செவ்வாய், 27 செப்டம்பர், 2011

நான் ஒரு துரோகி அல்ல – கருணா

-   ஜமீலா நஜ்முடீன்
karuna270911மீள்குடியேற்ற பிரதி அமைச்சரான கருணா என்றழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளீதரன், போரினால் இடம்பெயர்நத மக்களில் மீதமாக மெனிக்பாம் முகாமில் தங்கியுள்ளவாகளை மீள்குடியேற்றுவது தொடர்பான நகர்வுகளையும், மற்றும் சில புலம் பெயர் தமிழ் குழுக்களினால் எழுப்பப் பட்டுள்ள கவலைகளைப்பற்றியும்  சண்டே லீடரிடம் பேசுகிறார்.
  • கேள்வி: அமைச்சரே! உள்ளக இடப்பெயர்ச்சிக்கு ஆளானவர்களை மீள்குடியேற்றும் விடயத்துக்கு என்ன நடக்கிறது? இந்த முழு நடவடிக்கையும் ஒரு முடிவுக்கு வருவதை எப்போது நாங்கள் காணப்போகிறோம்?
பதில்: அநேகமாக 98விகிதமான மீள்குடியேற்றங்கள் இப்போது பூர்த்தியாகி உள்ளன. இப்போது எங்களிடம் 7,000பேர்களே மீள்குடியேற்றப்படுவதற்காக மெனிக்பாமில் காத்திருக்கிறார்கள். மேலும் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 600குடும்பங்களும்,ஒரு திட்டத்துக்காக சம்பூர் பகுதியில் சில காணிகள் கையகப் படுத்தப்பட்டதால் வேறு இடங்களில் குடியமர்த்தப்படுவதற்காக எங்களிடம் உள்ளார்கள். இந்தத் திட்டம் ஏற்கனவே ஆரம்பமாகி விட்டது. ஆகவே இந்த மக்களை நாங்கள் வேறு இடங்களில் குடியமர்த்த வேண்டியுள்ளது. கிழக்கு மாகாண ஆளுனர் இப்போது இந்த விடயத்தைக் கவனித்து வருகிறார், மற்றும் அரசாங்கம் இவர்களுக்கு மீள்குடியேற்றத்துக்காக இலவசமாகக் காணிகளை வழங்குவதை விரைவாக உறுதி செய்யவேண்டியுள்ளது.
  • கேள்வி: அரசாங்கத்திடம் மெனிக்பாம் முகாமை மூடிவிடுவதற்கான திட்டங்கள் உள்ள அதேவேளை இந்த முகாமிலுள்ள உள்ளக இடம் பெயர்ந்தவர்கள் தங்கள் சொந்த வீடுகளில் மீள்குடியமர்த்தப்பட மாட்டார்கள் எனவும் அவர்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப் படுவார்கள் என்றும் சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொருவரும் தங்கள் சொந்த இடங்களிலேயே மீள்குடியமர்த்தப் படுவதை நடைமுறைப் படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. இந்த விடயம் உண்மையா?
பதில்: இது முற்றாக உண்மையில்லை. ஆனால் இந்தப் பிரதேசங்களில் நாங்கள் சில சிறிய பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது என்பதை நான் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். முல்லைத்தீவு பகுதியிலுள்ள சில பகுதிகள் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக தெரிவு செய்யப் பட்டுள்ளன. இந்தக் காணிகள் முன்னர் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தவை. எங்களது பாதுகாப்பு பிரிவினர் சில குறிப்பிட்ட பிரதேசங்களில் பாரிய இராணுவ முகாம்களை அமைத்து வருகின்றனர். இந்தப் பிரதேசங்கள் ஏற்கனவே எல்.ரீ.ரீ.ஈயினரின் கட்டுப்பாட்டில் இருந்தவை. இதேபோன்ற தளங்கள் திருகோணமலை, கொழும்பு, கட்டுநாயக்கா போன்ற இடங்களிலும் உள்ளன. இப்போது அரசாங்கம் வடக்கிலும் பாரிய இராணுவத் தளம் ஒன்றை அமைக்க திட்டமிட்டு வருகிறது. இதன்காரணமாக ஒரு சிறிய விகிதத்தினரது காணிகள் நாங்கள் இராணுவத் தளம் அமைக்க திட்டமிட்டுள்ள பிரதேசத்துக்குள் வரக்கூடும். எப்படியாயினும் இந்த மக்கள் கவலைப்படுவதற்கு தேவையில்லை. ஏனெனில் ஜனாதிபதி இந்த மக்களுக்கு முறையான வீடுகளை அமைத்து அவர்களது சொந்த இடங்களுக்கு அருகிலேயே மீள்குடியமர்த்துமாறு எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்.
  • கேள்வி: போர்தான் இப்போது முடிவடைந்து விட்டதே, ஏன் அரசாங்கத்துக்கு புதிய முகாம்கள் அல்லது இராணுவத் தளங்கள் தேவைப்படுகின்றன?
பதில்: நாட்டின் பாதுகாப்பிற்காக முறையே ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்களுக்கு இராணுவ தளங்கள் தேவைப்படுகின்றன. ஒரு யுத்தம் இருந்தால் மட்டும்தான் எங்களுக்கு இந்த இராணுவ தளங்கள் தேவைப்படுகின்றன என்று சொல்ல முடியாது. ஏனெனில் உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் தாங்கள் யுத்தங்களை எதிர்நோக்கினாலும் அல்லது எதிர்கொள்ளாவிட்டாலும் இராணுவ தளங்களைப் பராமரித்து வருகின்றன. இந்தியாவில்கூட அநேகமாக எல்லா மாநிலங்களிலும் பிரதானமான இராணுவத் தளங்கள் அமைந்திருப்பதைக் காணலாம். நாங்கள் சிறிய இராணுவ முகாம்களை அகற்றி ஒவ்வொரு மாவட்டத்திலும் இவைகளை இணைத்து பெரிய ஒரு இராணுவத் தளத்தை அமைக்கத் திட்டமிட்டு வருகிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இராணுவ முகாம். ஒரு கடற்படை முகாம். மற்றும் ஒரு வான்படை முகாம் என்பவவைகளை பராமரிக்க நிச்சயித்துள்ளோம். அதே நேரத்தில் நாட்டில் பயங்கரவாதிகளின் பிரச்சினை முடிவடைந்து விட்டது என்று எங்களால் சொல்ல முடியாது. தற்போதுள்ள நிலவரங்களின்படி அச்சுறுத்தல் இல்லை என்று எங்களால் நூறு சதவிகிதம் சொல்ல முடியும்.  ஆனாலும் புலம்பெயர் சமூகத்திலுள்ளவர்கள் இன்னும் தொடர்ந்து ஸ்ரீலங்காவுக்குள் ஒரு தனிநாடு தேவை என்று கோரிக்கை எழுப்பி வருகிறார்கள்.
  • கேள்வி: புலம்பெயர் சமூகத்தினரால் நாங்கள் ஒரு அச்சுறுத்தலை எதிர்நோக்குகிறோம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அது எவ்வளவு பெரிய அச்சுறுத்தல்?
பதில்: தமிழ் புலம்பெயர் சமூகத்திலுள்ளவர்கள் நமது மக்கள். அவர்கள் எல்லோரும் ஸ்ரீலங்கா மக்களே, நாங்கள் அவர்களை தூக்கி எறிந்துவிட முடியாது. எப்படியாயினும் அவர்களும் நடைமுறை நிலைமைகளை விளங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் அதை ஒருபோதும் புரிந்து கொண்டதில்லை. உதாரணத்தக்கு முல்லைத்தீவு மாவட்டம் போரினால் மிகவும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. புலம்பெயர்ந்தவாகளிடம் ஏராளமான பணம் மற்றும் தொழில்நுட்பம் என்பன உள்ளன. ஆனால் அவர்கள் ஒருபோதும் இந்தப் பகுதிகளை முன்னேற்ற முன்வரவில்லை. அவர்கள் எப்பொழுதும் தங்கள் சொகுசான சூழலிலிருந்து குரலெழுப்பி வருகிறார்கள். ஆனால் இந்த உள்ளக இடம்பெயாந்தவர்களுக்காக இதுவரை அவர்கள் ஒரு வீட்டைத்தானும் கட்டித் தரவில்லை. சில ஐரோப்பிய நாடுகளும் இந்தப் புலம்பெயர்ந்தவர்களை பின்தாங்கி வருகிறது, ஏனெனில் எங்கள் பிராந்தியத்தில் நாங்கள் பல நண்பர்களைப் பெற்றுள்ளதால் இந்த ஐரோப்பிய நாடுகள் ஸ்ரீலங்கா அபிவிருத்தியடைந்து முன்னேறுவதை விரும்பவில்லை.
உதாரணத்துக்கு இந்தியா எமது உறவினர். அதேநேரம் சீனா, யப்பான் பாகிஸ்தான் போனறவை எமது நண்பர்கள். நாங்கள் இந்தியாவை ஒருபோதம் புறந்தள்ளியதில்லை, அதேபோல சீனாவும் எங்கள் நாட்டை அபிவிருத்தி செய்ய உதவி வருவதால் அதுவும் எங்களுக்குத் தேவை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். யப்பான்கூட எங்களுக்கு பல நன்கொடைகளை வழங்கியுள்ளது. சமீபத்திலகூட மட்டக்களப்பில் ஒரு பாலம் அமைப்பதற்கு யப்பான் 1,600 மில்லியன் ரூபாக்களை வழங்கியுள்ளது.
நாங்கள் இந்த நாடுகளுடன் மிகவும் நெருக்கமாக உள்ளதினால், அமெரிக்கா ஸ்ரீலங்காவில் ஒரு சீன ஆக்கிரமிப்பு நடைபெறுவதாக இப்போது கவலைப்படுகிறது. ஐரோப்பா கூட ஒரு சீன ஆக்கிரமிப்போ அல்லது இந்திய ஆக்கிரமிப்போ இங்குள்ளதாகக் கவலைப்படுகிறது. இது மேற்கினாலும், ஐரோப்பாவினாலும் தவறாக மேற்கொள்ளப்படும் ஒரு அணுகுமுறை. ஏனெனில் இதன் காரணமாக ஸ்ரீலங்காவில் என்ன நடக்கிறது என்பதில் அவர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
  • கேள்வி: நாடுகடந்த அரசாங்கத்தைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
பதில்: நாடுகடந்த அரசாங்கம்  என்பது சட்டபூர்வமற்ற முறையில் உருவாக்கப்பட்டது. மற்றும் எந்த ஒரு நாடும் அதற்குப் பின்துணை செய்யவில்லை.
  • கேள்வி: நீங்கள் தமிழர்களின் துரோகி என்று சில புலம்பெயர் குழுக்கள் எழுப்பும் குற்றச்சாட்டுகளுக்கு நீங்கள் எப்படி பதில் சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்: நானல்ல துரோகி. பிரபாகரன்தான் துரோகி. நான் எல்.ரீ.ரீ.ஈ யில் இருந்தபோது நாங்கள் யுத்தத்தில் சண்டையிட்டதுக்குக் காரணம் நாங்கள் அரசாங்கத்தால் புறந்தள்ளப் படுகிறோம் என்று நினைத்ததினால்தான். விசேடமாக 1983 கலவரத்தின்போது பல தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.அந்த நாட்களில் நாங்கள் நினைத்தோம் எங்களுக்கு இந்த நாட்டில் வாழ உரிமையில்லை என்று, எனவே நாங்கள் போரை ஆரம்பித்தோம். எப்படியாயினும் சில காலங்களுக்குப்பின் யுத்தம் உயிர்வாழ்வதற்கு வேண்டிய ஒன்றாக மாறியது.ஆனால் எமது மக்களை காப்பாற்றுவதற்குப் பதில் எமது மக்களில் அநேகம்பேர்  செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் உணர்ந்தோம். ஒவ்வொருவரும் சாகும்போது சுதந்திரத்தால் என்ன பயன்? இது தவறானது என்பதை நான் உணர்ந்து கொண்டதோடு, இந்த நாட்டில் சமாதானத்தை காணவேண்டும் என்று விரும்பியதால் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் நடத்தப்பட்ட சமாதானப் பேச்சுகளிலும் ஈடுபாடு கொண்டேன்.
நான் பிரபாகரனையும் மாற்ற முயற்சித்தேன். மற்றும் இது ஒரு நல்ல சந்தர்ப்பம் அத்தோடு தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கு நான் முயற்சி செய்வேன் என்று அவருக்கு சொன்னேன். நாங்கள் போரை நிறுத்தாவிட்டால் தேவையில்லாமல் எல்லாவற்றையும் இழந்து விடுவோம் என்றும் அவரிடம் நான் சொன்னேன். ஆயினும் அவர் அதற்குச் சம்மதிக்கவில்லை. இப்போது என்ன நடந்திருக்கிறது? பிரபாகரன் இறந்துவிட்டார், மற்றும் அவர் தனது சொந்த உயிரைக் காப்பாற்றப் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதால் அவரோடு சேர்ந்து பல அப்பாவித் தமிழர்களும் மடிந்திருக்கிறார்கள்.
  • கேள்வி: வரலாற்று ரீதியாக தமிழ் பிரதேசங்களாக இருந்த பல பகுதிகளை சிங்களமயமாக்க முயற்சிகள் நடைபெறுவதாக அறிக்கைகள் கூறுகின்றன.அரசாங்கத்தின் இத்தகைய ஏதாவது முயற்சிகள் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?
பதில்: இது முற்றிலும் தவறானது. சிங்களவர்களினதும் மற்றும் தமிழர்களினதும் கலாச்சாரம் ஒரே மாதிரியானது. நாங்கள் அனைவருமே இந்தியாவிலிருந்து வந்தவர்கள்தான். இதுதான் எங்கள் வரலாறு. சிங்களவர்களுக்கும் மற்றும் தமிழர்களுக்கும் இடையேயுள்ள ஒரேயொரு வித்தியாசம் மொழி மட்டும்தான். இந்தியாவிலும் மற்றும் ஸ்ரீலங்காவிலும் பௌத்த மக்கள் இந்துக் கடவுள்களை வரவேற்பதுடன் வணங்கியும் வருகிறார்கள் அதேவேளை இந்து மதத்தினரும் புத்த பெருமானை வழிபட்டு வருகிறார்கள். தமிழ் மக்கள் பௌத்த ஆலயங்களுக்குச் செல்ல விரும்புவார்களானால் அதேபோல பௌத்தர்களுக்கும் இந்து ஆலயங்களுக்குச் செல்ல முடியும். எங்களால் அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது. மட்டக்களப்பில் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்பே கட்டப்பட்ட பௌத்த விகாரைகள் குறைந்தது மூன்றாவது இருக்கலாம் மற்றும் அநேக தமிழ் மக்கள் இன்னும் அங்கே வழிபாட்டிற்காகச் செல்கிறார்கள். சில நபர்கள் நடப்பவற்றை தவறாகப் பயன்படுத்தி தமிழர்களுக்கும் சிங்களவருக்கும் இடையே கலகத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இந்த அறிக்கைகள் யாவும் தவறானவை.
  • கேள்வி: ஒருக்கால் ஜனாதிபதி மீள்குடியேற்ற அமைச்சை அடுத்த வருடம் நீக்கிவிட்டால் அரசாங்கத்தில் உங்கள் பங்கு என்னவாகவிருக்கும்?
பதில்: நல்லது.உள்ளக இடம்பெயர்ந்தவர்கள் எல்லோரும் மீள்குடியேற்றப்பட்டு விட்டால், ஜனாதிபதிக்கு மீள்குடியேற்ற அமைச்சு தேவைப்படாதுதான். அதன் பிறகு ஜனாதிபதி எனக்கு எதைக் கொடுத்தாலும் மற்றும் எனக்காக எதை முடிவு செய்தாலும் மக்களுக்கு சேவையாற்றுவதே எனது விருப்பம் என்பதால் அதை நான் நிச்சயம் ஏற்றுக்கொள்வேன்.
சண்டே லீடர்
தமிழில் எஸ்.குமார்

கருத்துகள் இல்லை: