவராஜா, சர்வம் சக்தி மையம் தாயே நீயே துணைபோன்ற படங்கள் இயக்கியவர்   . http://rprajanayahem.blogspot.com/2012/10/blog-post_26.html

உயிர் படத்திற்கு ஆறு பாடல்கள்.இரண்டு பேர் இசையமைப்பாளர்கள் என்று தீர்மானித்து  அந்த இரண்டு இசையமைப்பாளர்களுக்கும் மூன்று மூன்று பாடல்கள் என்று முடிவாகியிருக்கிறது.அந்த இசையமைப்பாளர்கள் ராஜையாவும் ரமணாஸ்ரீதரும்.

ராஜையா அந்தப் பட வாய்ப்பை அவரே துறந்தாரா அல்லது ஏதேனும் அரசியலோ தெரியவில்லை. அப்போது அப்படி தட்டிப்போன வாய்ப்பு அன்னக்கிளியில் 1975ல் கிடைத்து இளையராஜா ஆனார்!

ரமணாஸ்ரீதர் தனி இசையமைப்பாளராக ’உயிர்’படத்தில்அறிமுகமானார்.

’தண்ணீரில் ஏதடி நெருப்பு,இதை தாங்காமல் ஏனிந்த தவிப்பு’

”தனிமையிலும் நாணமா மைவிழியில் ஜாடையா பூமுகத்தை ஏன் மறைத்தாய் நான் வரையும் பொன்னோவியமே”

இந்த சௌந்தர்ராஜன் பாடல்கள் இந்தப்படத்தில் தான்!

இன்னொரு சுவையான தகவல்.கமல்ஹாசன் இந்தப்படத்தில் டான்ஸ் அசிஸ்டண்ட்.
கமல் போட்ட ஸ்டெப்ஸ் பார்த்து முத்துராமன் மிரண்டு போய் “ என்னப்பா கமல்! நான் என் வயசுக்கு நீ போடுற ஸ்டெப்பெல்லாம் போடமுடியுமா?’ என்றாராம்.

இந்த ரமணாஸ்ரீதர் வேறு வாய்ப்புகள் இல்லாமல் மெல்லிசைக்கச்சேரிகள் செய்து வந்தார். இவரிடம் சுவாரசியம் என்னவென்றால் சிவாஜி பாடல்களை சிவாஜியை இமிடேட் செய்து பாடுவார்.எம்.ஜி.ஆர் பாடல்களை எம்ஜிஆர் ஆக்சனில் பாடுவார்.

திருவையாற்றுக்காரரான ரமணி தீவிரமான சிவாஜி கணேசன்ரசிகர்!

பின்னால் ரமணி தன் பெயரை விஜய் ரமணி என்று மாற்றிக்கொண்டார். ’யாகசாலை’ என்று ஒரு படத்தில்  இசையமைத்து ரமணியே பாடிய பாடல்-
” ஒரு ரோசாப்பு சிரிக்கிறது! புது ராசாவை நினைக்கிறது!”
அந்தக்கால ‘சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு,மத்தாப்பு சுந்தரி ஒருத்தி ஒயிலாட வந்தாளாம்” பாட்டோடு ஒப்பிடப்பட்டது.
விஜய் ரமணியாக  விஷேசமாக இவர் சாதிக்காத நேரத்தில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது.

1980ல் நடந்த பாராளுமன்றத்தேர்தலில் எம்.ஜி.ஆர் இரண்டே தொகுதிகளை மட்டும் கைப்பற்றும்படியாகிவிட்டது. வெற்றியை மட்டுமே அதுவரை பார்த்து வந்த எம்.ஜி.ஆருக்கு தமிழகத்தில் சிவகாசி,கோபிசெட்டிப்பாளையம் ஆகிய இரண்டே தொகுதிகளே கிடைத்தது.பெரும் சரிவு!

உடனே தமிழகத்தில்  எம்.ஜி.ஆர் ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. அந்த நேரத்தில் ஒரு முக்கியத்திருமணம் நடந்தது. அந்தத்திருமணத்திற்கு எம்.ஜி.ஆர் வருகிறார்.மெல்லிசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்திருக்கிறது. எம்.ஜி.ஆர் கச்சேரியைப்பார்க்க உட்கார்கிறார்.மேடையில் ரமணி பாடகர்.
எம்.ஜி.ஆர் பாணியில் ஆக்சனுடன் பாடியிருக்கிறார்.
’என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே! இருட்டினில் நீதி மறையட்டுமே!தன்னாலே வெளிவரும் தயங்காதே! ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!’

 ரமணி கைகளை ஆட்டி பாடியதைப்பார்த்து  எம்.ஜி.ஆர் புன்சிரிப்போடு ரசித்திருக்கிறார்.

‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்த சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது
அங்கே சிரிப்பது யார் அழுவது யார் தெரியும் அப்போது!

நான் ஒரு கை பார்க்கிறேன். நேரம் வரும் கேட்கிறேன்.
பூனையல்ல புலி தான் என போகப்போக காட்டுகிறேன்
போகப்போக காட்டுகிறேன்!’

சரம் சரமாக எம்.ஜி.ஆர் பாடல்களை அவர் முன்னேயே ரமணி பாடியிருக்கிறார்.

எம்.ஜி,ஆர் மேடையேறி
‘’ என்னுடைய ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில் நான்  
மன அமைதியை இழந்திருந்தேன். இன்று ரமணி என் படப்பாடல்களைப் பாடி என்னை ச்ந்தோசப்படுத்தி விட்டார்! எனக்கு ரொம்ப ஆறுதலாயிருந்தது.அவருக்கு என் வாட்சை அன்பளிப்பாக தருகிறேன்.” என்று கையில் கட்டியிருந்த ரோலக்ஸ் வாட்சை க் கழட்டி விஜய் ரமணிக்கு கொடுத்து விட்டார்!
இப்படி எம்.ஜி.ஆர் எத்தனையோ பேருக்கு வாட்சைக்கழட்டிக்கொடுத்திருக்கிறார்.

....

”ஓரம்போ!ஓரம்போ!ருக்ம்ணி வண்டி வருது”  ராஜையாவுடன் ரமணி அந்தக்காலத்தில் கச்சேரியில் பாடிய “கண்ணம்மா!கண்ணம்மா!” தான்!

சினிமா சான்ஸ் பற்றி ரமணி சொன்னது இன்னும் மறக்கமுடியவில்லை.
“தம்பி!சினிமாவில நாளைக்கு வா நாளைக்கு வான்னு சொல்லியே கொன்னுடுவானுங்க!”


ரமணி பின்னால் எம்.எஸ்.வி, இளைய ராஜாவிடம் இசையமைப்பில் உதவியாளராக பணிபுரிந்தார்.
சில பாடல்களும் பாடியிருக்கிறார்.
அவருக்கு நடிகராக புனர்ஜென்மம் வாய்த்தது.  ராகவேந்தர்!
சிந்துபைரவியில் இவர் நடிகர்களின் பாணியில் பாடும் குணவிசேசத்தை கே.பாலச்சந்தர் பயன்படுத்திக்கொண்டார்.வைதேகி காத்திருந்தாள் படம் இவரை நடிகராக நிலைநிறுத்தியது. கமல் ஹாசனின் “ விக்ரம்” படத்தில்!

நடிகர் ராகவேந்தராகத்தான் இவரை இன்று தெரியும்.
பாடகி கல்பனாவின் தந்தை!

’..........

கருத்துகள் இல்லை: