புலிகள் அமைப்பின் அன்றைய தலைவராக இருந்த உமா மகேஸ்வரன் அவர்கள் சில விடயங்களை மிகவும் தீர்க்கதரிசனத்துடன் கூறியிருந்தார்.
அவர் கூறிய விடயம் யாதெனில் : „ தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதப்போராட்டம் ஒன்றை தொடங்கியிருக்கின்றோம். இவ்வாயுதப்போராட்டத்தை நாம் மிக மிக குறுகிய காலத்தில் முடித்துக்கொள்ளவேண்டும். நாம் இப்போராட்டத்தை வருடக்கணக்கிற்கு கொண்டு செல்வோமாக இருந்தால் இலங்கையின் இராணுவம் அதீத வளர்ச்சி பெறும், எமது விடுதலைப் போராட்டம் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்படும், பயங்கரவாதத்தை ஒடுக்கும் பெயரில் வடகிழக்கின் கிராமங்கள் தோறும் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும், முகாம்களில் உள்ளவர்களின் பெயரால் எமது குடிமனைகளின் மத்தியில் இராணுத்தினருக்கான குடிமனைகள் அமைக்கப்படும். „ என உமா மகேஸ்வரன் போராளிகளுக்கு மாத்திரம் தெரிவித்திருக்கவில்லை ஆயுதப்போராட்டத்திற்கு தூபமிட்ட தமிழ் தலைவர்களுக்கும் தெரிவித்திருந்தார்.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இன்றுள்ளோர், அன்று அவர் கூறிய விடயத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அன்று உமாமகேஸ்வரன் அவர்களால் கூறப்பட்ட மேற்படி விடயங்கள் யாவும் நிதர்சனமாகியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய தேர்தல் பிரச்சாரத்திற்கு கிடைத்துள்ள அவல் யாதெனில் அன்று அவர் கூறிய விடயங்களேயாகும். எனவே மக்கள் தொடர்ந்தும் முட்டாள்களாக இருக்க கூடாது. இவர்கள் மீண்டும் தொடக்க புள்ளிக்கு வந்துள்ளனர் என்பதை உணரவேண்டும். கொடிய போரினால் சிதைந்து போன எம் இனம் இன்று ஒரு புதிய முகத்துடன் தனது பயணத்தை தொடரவேண்டிய நிலையில் உள்ளது.
எனவே ஓரளவேனும் தமிழ் மக்களின் நலன்களுடன் அரசியல் நகர்வுளை மேற்கொள்ளும் கட்சியாக புளொட் அமைப்பு காணப்படுகின்றது. அக்கட்சி யாழ்பாணம், மட்டக்களப்பு, வன்னி ஆகிய மாவட்டங்களில் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றது. வன்னி மாவட்டத்தில் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தலைமையில் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். தமிழ் தலைவர்கள் யாவருமே இன்று சோரம் போயுள்ள நிலையில், கடந்த 30 வருடங்களாக தமிழ் மக்களின் விடுதலைக்காக இதயசுத்தியுடன் தமது முழுப்பங்களிப்பையும் புலிகளின் ஆயுதப்போராட்டத்திற்கு வழங்கிவந்த புலம்பெயர் மக்களில் பலர் எதிர்காலத்தில் சித்தார்த்தன் ஒருவரை மாத்திரமே நம்ப முடியும் என்ற கருத்தைக் கொண்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. ஆனால் தாம் கொண்டிருந்த புலிக்கோட்பாட்டிலிருந்து விலகிக் செல்ல முடியாதவர்களாக சிலரும், புலம்பெயர் புளொட் கிளைச் செயற்பாட்டாளர்களின் மக்களுடனான அணுகு முறைகளில் அதிருப்தியடைந்தவர்களாக சிலரும் தமது கருத்துக்களை, முடிவுகளை திடமாக முன்வைக்க அல்லது வெளிக்கொணர தயங்குகின்றமையையும் காணக்கூடியதாகவுள்ளது.
ஆனால் நீங்கள் காட்டும் இத்தயக்கம் மேலும் சில மணித்தியாலயங்கள் நீடிக்குமானால், மீண்டும் ஒருமுறை பச்சோந்திகளின் கைக்கு தமிழ் மக்களின் தலைவிதி செல்லும் என்பதை உணர்ந்து கொண்டு, தமது வாக்குகளை மிகவும் அவதானமாக பயன்படுத்துமாறு உங்கள் உறவுகளை வேண்ட வேண்டும்.
புளொட் அமைப்பின் கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பான நியாயமான விமர்சனங்கள் என்னிடமும் உண்டு. ஆனால் இன்று தமிழ் தேசியத்திற்கு தலைமைதாங்கக் கூடியவர் யார் என்ற கேள்வியை கேட்கும்போது அதை ஓரளவேனும் செய்யத்தகுந்தவர் சித்தார்த்தன் அவர்கள் என்ற முடிவுக்கு வரலாம். இலங்கையிலே முதல்தர ஜனநாயகவாதி எனக்குறிப்பிடக் கூடிய அன்றைய சோவியத் இலங்கை நட்புறவுக் கழக தலைவரும், தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபக உறப்பினரும், சிறந்த சட்டத்தரணியும், இலங்கை அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுக்கு நேர் எதிராக தனது சொந்த செல்வத்தை சமுதாய தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ள ஒரு வரலாற்றைக் கொண்டவருமான திரு தர்மலிங்கம் அவர்களின் புதல்வரான சித்தார்த்தன் அவர்கள், தான் அனுபவித்திருக்க கூடிய சகல சுகபோகங்களையும் துறந்து, கடந்த 1961 களிலிருந்து தமிழ் மக்களின் உரிமைக்களுக்காக தன்னை முற்றுமுழுதாக அர்பணித்துள்ளார் என்றால் அது மிகையாகிவிடாது.
1961 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட சத்தியாகிரக போராட்டகங்களில் 11 வயதினிலே தனது தந்தையாருடன் கலந்து கொண்ட சித்தார்த்தன் அவர்கள், தொடர்ச்சியாக தமிழ் மக்களின் உரிமை வேண்டிய அகிம்சைப் போராட்டங்கள் யாவற்றிலும் கலந்து கொண்டதுடன் உரும்பிராய் சிவகுமாரன் போன்றவர்களுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தார். பின்னர் செட்டி தனபாலசிங்கம் போன்றோர் சிறையுடைத்து வெளியே வந்தபோது அவர்களை சில காலங்கள் குடாநாட்டின் பல பகுதிகளிலும் மறைத்து வைத்திருந்தார். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டபோது சித்தார்த்தன் அவர்கள் தஞ்சம் வழங்கினார் என்ற விடயங்கள் பொலிஸாருக்கு தெரியவருகின்றது. பொலிஸார் இவரை கைது செய்யப்போகின்றனர் என்ற விடயம் அன்று யாழ் பொலிஸ் நிலையத்தில் இருந்த அதிகாரி ஒருவரால் சித்தார்த்தன் அவர்களின் தந்தையாருக்கு அறிவிக்கப்படுகின்றது. அதன் காரணமாக இவர் உடனடியாக லண்டனுக்கு தப்பிச் செல்ல நேரிடுகின்றது.
1983 களில் இலங்கையில் கலவரங்கள் வெடித்து இளைஞர்கள் இராணுவப் பயிற்சிக்காக இந்தியா நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, லண்டனில் தனக்கு கிடைக்கவிருந்த பிரஜா உரிமையையும், அன்று தான் வகித்த பதில் கணக்காளர் பதவியையும் (Assistant Accountant) தூக்கி எறிந்து விட்டு இந்தியா சென்றார். இந்தியா , லெபணான் என தனது காலங்களை தமிழீழப் போராட்ட வேலைத்திட்டங்களுக்காக கழித்த அவர் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் நாடு திருப்பியதுடன் உமாமகேஸ்வரனின் மறைவின் பின்னர் புளொட் அமைப்பின் தலைமை பொறுப்பையும் ஏற்றார்.
புலிகளின் அராஜகங்களை நியாயப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வரலாற்றில் 2 காலங்கள் உண்டு. தமிழ் தேசியம் எனும் வெற்றுக்கோஷத்தைக் கிளப்பி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளையும் அபகரித்து பாராளுமன்றம் சென்று தமிழ் மக்களுக்கு எந்த விதத்திலும் கடமைப்படாதவர்களாக, புலிகளின் ஆராஜகங்களை நியாயப்படுத்தியவண்ணம் புலிகளுக்கு தம்மை சிறந்த சேவர்களாக கண்பித்தவாறு தமது குடும்பங்களை செல்வந்த நாடுகளில் குடியேற்றியும், தமது பொருளாதாரத்தை பெருக்கும் கைங்கரியங்களிலும் ஈடுபட்பட்ட காலம் வசந்தகாலம்.
மே 17ம் திகதிக்கு பின்னர் மஹிந்தவின் காலடியில் அட்டாங்க நமஸ்காரம் செய்து, நாம் பிரபாகரனை என்றும் ஏற்றவர்கள் அல்லர், இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளது தலைவர்களையும் புலிகளே சுட்டுக்கொன்றுள்ளனர். நாம் புலிகளின் ஆயுதத்தின் மீது கொண்ட பயத்தின் காரணமாகவே புலிகளை ஏற்றுக்கொள்வதாக கூறியிருந்தோம் என கூறி, மீண்டும் வடகிழக்கு மக்களை ஏமாற்றுவதற்காக மஹிந்தவின் அடுக்களையில் சுருண்டு கொண்டனர். அப்போது இவர்களுக்கு வவுனியாவிலே சுமார் மூன்று லட்சம் மக்கள் கஞ்சிக்கு கையேந்தி நின்றமையும், 11000 இளைஞர் யுவதிகள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையும் கண்களுக்கு தெரியவில்லை. மாறாக அரசாங்கம் செய்கின்ற விடயங்கள் யாவற்றிலும் எமக்கு பூரண திருப்தி என சர்வதேச, உள்நாட்டு ஊடகங்களுக்கு அரசின் செயற்பாடுகளை நியாப்படுத்தவும் செய்தனர்.
இந்நிலையில்தான் ஜெனரல் பொன்சேகா தேர்தலில் குதித்தார். அவருடன் தென்னிலங்கைக் கட்சிகள் பல கைகோர்த்தன. ஆய்வுகள் யாவும் பொன்சேகா அமோக வெற்றியீட்டப்போகின்றார் எனக் கூறின. மஹிந்தவின் அடுக்களையில் கண்ணை மூடிக்கொண்டு பால் குடித்துக்கொண்டிருந்த பூனைகள், ஜெனரல் பொன்சேகா வெற்றியீட்டப்போகின்றார், இவருடன் சேர்ந்தால் புலிகளுடன் இணைந்திருந்தாற்போல் ஏனைய தமிழ் கட்சிகளை ஒரம் கட்டி நாம் வடகிழக்கில் தனித்தவில் அடிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பில் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால் யாவும் தலைகீழாக மாறியது. 22 ஓட்டை கொண்ட வெற்றுப்பானை கீழே விழுந்தது 4 துண்டுகளாக உடைந்தது. இக்காலத்தை இலையுதிர்காலம் எனலாம்
எரியிற நெருப்பில பிடிங்கினது மிச்சம் என பிரபாகரனுக்கு சாமரம் வீசி தமது பதவிகளை தக்கவைத்துக் கொண்டனர். தமிழ் மக்களின் அவலங்களில் நின்று அரசியல் செய்யவிரும்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றுமே தமிழ் மக்களுக்கு சாத்தியாமான தீர்வொன்றை பெற்றுக்கொள்ள முயற்சிக்கவில்லை. அத்துடன் புலிகளுடன் இணைந்து நின்று தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்க கூடிய வாய்ப்புக்களை தட்டிக்களித்தே வந்துள்ளது. என்றுமே அவலக்குரல் எழுப்பி அரசியல் புரிய விரும்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அன்று தமிழ் இளைஞர்கள் கைகளில் ஆயுதங்களை திணித்தது. இவ்வாயுதப்போராட்டம் ஆரம்பமானபோது புலிகள் அமைப்பின் அன்றைய தலைவராக இருந்த உமா மகேஸ்வரன் அவர்கள் சில விடயங்களை மிகவும் தீர்க்கதரிசனத்துடன் கூறியிருந்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக