வெள்ளி, 26 அக்டோபர், 2012

எனது பரிந்துரைகளை ஏற்கவில்லை:அமைச்சர் அழகிரி குற்றச்சாட்டு

மதுரை:""இளைஞரணி நிர்வாகிகள் தேர்வில், நான் அளித்த பரிந்துரைகளை ஏற்கவில்லை,'' என, மத்திய அமைச்சர் அழகிரி, நேரடியாக குற்றம்சாட்டினார்.மதுரையில், அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
தி.மு.க., தென் மாவட்ட அமைப்பு செயலர் என்ற முறையில், இளைஞரணியில் தேர்வு செய்யப்பட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், என்னை சந்தித்தனர். இத்தேர்வில், மதுரை நகர் மற்றும் மாவட்டத்துக்கு, நான் அளித்த பரிந்துரைகள், ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. மாணவரணி உட்பட, பதவிகளுக்கு, நான் பரிந்துரைத்தவர்களுக்கு, பதவி கிடைக்கவில்லை. பிற மாவட்டங்களிலும், என் பரிந்துரைகள், ஏற்றுக் கொள்ளப்பட வில்லை.தி.மு.க., கட்சி நிலவரம் குறித்து, எனக்கு எதுவும் தெரியாது. தி.மு.க., நிர்வாகிகள் மீது, தொடர்ந்து பொய் வழக்குகளை பதிவு செய்வதை தவிர, அ.தி.மு.க., வேறு எதுவும் செய்யவில்லை.
உரம் விலையை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப் படுகின்றன. விவசாயிகளுக்கு நேரடியாக உர மானியம் வழங்கும் திட்டம், பிரணாப் முகர்ஜி, நிதி அமைச்சராக இருந்த போது, கொண்டு வரப்பட்டது. இன்னும் அந்த திட்டம், பரிசீலனையில் உள்ளது.

மத்திய அமைச்சர் என்ற முறையில், மதுரை வளர்ச்சிக்காக, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அ.தி.மு.க.,வினர், அதற்கு விழா எடுக்கின்றனர். மேலூர் பகுதியில், கிரானைட் பாலிஷ் யூனிட், நகரில், 18 நவீன இலவச கழிப்பறைகள் ஏற்படுத்தினோம். இப்போது அவை, கட்டண கழிப்பறைகளாக மாறிவிட்டன.ஜப்பான் பயணம் மூலம், தமிழகத்தில், பல ஆயிரம் கோடி மதிப்பீட்டில், தொழில் துவங்க திட்டம் அறிவிக்கப்பட்டும், தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லை.மாநிலத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்னையை சமாளிக்க, கூடுதல் மின்சாரம் கேட்டு, தமிழக முதல்வர், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது மட்டும் போதாது. டில்லி சென்று பேச வேண்டும். தட்டுப்பாட்டை சமாளிக்க, கூடங்குளம் போன்ற மின் திட்டங்களை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அழகிரி கூறினார்.
"ஆப்சென்ட்' ஆனஸ்டாலின் "குரூப்!':தி.மு.க.,வில், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில், தேர்வு செய்யப்பட்ட இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, இலக்கிய அணி, மீனவரணி நிர்வாகிகள், மத்திய அமைச்சர் அழகிரியை, நேற்று சந்தித்த போதும், ஸ்டாலின் ஆதரவாளர்களான நகர் செயலர் தளபதி, நகர் இளைஞரணி அமைப்பாளர் மூவேந்தன் உள்ளிட்டவர்கள், நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. நகர் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அன்புநிதி, ஜீவன் ரமேஷ், ராமசுப்பிரமணியம் என, ஒருசிலர் மட்டுமே வந்திருந்தனர்.

பதினான்கு பகுதிகளை சேர்ந்த ஸ்டாலின் ஆதரவு நிர்வாகிகள், நிகழ்ச்சியை புறக்கணித்தனர். நிர்வாகி ஒருவர் கூறுகையில், "அழகிரியிடம் பெயர் வாங்க வேண்டும் என்று நினைத்து, ஒரு சிலர், சுயநலத்துக்காக, திடீர் என்று இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். அதனால் நாங்கள் பங்கேற்கவில்லை' என்றார்.

கருத்துகள் இல்லை: