வியாழன், 25 அக்டோபர், 2012

ஊழல் புகாரில் சிக்கியுள்ள கட்காரிக்கு அத்வானி வக்காலத்து

புதுடில்லி :""காங்கிரஸ் கட்சியினர், தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்புவதற்காகவே, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரிக்கு எதிராக புகார் கூறுகின்றனர். இது திட்டமிட்ட சதி,'' என, பா.ஜ., தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
ஆனால், பா.ஜ., - எம்.பி.,யும் பிரபல சட்ட நிபுணருமான, ராம் ஜெத்மலானியோ, "ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான கட்காரி, உடனடியாக, தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, கோரியுள்ளார்.பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரிக்கு எதிராக, சமூக ஆர்வலரும், புதிதாக அரசியல் கட்சியை துவக்கியுள்ளவருமான, அரவிந்த் கெஜ்ரிவால், ஏற்கனவே ஒரு புகாரை கூறியிருந்தார். தேசியவாத காங்., தலைவர் அஜீத் பவார் உதவியுடன், பல ஏக்கர் விவசாய நிலத்தை, கட்காரி அபகரித்ததாக, அவர் கூறியிருந்தார்.இந்நிலையில், கட்காரிக்கு எதிராக, மேலும் ஒரு ஊழல் குற்றச்சாட்டு, மீடியாக்களில் நேற்று முன்தினம் வெளியானது. அத்வானி தான் பிரதமாராக வரவேண்டும் என்பதற்காக விட்டால் கத்காரி காலில் விழுந்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை.

அதில் கூறப்பட்டதாவது:
மகாராஷ்டிராவில், சிவசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சியின் போது (1995-99), பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, மாநில பொதுப் பணித் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, "ஐடியல் ரோட் பில்டர்ஸ்'என்ற நிறுவனத்துக்கு, ஏராளமான ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்டன. இந்த காலத்தில், அந்த நிறுவனத்தின் லாப மதிப்பு, பல கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்தது.கடந்த, 1996ல், 41 கோடி ரூபாயாக இருந்த, அந்த நிறுவனத்தின் லாப மதிப்பு, 1999ல், 67 கோடி ரூபாயாக உயர்ந்தது. சிவசேனா-பா.ஜ., கூட்டணி ஆட்சியை இழந்தபின், கட்காரியின் நிறுவனமான, "புர்டி பவர் அண்டு சுகர்' நிறுவனத்தில், "ஐடியல்' நிறுவனம், முதலீடு செய்தது. இந்த நிறுவனம் மட்டுமல்லாமல், மேலும், 16 நிறுவனங்கள், கட்காரியின் நிறுவனத்தில், முதலீடு செய்துள்ளன.


ஆவணங்கள்



இது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தபோது, முதலீடு செய்த நிறுவனங்களின் இயக்குனர்கள் பற்றிய விவரங்கள் தெரிய வந்தன. இதன்படி, கட்காரியின் டிரைவர், அவரது கணக்காளர் மற்றும் அவர் நிறுவனத்தில் பணியாற்றும், இரண்டு ஊழியர்கள் ஆகியோரின் பெயர், இந்த நிறுவனங்களின் இயக்குனர்கள் பட்டியலில் இருந்தது.இவ்வாறு மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது.கட்காரி மீதான இந்த குற்றச்சாட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. "இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்' என, மத்திய கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியிருந்தார்.
இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, கட்காரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

நேற்று அவர் கூறியதாவது:மத்தியில் ஆளும், காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும், ஊழல் புகார்கள் தொடர்ந்து வெளியாகின்றன.தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்புவதற்காகவே, எதிர்க்கட்சி தலைவர்கள் மீது, காங்கிரஸ் கட்சியினரும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவோரும், பொய் புகார்களை கூறுகின்றனர். தற்போது, கட்காரிக்கு எதிராக புகார் கூறியுள்ளனர். இது ஒரு திட்டமிட்ட சதி.

எண்ணம் இல்லை



இந்த குற்றச்சாட்டுகள் குறித்த, எந்த விசாரணைக்கும் தயார் என, கட்காரி அறிவித்துஉள்ளார். அவரின் இந்த பேட்டி, வரவேற்க தக்கது. தானாகவே, விசாரணைக்கு அவர் முன்வந்துள்ளார். அதேநேரத்தில், ஊழல் புகாரிலிருந்து, அவரை பாதுகாக்கும் எண்ணம் எதுவும் கட்சிக்கு இல்லை.முறையான விசாரணை நடத்தப்பட்டால், கட்சி அதை வரவேற்கும். மற்ற அரசியல் கட்சிகளில், நாங்கள் வித்தியாசமானவர்கள். ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால், அதை கண்டு பயந்து, ஒதுங்கி விட மாட்டோம்.அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவோ, ஊழல் குற்றச்சாட்டோ, கட்காரி மீது கூறப்படவில்லை. அவரது தொழில் விஷயங்களை பற்றித் தான், புகார் கூறியுள்ளனர்.இவ்வாறு அத்வானி கூறிஉள்ளார்.

ராஜினாமா



பா.ஜ., சார்பில், ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டவரும், பிரபல சட்ட நிபுணருமான, ராம் ஜெத்மலானி கூறுகையில், ""கட்காரி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. உடனடியாக, அவர், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்,'' என்றார்."ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பை சேர்ந்தவரும், சட்ட நிபுணருமான, பிரசாந்த் பூஷன் கூறுகையில், ""கட்காரிக்கு எதிராக, உடனடியாக, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்து, விசாரணையை துவங்க வேண்டும்,'' என்றார்.

ஆர்.எஸ்.எஸ்., மவுனம்



கட்காரி மீதான குற்றச்சாட்டு குறித்து, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கூறுகையில், ""இது, பா.ஜ.,வின் உட்கட்சி விவகாரம். இது குறித்து நான் எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது,'' என்றார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பிரசாரகர், மோகன் வைத்யா கூறுகையில், ""கட்காரி மீதான குற்றச்சாட்டுகள், மீடியாக்களில் தான் வெளியாகி வருகின்றன. தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, கட்சி தலைமையிடம், கட்காரி விளக்கம் அளிப்பார்,'' என்றார்.

கருத்துகள் இல்லை: