திங்கள், 12 செப்டம்பர், 2011

அஞ்சலி குப்தா தற்கொலை பாலியல் புகார் கூறி டிஸ்மிஸ் ஆன பெண் விமானப்படை



Anjali Gupta

போபால்: உயர் அதிகாரிகள் மீது பாலியல் புகார்களைக் கூறியைத் தொடர்ந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட பெண் விமானப்படை அதிகாரி அஞ்சலி குப்தா தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

விமானப்படையில் பிளையிங் ஆபிஸராக இருந்தவர் அஞ்சலி குப்தா. 35 வயதான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். உயர் அதிகாரிகள் தன்னை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்ததாக புகார் கூறினார். இதையடுத்து கடந்த 2005ம் ஆண்டு ராணுவ கோர்ட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

அந்த விசாரணையில், அஞ்சலி கூறியவை பொய்யான புகார்கள் என்று நிரூபிக்கப்பட்டது. மேலும், ஒழுங்கீனம், மேலதிகாரிகளுக்குப் பணியாதது, நிதி முறைகேடு உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அவை நிரூபிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அவரை டிஸ்மிஸ் செய்யவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி அவர் பதவி பறிக்கப்பட்டது.

இதையடுத்து பெங்களூர் வந்து செட்டிலான அஞ்சலி குப்தா அங்கு தனியார் வேலையில் இணைந்தார்.

இந்த நிலையில் போபாலுக்கு வந்த அஞ்சலி குப்தா, அங்கு குரூப் கேப்டன் அமீத் குப்தாவின் குடும்பத்தினருடன் அவரது வீட்டில் தங்கினார். அமீத் குப்தா சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெறும் தனது மகனின் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்று விட்டார்.

10ம் தேதி இரவு குப்தா குடும்பத்தினர் திரும்பி வந்தனர். அப்போது கதவைத் தட்டியபோது அஞ்சலி திறக்கவில்லை. அவர் தூங்கிக் கொண்டிருக்கலாம் என்று கருதிய அமீத் குப்தா குடும்பத்தினர், அஞ்சலியை தொந்தரவு செய்ய விரும்பாமல், அரேரா காலனியில் உள்ள தங்களது உறவினர் வீட்டுக்குப் போய் தங்கினர். நேற்று காலை மீண்டும் வீட்டுக்கு வந்தபோது கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அமீத் குப்தா போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

போலீஸார் வந்து கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தபோது மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்குப் போட்டுக் கொண்டு அஞ்சலி குப்தா தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. அவரது உடலைப் போலீஸார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

அஞ்சலி குப்தாவின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

கருத்துகள் இல்லை: