“நாங்கள் இப்பிடி ஒரு வீட்டை இனிவரும் காலத்திலை கட்டமாட்டம். நாங்கள் வந்திருக்கிற கஷ்டத்துக்கு எங்களால இப்பிடிச் செய்ய ஏலாது. ஒரு நாளைக்கு 100, 150, 200 உழைச்சு இந்த வீட்டை கட்டமாட்டம். அரசாங்கம் கட்டித் தாறதவிட மக்களுக்குச் செய்ய வேணுமெண்டு இவையளுக்கு ஓர் உணர்வு இருந்தது பெரிய விசயம். இத நாங்கள் சாகும் வரை மறக்கமாட்டம்.” சந்தோஷக்கண்ணீர் விழியில் முட்ட நெகிழ்ந்துபோகிறார் கிருஷ்ணமூர்த்தி.
வயல் வெளியில் காவலுக்காக அமைக்கப்படும் சிறு கொட்டிலிலும் பார்க்க குறுகிய ஓர் இடத்தில் மனைவி, நான்கு பிள்ளைகளுடன் சுருண்டு கிடந்தவருக்கு இராணுவத்தினர் அமைத்துக் கொடுத்திருக்கும் வீடு நிம்மதியைத் தந்திருக்கிறது. நெல்லியடி ராஜகிராமத்தில் ஒரு பரப்புக் காணித்துண்டு இருந்தாலும், அவரால் இந்த ஜென்மத்தில் இப்படி ஒரு வீட்டைக் கட்டியிருக்க முடியாது என்கிறார். கிருஷ்ணமூர்த்தியின் நான்கு பிள்ளைகளுக்கும் ஐந்து வயதுக்கும் குறைவாகத்தான் இருக்கும். எல்லோரும் ஒரே வயதினையொத்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். கூலித் தொழில் செய்து வாழ்க்கையோடு போராடும் இவரைத் தெரிவுசெய்து வீடமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் என்றால் முதலில் அந்தத் தெரிவுக்குத் தலைவணங்க வேண்டும்.
வன்னியில் இருந்து மீளக்குடியமர்வதற்காக யாழ்ப்பாணம் வந்து இப்படி கஷ்டப்படுகிறவர்களுக்கென வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற இராணுவத்தினரின் கருத்தியலின்படி சுமார் 700 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இவற்றுள் தற்போதைக்குச் சுமார் 400 வீடுகள் நிர்மாணித்து முடிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் வறிய நிலையில் உள்ள பஞ்சைகளைத் தேர்ந்தெடுத்தே வீடுகளை நிர்மாணித்திருக்கிறார்கள். ஒரு பட்டாலியன் பிரிவு குறைந்தது பதினைந்து வீடுகளை நிர்மாணிக்க வேண்டும் என்பது கொள்கையாகும். அதன்பிரகாரம் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் இப்போது பயனாளிகளுக்குக் கையளிக்கப்பட்டு வருகின்றன.
பயனாளி கிருஷ்ணமூர்த்தி 2006 வரை இராசலிங்கம் ஒழுங்கையில் தான் வசித்து வந்திருக்கிறார். அந்த ஒழுங்கையில் அடிக்கடி பிரச்சினை. தூசண வார்த்தைகளின் பொழிவு என மற்றவர்களின் இடையூறுகளால் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கியவருக்கும் அவரின் மாமனார் ராஜகிராமத்தில் ஒரு பரப்புக் காணித்துண்டை எழுதிக் கொடுத்திருக்கிறார். அரச உத்தியோகம்புரியும் அவர் வன்னியில் இருக்கும் மூத்த மகளின் வீட்டுக்குச் சென்றிருந்த போது மரணமாகிவிட்டார். அவரின் அந்தியேட்டிக்குக் குடும்பத்துடன் சென்றிருந்து பாதை மூடப்பட்டதால் அங்கேயே முடங்கி சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து மீண்டும் யாழ் திரும்பியிருப்பவர்தான் கிருஷ்ணமூர்த்தி.
“வன்னியில் அனுபவிச்ச கஷ்டங்கள எப்பிடிச் சொல்றதெண்டு தெரியல. பிள்ளையள உசிரோட காப்பாத்தி கொண்டுவந்ததே பெரிய விஷயம். எங்கட உறவினர் நிறைய பேர் செத்துப்போச்சினம். ஒவ்வோர் இடமா அலைஞ்சு திரிஞ்சு வவுனியாவுக்கு வந்தம். அங்க வரேக்கையும் விடல்ல. பிறகு போன பத்தாம் மாசம் 26ஆம் திகதி விக்கினேஸ்வராவில் கொண்டுவந்து இறக்கினார்கள். கிராமத்துக்கை போய் வீட்டைப் பாத்தா பாழடைஞ்சு கிடக்கு. அதுக்குப் பிறகுதான் எங்கட இந்தக் காணிக்கு வந்தம். இதோ இந்தக் கொட்டிலிலைதான் இருந்தம்” இதுவரை தங்கியிருந்த கொட்டிலைக் காட்டி விம்முகிறார் கிருஷ்ணமூர்த்தி. மனைவியின் சகோதரியினது வீட்டின் பின்பக்க ஓடையில் கிடக்கிறது அந்தக் கொட்டில். அதனை கொட்டில் என்றும் கூறமுடியாது. நரகம்! என்றாலும் வன்னியில் இதனைவிட கேவலமாக இருந்ததாகக் கூறி சற்று ஆறுதலடைகிறார். “இப்பிடி ஒரு நிலை வருமெண்டு நாங்கள் நினைக்கேல்ல. இந்த நிலை நீடிச்சு சந்தோசமா வாழத்தான் விரும்புறம்” என்பது அவரின் எதிர்பார்ப்பு.
கடுமையாகக் கஷ்டப்படும் குடும்பங்களைத் தெரிவு செய்வதற்குக் கிராமசேவை அலுவலர், பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் எனக் கிரமமாக உதவியிருக்கிறார்கள் இராணுவத்தினருக்கு. சொந்தக் காணி உள்ள குடும்பங்களுக்குத்தான் இந்தத் திட்டம் முதலில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தெரிவுசெய்யப்பட்டுள்ள அனைத்துக் குடும்பங்களுமே வன்னியில் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்வதற்காக யாழ் வந்தவை தான். இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ள குணசிங்கம் கமலத்தின் கதை ஒரு கண்ணீர் வரலாறு. புதிய வீடு நிர்மாணிக்கப்படும் வரை ஒரு மலசல கூடத்தின் ஆதாரத்துடன் அந்தக் குடும்பம் நாட்களை நகர்த்தி வந்திருக்கிறது.
“சரிஞ்சு கிடக்க ஒரு இடம்தான் முக்கியம், சாப்பாடு இல்லாட்டாலும் நிம்மதியா உறங்கவேணும். கஞ்சிய காய்ச்சி குடிச்சிட்டு கிடக்கலாம். சரிஞ்சு கிடக்க இடம் வேணும். இப்ப நிம்மதியா இருக்கிறம். நாங்கள்பட்ட பாட்டுக்குக் கனவிலும் நினைக்கேல்ல இப்பிடிச் செய்வாங்கள் எண்டு. இப்ப நெஞ்சில உறுதி வந்திட்டுது. எங்களுக்கு எல்லா உதவியும் செய்வினம் எண்ட நம்பிக்கை வந்திட்டுது. நாங்கள் இருந்த கொட்டிலை குழப்பிப்போட்டு இந்த மாளிகையைத் தந்திருக்கினம்.” மகன், மருமகள், பேரப்பிள்ளைகள் சகிதம் வந்து சந்தோஷத்தைக் கொட்டுகிறார் கமலம். ஒவ்வொரு வார்த்தையிலும் ஓர் அழுத்தம். இந்த யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டுக்கொண்டு இருப்பவர்கள் இவ்வாறான அப்பாவி ஏழைகள்தான். பணம் படைத்தவர்கள் ஏதோ ஒரு பாதையை வகுத்து வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்கிறார்கள்.
இராஜகிராமம் மழை காலங்களில் வெள்ளத்தால் மிதக்கும். அப்போது ஊர்ப்பள்ளிக்கூடமே மக்களுக்குத் தாழ்வாரம். புதிய வீடுகளைச் சற்று உயரமாக அமைத்திருக்கிறார்கள் இராணுவத்தினர். யுத்தம் நிறைவடைந்துவிட்டது. இனி மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற கரிசனைதான் எங்களுக்கு. இந்தப் போரில் உயிரிழந்த அல்லது முகாமில் உள்ள முன்னாள் புலி உறுப்பினர்களுக்கும்கூட இந்த வீடமைப்புத் திட்டத்தில் உதவியிருக்கிறோம் என்கிறார்கள் இராணுவத்தினர்.
இந்த வீடமைப்புத் திட்டத்திற்கு ஒத்துழைப்பைப் பெற்றுக்கொடுப்பதில் பாதுகாப்பு அமைச்சில் பணியாற்றும் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டிருக்கிறார்கள்.எமது இந்தத் திட்டத்திற்குத் தென்பகுதி மற்றும் யாழ் வர்த்தகர்கள் உதவிகளை வழங்கியிருக்கிறார்கள். எவரிடமும் நிதி சேகரிக்கப்படவில்லை. மூலப் பொருள்களைப் பெற்றுத்தருமாறே கேட்டோம். அதன்படி ஒவ்வொரு வீடும் சுமார் மூன்று இலட்சம் ரூபாய் மூலப் பொருளில் அமைக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் சுமார் ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதிவாய்ந்தது. யாழ்ப்பாண அரசாங்க அதிபர் வீடுகளை நிர்மாணிப்பதற்கென ஒரு வீட்டுக்குப் பன்னிரண்டு கூரைத் தகடுகளைப் பெற்றுக்கொடுத்திருக்கிறார்.” வரணி 52ஆம் படைப் பிரிவின் மூன்றாவது சிங்க றெஜிமன்ரைச் சேர்ந்த லெப்டினன்ற் கேணல் சம்பத் பண்டார வீட்டின் நிர்மாணப் பணிகள் குறித்து விளக்குகிறார். சிறிய வீடுதான். என்றாலும் தமிழர் கலாசாரத்திற்கு ஏற்ப சுவாமி அறை, சமையலறை, படுக்கையறை என நேர்த்தியாக அமைத்திருக்கிறார்கள். கொட்டிலில் காலத்தைக் கழித்தவர்களுக்கு இந்தப் புதிய வீடுகள் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இனி அவர்களுக்கு உறையுள் பற்றிக் கவலைகொள்ளத் தேவையில்லை. அன்றாடம் வாழ்க்கையை நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தினாலே போதுமானது. பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும் என்ற சிந்தனை மேலோங்கியிருப்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது.
“வன்னியில் இருந்து திரும்பவும் யாழ்ப்பாணம் வந்தபோது எங்கள யாரும் என்னெண்டும் கேட்கல்ல. இவங்கள் வீட்டைக் கட்ட வந்தபோது எங்களுக்கும் சாப்பாடு கொடுத்துக் கவனிச்சாங்கள். பிள்ளையள் அம்மாமாரைக் கும்பிட வேணும். நாங்கள் இப்ப பிள்ளையள் இவையளைக் கும்பிடுறம். எங்களுக்கு அப்பிடி உதவி செய்தாங்கள்.” குணசிங்கம் கமலம் தன் உள்ளக்கிடக்கையை வெளிக்கொணர வரணி 52ஆம் படைப்பிரிவின் மூன்றாம் பிரிவின் பொறுப்பதிகாரி கப்டன் ரமேஷ மற்றொரு முக்கிய விடயத்தை நினைவூட்டுகிறார். “கேளுங்க நாங்கள் இங்க வீட்ட கட்ட வந்தநேரம் இந்த அக்காமார் மட்டும்தான் இருந்தாங்க. நாங்கள் அவங்களுக்கும் சாப்பாடு குடுத்தம்” இப்போது இராணுவத்தினர் நன்றாகவே தமிழ் கதைக்கிறார்கள். பெண்கள் தனியே பிள்ளைகளுடன் இருந்தநேரம் அவர்களுக்குப் பிரச்சினைகள் இல்லாமல் பார்த்துக்கொண்டதை விளக்கினார் ரமேஷ. ஏனென்றால் முன்பு இராணுவத்தினர் என்றால் ஓர் அச்சமான சூழல் நிலவியது. தற்போதைக்கு அதனைப் பொய்யாக்கியிருக்கிறோம் என்பதுதான் அவரின் கருத்து.
“நாங்கள் முதலில் இருந்தே நல்லா கஷ்டப்பட்டிட்டம். இந்த வீட்ட இவையள் கட்டித்தந்தது சரியான சந்தோஷம். நிறுவனமொன்று கொஞ்சம் காசு தந்திருக்கு. அதிலை வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்க இருக்கிறன்” குணசிங்கம் குமார் சந்தோஷ மிகுதியில் திழைக்கிறார்.
ஏனோ தெரியவில்லை. எவ்வளவுதான் செய்துகொடுத்தாலும் உடன மறந்துவிடுகிறார்களே என்ற மஞ்சுளவின் ஆதங்கத்தைக் குமாரிடமும் கிருஷ்ணமூர்த்தியிடமும் கேட்டால் “சிலர் இருப்பின. நாங்கள் அப்பிடிச் செய்யமாட்டம். இந்த வீட்டப் பார்த்துக்கொண்டு இருக்குமட்டும் எங்களால மறக்க முடியுமா? மாரி மழைக்கெல்லாம் ஸ்கூலுக்குத்தான் போறனாங்கள். காலம் முழுக்க பெரிய கஷ்டத்தை அனுபவிச்சிட்டம். இவங்களுக்கு இது புண்ணியமா போகும்.” என்று சான்று வழங்குகிறார்கள்.
வளம் கொழிக்கும் யாழ்ப்பாணத்தில் எந்தப் பிரச்சினையும் இன்றி மக்கள் சுதந்திரமாய் சுவாசிக்கும் நிலை இருந்திருந்தால் இந்தப் பஞ்சைகளின் வாழ்க்கையும் செழிப்படைந்திருக்கும். எதிர்காலத்திலாவது மக்கள் துன்பங்களிலிருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ வேண்டும். அதற்குத் தம்மாலான பங்களிப்பைச் செய்யவேண்டும் என்பதுதான் தமது நோக்கம் என்கிறார்கள் இராணுவத்தினர். அதன் விளைவாக பிறந்ததுதான் இந்த வீடமைப்புத் திட்டம்.
காணி உள்ளவர்களுக்கு வீடமைத்துக் கொடுக்கப்படுகிறது. அவ்வாறென்றால் காணி இல்லாதவர்கள் இனங்காணப்படவில்லையா அப்படி எவரும் இல்லையா? இருந்தால் அவர்களுக்கு எப்படி உதவுவார்கள்? என்ற நம் கேள்விக்கு “முதலில் காணி உள்ளவர்களுக்குத்தான் இந்தத் திட்டம், காணி இல்லாதவர்களுக்குக் காணியைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க காத்திருக்கிறோம்” என்று பதில் அளிக்கிறார் லெப்டினன்ற் கேணல் சம்பத் பண்டார.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக