எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரனையும், ரெலோ இயக்கத் தலைவர் செல்வம் அடைக்கலநாதனையும் ஓரம் கட்டும் திட்டத்தில் இருப்பதாக, சம்பந்தனுடன் நெருக்கமான தொடர்புடைய வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.
புலிகளால் கடந்த பொதுத்தேர்தலின் போது நியமிக்கப்பட்ட பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை, பலருடைய எதிர்ப்புகளுக்கு மத்தியில் துணிந்த ஓரம்கட்டி, தமது கட்சிக்கும் புலிகளுக்கும் இனிமேல் தொடர்புகள் எதுவும் கிடையாது என்பதை நிரூபித்து, இலங்கை - இந்திய அரசுகளின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுக் கொண்ட சம்பந்தன், தற்பொழுது முன்னாள் ஆயுதக்குழுக்கள் எவற்றுடனும் தமக்கு தொடர்பு இல்லை என்பதை நிரூபிக்க தருணம் பார்த்துக் காத்திருப்பதாகத் தெரிய வருகிறது.
சம்பந்தனின் முன்னைய நெருங்கிய சகாவும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமான திரு.வீ.ஆனந்தசங்கரி, முன்னாள் ஆயுதப் போராட்ட இயக்கங்களான புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். (நாபா) அணி என்பனவற்றுடன் ஒரு கூட்டு அமைத்திருந்ததும், பின்னா தற்போதைய பொதுத்தேர்தலக்கு முன்னர் விடுத்த ஒரு அறிக்கையில், தாம் இனிமேல் எந்தவொரு முன்னாள் ஆயுதப் போராட்ட இயக்கத்துடனும் தொடர்பு வைக்கப்போவது இல்லை எனவும் அறிவித்துவிட்ட ஒரு சூழலில், சம்பந்தனும் இவ்வாறான ஒரு மன நிலையில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. அதன் மூலம் திரு.வீ.ஆனந்தசங்கரியைப் போல தானும் ஒரு தூய்மையான ஜனநாயகக் கட்சியின் தலைவர் என்பதை நிலைநாட்ட சம்பந்தன் விரும்புவதுடன், வருங்காலத்தில் திரு.வீ.ஆனந்தசங்கரியை தனது அணியில் இணைத்துப் பலப்படுத்தவும் முடியும் எனவும் சம்பந்தன் கருதுவதாகத் தெரிகிறது.
கடந்த காலங்களில் ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ என்பன இந்திய இராணுவத்துடன் இணைந்து செயல்பட்டு வந்த காலத்தில், பல மோசமான மக்கள் விரோதச் செயல்பாடுகளில் அவை ஈடுபட்டு வந்ததாக இன்று வரை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அன்றைய காலகட்டத்தில் செயற்பட்ட ‘மண்டையன் குழு’ என்ற கொலைக்குழுவிற்கு சுரேஸ் பிரேமச்சந்திரனே பொறுப்பாக இருந்து செயற்பட்டு வந்துள்ளார் என்பதும் பலரும் அறிந்த உண்மை. இது போன்ற பல குற்றச்சாட்டுகள் செல்வம் அடைக்கலநாதனின் ரெலோ மீதும் உண்டு. அவர் மீது போதை வஸ்து கடத்தல் சம்பந்தமான குற்றச்சாட்டுகளும் உள்ளதாகக் கூறப்படுகின்றது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு, புலிகளை ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுச் செயல்பட்ட காலத்தில், சம்பந்தன் தலைமையிலான குழுவினர் நிர்ப்பந்தம் காரணமாகவே அவர்களுடன் சேர்ந்திருந்ததாகவும், ஆனால் சுரேஸ், அடைக்கலநாதன் போன்றோர் முற்றுமுழுதாக புலிகளின் கொலைகாரச் செயல்களுடன் ஒத்துழைத்துச் செயல்பட்டதாகவும், சம்பந்தன் குழுவினர் அண்மைக்காலமாக தனிப்பட்ட முறையில் கதைப்பவர்களிடம் கூறி வருகின்றனா என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்னொரு விடயமும் சுரேஸ் மீது சம்பந்தன் குழுவினர் அதிருப்தி கொள்ளக் காரணம் என்று கூறப்படுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து புலிகளின் தீவிர ஆதரவாளர்களை சம்பந்தன் குழுவினர் ஓரம்கட்டிய பின்னர், அதை ஈடுசெய்யுமுகமாக சித்தார்த்தன் தலைமையிலான புளொட்டையும், இ.துரைரத்தினம் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்மநாபா அணி) யையும் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் சேர்த்து, அதைப் பலப்படுத்த சம்பந்தன் குழு எடுத்த முயற்சியை, சுரேஸ் தான் தீவிரமாக எதிர்த்து நின்று முறியடித்ததாகக் கூறப்படுகின்றது. ஏனெனில் அவர்கள் உள்ளே வந்தால், எதிர்காலத்தில் சம்பந்தனுக்குப் பின்னர் கூட்டமைப்பின் தலைமைப் பதவியைக் கைப்பற்றக் காத்திருக்கும் சுரேஸ், தனக்கு இடையூறாக அமைந்துவிடும் என்று கருதியதால் ஆகும். இது சம்பந்தனுக்குப் பின்னர் கூட்டமைப்பின் தலைமையைக் குறி வைத்திருக்கும் மாவை சேனாதிராசாவுக்கும் சுரேஸ் மீது ஆத்திரம் திரும்பக் காரணமாகிவிட்டது.
ஆனால் தற்போது சுரேஸ் தமிழ் கூட்டமைப்புக்குள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ‘பிடியை’ப் பார்க்கும் போது. நடைபெறப் போகின்ற பொதுத்தேர்தலில் சுரேஸ், அடைக்கலநாதன் ஆகியோர் தோல்வியடைவார்கள் என்ற சம்பந்தன் குழுவின் எதிர்பார்ப்பு வெற்றி பெற்றால் மட்டுமே அவர்களின் திட்டங்கள் வெற்றி பெறமுடியும். அவ்வாறு அவர்கள் தோல்வியடையாவிட்டால், அரசியலில் ‘பழமும் தின்று கொட்டையும் போட்ட’ சம்பந்தன் அதற்காக தனது முயற்சியைக் கைவிடப் போவது இல்லை என்பதும் உண்மையாகும்.
அரசியலைப் பொறுத்தவரையில், அதுவும் தமிழர் அரசியலைப் பொறுத்த வரையில், என்ன நேரத்தில் என்ன நடக்கும் என்று ஆனானப்பட்ட அரசியல் விற்பன்னர்களாலேயே எதிர்வு கூற முடியாத ஒரு சூழல்தான் இன்று நிலவுகின்றது. ஏனெனில் ஒரு காலத்தில் சம்பந்தன் குழுவின் மாபெரும் தலைவராக இருந்த அ.அமிர்தலிங்கத்தை பிரபாகரன் கொலை செய்ததும், அவ்வாறு கொலை செய்த பிரபாகரனை சம்பந்தன் குழுவினர் தமது ஏகத் தலைவனாக ஏற்று இருந்ததும், பின்னர் பிரபாகரனை கொலை செய்த முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவை ஆபத்பாந்தவனாக ஏற்று, அவருக்கு தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கக்; கோரியதும், சம்பந்தனின் அரசியல் நாகரீகம் அல்லது தமிழரின் பாரம்பரியம் என்றால், நாளை என்னென்ன புதிய பாரம்பரியங்களை அவர்கள் வரலாற்றில் உருவாக்கக் காத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக