புதன், 24 அக்டோபர், 2012

பழனி மாணிக்கம் பிரச்சனையால் சகோதரர்கள், ஒன்று சேர்ந்தார்கள்

தி.மு.க., வில் டி.ஆர்.பாலுவுக்கு எதிராக குரல் கொடுத்த, மத்திய இணை அமைச்சர் பழனி மாணிக்கத்தின் பதவியை பறிக்க, தலைமைக்கு நிர்பந்தம் கொடுப்பதாக, கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. டி.ஆர்.பாலுவுக்கு ஆதரவாக, அழகிரி மற்றும் ஸ்டாலின் தரப்பினர் இறங்கியுள்ளனர்.

கட்சியின் மூத்த நிர்வாகியான டி.ஆர்.பாலு மீது, மத்திய இணையமைச்சரும், தஞ்சை மாவட்டத்தின் செயலருமான பழனி மாணிக்கம், கடும் புகார்களைக் கூறினார். "தஞ்சை லோக்சபா தொகுதியை கைப்பற்ற, தன்னை கலந்து ஆலோசிக்காமல், ரயில்வே திட்டங்களை அறிவித்து வருகிறார்' என, பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.இதனால், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. மூத்த நிர்வாகிகளின் மோதலால், "நிம்மதி இழந்திருக்கிறேன்' என, தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
இதற்கிடையே, அழகிரியும், ஸ்டாலினும் மதுரையில் நேற்று முன்தினம், திடீரென சந்தித்துக் கொண்டனர். அப்போது, டி.ஆர்.பாலு மற்றும் பழனி மாணிக்கம் விவகாரம் குறித்து ஆலோசித்ததாகத் தெரிகிறது.
கட்சியின் மூத்த நிர்வாகி மீதான புகாரை, கட்சித் தலைமைக்குக் கொண்டு வராமல், பத்திரிகைகளில் பகிரங்கப்படுத்தும் அளவுக்கு, பழனி மாணிக்கம் சென்றது கடுமையாக கண்டிக்கத் தக்கது. இதுபோல, செயல்படுவதற்கு, அவருக்கு யார் தைரியம் கொடுத்தது என, அழகிரி கோபப்பட்டதாக, தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "சி.ஐ.டி., காலனியில் நடந்த பஞ்சாயத்துக்கு வரமுடியாது என, டி.ஆர்.பாலு சொன்னதை, கருணாநிதி பெரிதுபடுத்தவில்லை. டி.ஆர்.பாலு மீது தவறில்லை; அவரை கூப்பிட்டு கேட்க வேண்டிய அவசியமில்லை. பழனி மாணிக்கம் தான் எல்லை மீறி நடந்து கொண்டுள்ளார் என, மூத்த தலைவர்களிடம் கருணாநிதி வருத்தப்பட்டுள்ளார்' என்றார்.டி.ஆர்.பாலு, பழனி மாணிக்கம் விவகாரத்தில், டி.ஆர்.பாலுவுக்கு ஆதரவாக அழகிரியும், ஸ்டாலினும் கை கோர்த்துள்ளனர். இதனால், கனிமொழியின் ஆதரவாளரான பழனிமாணிக்கம் சிக்கிக் கொண்டுள்ளார்.
பழனி மாணிக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டால், கட்சியில் உள்ள மற்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்த மாதிரி ஆகிவிடும். கட்சிதலைமைக்குக் கட்டுப்படாமல், எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற காங்கிரஸ் கலாசாரத்தை, கட்சிக்குள் கொண்டு வந்துவிடுவர் என, தி.மு.க., வட்டாரங்களில் கருத்து நிலவுகிறது.அதே நேரத்தில், தன் குடும்பத்தில் இருக்கும் முக்கோண அரசியலில், ஒருவரின் கை சரிவதை, கருணாநிதி ஒப்புக் கொள்வாரா? எனவும் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், அழகிரியும், ஸ்டாலினும் இணைந்து கொண்டால், அதை மீறி கருணாநிதியால் ஒன்றும் செய்யமுடியாது என்றும் கூறுகின்றனர். எனவே, , பழனிமாணிக்கம் பலி கொடுக்கப்படுவார் என்றே தெரிகிறது.இதுகுறித்து, கருணாநிதி விரைவில் முடிவெடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார் என்றும், தி.மு.க., வட்டாரங்களில் கூறுகின்றனர்.
பணிந்தார் பழனிமாணிக்கம்:
தி.மு.க., எம்.பி., டி.ஆர்.பாலுவிற்கும், அக்கட்சியின் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கத்திற்கும் இடையே, சில நாட்களாக நிலவிய மோதல், நேற்று முடிவுக்கு வந்தது. கட்சியில் ஏற்பட்ட நெருக்கடியால், கருணாநிதியை சந்தித்து, பழனி மாணிக்கம் < மன்னிப்புக் கடிதம் அளித்தார். கனிமொழி எம்.பி., ஆதரவில் சில நாட்களாக, தனது கருத்துக்கு விடாப்பிடியாக நியாயம் கற்பித்து வந்த பழனிமாணிக்கத்திடம், கட்சித் தலைமைவிளக்கம் கேட்ட போது, "சமரசம் கிடையாது. ராஜினாமா செய்யவும் தயார்,' என, கூறியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் அழகிரியை, ஸ்டாலின் மதுரையில் சந்தித்த பின், பழனி மாணிக்கம் பிரச்னையின் கடுமை அதிகரித்தது. பல பிரச்னைகளில் கருத்து வேறுபாடுகளை கொண்டிருந்த அழகிரி, ஸ்டாலின் ஆகியோர், பழனி மாணிக்கம் பிரச்னையில் ஒத்த கருத்தை, கட்சித் தலைமையிடம் பதிவு செய்தனர்.
இவர்கள் கொடுத்த ஆதரவில் தான், கட்சி தலைமை கூட்டிய பஞ்சாயத்துக்குச் செல்ல டி.ஆர்.பாலு மறுத்தார். அதே நேரம், பழனி மாணிக்கத்திற்கு நெருக்கடி அதிகரித்தது. இந்நிலையில் நேற்று மாலை, கருணாநிதியை சந்தித்து, பழனிமாணிக்கம் மன்னிப்புக் கடிதம் கொடுத்துள்ளார். "அதை பதிவு செய்து கொள்கிறேன்' என, கருணாநிதி கூறியதாக, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: