செவ்வாய், 27 செப்டம்பர், 2011

லஞ்சம் தர மறுத்த லாரி டிரைவர் அடித்துக் கொலை

டெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் லஞ்சம் கொடு்க்க மறுத்த லாரி டிரைவரை போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் அடித்தே கொலை செய்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் சந்தோலியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்த லாரியை மறித்துள்ளார் போக்குவரத்துத் துறை அதிகாரி ராதேஷ்யாம். லாரி டிரைவரின் ஓட்டுநர் உரிமம், லாரி ஆவணங்களை ஆகியவற்றை சரிபார்த்த அவர் லஞ்சம் தந்தால் தான் லாரியை எடுத்துச் செல்ல அனுமதிப்பேன் என்று கூறியுள்ளார். அந்த லாரி டிரைவர் ஆனந்த் லால் குப்தா லஞ்சம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷ்யாம் ஆனந்தை அடித்துக் கொலை செய்துள்ளார்.
இந்த தகவல் கிடைத்ததும் அந்த கிராம மகக்ள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசாருடனும் தகராறு செய்தனர். ஆனந்தின் கொலை குறித்து தகவல் அறிந்த லாரி டிரைவர்கள் கிராம மக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினர்.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் தடியடி நடத்தினர். ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் போலீசாரைத் தாக்கினர். இதில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது.

போராட்டம் ஒரு புறம் நடக்க இதை சாக்காக வைத்து ராதேஷ்யாம் உள்ளிட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் நடந்தது என்பதை சந்தோலி எஸ்பி சலப் மாதுர் உறுதிபடுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "குற்றவாளிகளைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பிரேத பரிசோதனை நடத்தப்படும். அதன் பிறகு ஆனந்த் சாவுக்கான காரணம் தெரிய வரும். போராட்டம் நடந்த இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்," என்றார்.

கருத்துகள் இல்லை: