செவ்வாய், 19 ஜூலை, 2011

வசந்தசேனை, வட்டமிடும் கழுகு!கருணாநிதியிடம் பேசினார் எம்.ஜி.ஆர்.



ஆறு வயது முதல் பதினொரு வயது வரை உள்ள சிறுவர் – சிறுமியர் பாதி நாள் பள்ளியில் படித்தால் போதும்; பள்ளி நேரம் முடிந்ததும் சிறுவர்கள் வீட்டுக்குச் சென்று அவரவருடைய தகப்பன் செய்யும் தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டும்; சிறுமிகள் வீட்டு வேலைகளைச் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். கைத்தொழில் செய்யாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளிக்கூடத்திலோ அல்லது வேறொரு இடத்திலோ தொழிற்பயிற்சி அளிக்கப்படும்.
சென்னை மாகாண முதலமைச்சராக ராஜாஜி பதவியேற்ற பிறகு கொண்டுவந்த புதிய கல்வித் திட்டம். அரைநாள் கல்வித் திட்டம் என்றார் ராஜாஜி. இல்லையில்லை. கடைந்தெடுத்த வர்ணாசிரம சிந்தனையில் உதித்த குலக்கல்வித் திட்டம் என்றது திமுக. உடனடியாக திமுக செயற்குழு கூடியது. மூன்று முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
குலக்கல்வித்திட்ட எதிர்ப்பு, டால்மியாபுரம் பெயர் மாற்றுதல், நேருவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது. மும்முனைப் போராட்டங்களுக்குத் திட்டங்கள் வகுக்கப்பட்டன. குலக்கல்வியை எதிர்க்கும் வகையில் ராஜாஜி வீட்டுக்கு முன்னால் கறுப்புக்கொடி காட்டுதல், நேருவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரயில் நிறுத்தப் போராட்டம். மூன்றாவது, டால்மியாபுரம் போராட்டம்.
திருச்சிக்கு அருகே இருக்கும் கல்லக்குடி என்ற ஊர் வடநாட்டுத் தொழிலதிபரான டால்மியா பெயரால் டால்மியாபுரம் என்று மாற்றப்பட்டது. மெல்ல மெல்ல கல்லக்குடி என்ற பெயரே இருட்டடிப்பு செய்யப்பட்டது. அதை மாற்றவேண்டும் என்று பலமுறை கோரியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்போது திமுக களமிறங்கியது. அந்தப் போராட்டத்துக்குத் தலைமையேற்கவே கருணாநிதி பணிக்கப்பட்டார். ஏன் கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தேன் என்பதை அண்ணாவே விளக்கிப் பேசினார்.
தோழர் கருணாநிதியை டால்மியாபுரம் போராட்டத்துக்குத் தலைவராக நான் பணித்தறகுக் காரணம், “தோழர் கருணாநிதி கலைஞர் – கதைகளிலேதான் கைவரிசை காட்டமுடியும்; கற்பனைச் சித்திரத்திலேதான் அட்டைக் கத்தியினைத் தீட்டிக்காட்ட முடியும்’ என்று பலர் கேலி பேசுவதாகக் கேள்விப்பட்டேன். தோழர் கருணாநிதி கலைஞராகுமுன் ஒரு நடிகர்; ஒரு நடிகராவதற்கு முன் ஒரு லட்சிய மாணவர்.
மூன்று துறையிலே பணிபுரிந்தார் என்பது மட்டுமல்ல – தொல்லையும் பட்டிருக்கிறார்.. கதையிலே மட்டுமல்ல; கற்பனையோடு என்ற அளவிலே அல்ல; கடமையிலே எடுத்ததை – முன்வைத்த காலைத் தவறவிடமாட்டார் என்ற நம்பிக்கையை நாடு அறியத்தான், நான் அவரை டால்மியாபுரம் போராட்டத் தலைவனாக நியமித்தேன்.
அண்ணாவின் பேச்சில் பல செய்திகள் பொதிந்துகிடக்கின்றன. பத்திரிகை மூலமாக, சினிமா மூலமாக, நிதி சேகரிப்பதன்மூலமாக கருணாநிதி மெல்ல மெல்ல செல்வாக்கு பெற்றுக் கொண்டிருந்தார். பள்ளிப்படிப்பைத் தாண்டாத கருணாநிதி மேடைப்பேச்சிலும் சினிமாவிலும் சாதித்துக்கொண்டிருந்தது கழகத்தில் இருந்த படித்தவர்களை, பெரிய மனிதர்களை அதிருப்தியடையச் செய்தது. அதன்காரணமாகவே எழுதுபவர்களாலும் பேசுபவர்களாலும் போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றிபெற முடியாது என்று பேசத் தொடங்கினர். அவை அண்ணாவின் காதுகளுக்கும் சென்றன. கலைத்துறையிலும் கவனம் செலுத்தும் அண்ணாவால் இந்த விமரிசனத்தை ஏற்கமுடியவில்லை. அதை மற்றவர்களுக்குப் புரியவைக்க கல்லக்குடி போராட்டத்தைக் கருணாநிதியின் பொறுப்பிலே விட்டார்.
15 ஜூலை 1953 அன்று நடைபெற இருந்த கல்லக்குடி போராட்டத்தை எச்சரிக்கையுடன் நடத்தவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அண்ணா. அதற்காகக் கருணாநிதியை
நேரில் அழைத்துப் பேசினார். போராட்டக் குழுவினருக்குத் தலைமையேற்று களத்துக்குச்
செல்; கல்லக்குடி என்று எழுதப்பட்ட தாளை ரயில் நிலையத்தில் இருக்கும் பெயர்ப்பலகையின் மீது ஒட்டு; அதைத் தடுத்து நிறுத்தும் பணியில் காவல்துறையினர் இறங்கினால் முரண்டு பிடிக்காதே; கைதாகவும் தயங்காதே! எந்தவித நேரடி நடவடிக்கையிலும் ஈடுபடாதே!
எல்லாவற்றுக்கும் தலையசைத்துவிட்டு கருணாநிதி சென்றது நாடக மேடை ஒன்றுக்கு. சென்னை தியாகராயர் கல்லூரி நிதிக்காக நாடகம் நடத்தித் தருவதாக ஏற்கெனவே ஒத்துக்கொண்டிருந்தார் கருணாநிதி. நாடகத்தின் பெயர், பரப்பிரம்மம். கருணாநிதியும் சிவாஜி கணேசனும் நடித்தார்கள். நாடகத்தை முடித்துக்கொண்டு நண்பர் முல்லை சத்தி சகிதம் திருச்சி புறப்பட்டார் கருணாநிதி.
அங்கிருந்து கல்லக்குடி சென்ற கருணாநிதி, டால்மியாபுரம் போராட்டம் குறித்து மக்களுக்கு விளக்கம் கொடுக்கும் வகையில் பல பொதுக்கூட்டங்களில் பேசினார். மக்களைப் போராட்டத்துக்கு ஆதரவாகத் திரட்டும் முயற்சியில் தொடர்சியாக ஈடுபட்டார். அப்போது அவருக்குத் துணையாக திருச்சியிலே செல்வாக்கு மிகுந்த அன்பில் தர்மலிங்கம் உள்ளிட்ட திமுகவினர் வந்தனர்.
15 ஜூலை 1953. போராட்டக்காரர்களுடன் களத்துக்குச் சென்றார் கருணாநிதி . திடீரென அந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள கவிஞர் கண்ணதாசன் வந்திருந்தார். அண்ணா சொன்னது போலவே பெயர்ப்பலகையில் ’கல்லக்குடி’ என்று எழுதப்பட்ட தாளை ஒட்டினார். மறுநொடி கைது செய்யப்படவேண்டும். ஆனால் காவலர்கள் அமைதியாக இருந்தனர். தங்களுடைய போராட்ட முறையை காவலர்கள் அலட்சியப்படுத்துவதாக நினைத்தார் கருணாநிதி. சட்டென்று போராட்ட வியூகத்தில் மாற்றம் ஒன்றை அமல்படுத்தினார்.
கல்லக்குடி என்ற பெயர் மாற்றத்தை உடனடியாக அங்கீகரிக்கவேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்று சொல்லி ரயில் தண்டவாளத்துக்குக் குறுக்கே படுத்தார் கருணாநிதி. அவரைத் தொடர்ந்து அவருடைய பிரிவில் இருந்த மற்ற தொண்டர்களும் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தனர். எழுந்திருக்கச் சொல்லி மிரட்டினர் காவலர்கள். ரயிலைக் கிளப்பி அச்சுறுத்தினர். எதற்கும் கருணாநிதி அசைந்துகொடுக்கவில்லை. மற்றவர்களும் அப்படியே. வேறுவழியில்லை. அவர்களை எழுப்பிக் கைது செய்தனர்.
போராட்டம் அத்துடன் நிற்கவில்லை. அடுத்தடுத்த குழுவினர் போராட்டத்தைத் தொடர்ந்தனர். சில நிமிடங்களில் போராட்டக்காரர்களுக்கு பொதுமக்களின் நேரடி ஆதரவு கிடைத்தது. போராட்டம் வலுக்கத் தொடங்கியது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதாகச்
சொன்ன காவல்துறையினர் துப்பாக்கிகளைத் தூக்கினர். அவற்றில் இருந்து புறப்பட்ட தோட்டாக்கள் கேசவன், நடராசன் என்ற இரண்டு உயிர்களைத் துளைத்தெடுத்தன.
கருணாநிதி உள்ளிட்ட போராட்டக்காரர்களைக் கைது செய்த காவல்துறை அவர்களை அரியலூர் சப் ஜெயிலில் அடைத்தது. சின்னஞ்சிறு அறையில் எட்டு பேரில் ஒருவராக கருணாநிதி. போராட்டத்தின்போது மயங்கிவிழுந்த கண்ணதாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு உடல் தேறியதும் சிறையில் அடைக்கப்பட்டார்.
குலக்கல்வி மற்றும் நேருவுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட அண்ணா, ஈ.வெ.கி. சம்பத், நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன், என்.வி. நடராசன் ஆகிய ஐந்து முக்கியத் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ஐவர் வழக்கு என்றனர் திமுகவினர். அவர்கள் ஐந்து பேரையும் திமுகவின் ஐம்பெரும் தலைவர்கள் என்று அழைப்பதற்கும் அந்த வழக்கே காரணமானது. விசாரணை முடிவில் ஐந்து பேருக்கும் தலா இரண்டு மாத வெறுங்காவல் தண்டனை தரப்பட்டது.
அரியலூர் சிறையில் அடைக்கப்பட்ட கருணாநிதி உள்ளிட்ட முப்பத்தைந்து பேர் மீது மக்களைத் திரட்டிக் கிளர்ச்சி செய்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. விசாரணை தொடங்கியது.
“தண்டவாளத்தில் படுத்து, வண்டியைப் போகவிடாமல் தடுத்த்து சட்டப்படி குற்றமாகும்’ என்றார் நீதிபதி.
“இல்லை, நியாயப்படி நாங்கள் குற்றவாளிகள் அல்லர்’ என்றார் கருணாநிதி.
இறுதியாக, கருணாநிதி உள்ளிட்ட ஐவருக்கு ஆறுமாத கடுங்காவல் சிறைத்தண்டனை தரப்பட்டது. எஞ்சிய முப்பது பேருக்கும் இரண்டுமாத தண்டனை மற்றும் முப்பத்தைந்து ரூபாய் அபராதம்! திருச்சி மத்திய சிறைச்சாலை கருணாநிதி உள்ளிட்ட கல்லக்குடி போராளிகள் அடைக்கப்பட்டனர். சிறைக்குச் செல்வதற்குமுன் கருணாநிதி பேசினார்.
‘தன்மானங்காத்திடத் தண்டனை அடைந்தோம். சிறைவாசம் முடிந்து திரும்புங்கால் டால்மியாபுரம் ஒழிந்து கல்லக்குடி காட்சியளிக்கட்டும்! வாழ்க அண்ணா! வளர்க திராவிடம்’
தண்டனை பெற்ற அனைவருமே திமுகவின் முன்வரிசைத் தலைவர்கள் என்பதால் திமுகவை வெளியில் இருந்து நிர்வகிக்கும் பொறுப்பை சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி ஏற்றுக்கொண்டார். திமுக ஆதரவுடன் வெற்றிபெற்ற காமன்வீல் கட்சி உறுப்பினர் அவர். காங்கிரஸில் சேராமல் திமுக தலைவர்களுடனேயே நெருங்கிவிட்டார். 21 நவம்பர் 1953 அன்று கருணாநிதி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இப்போது மீண்டும் சினிமா. பராசக்தியின் பிரும்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சிவாஜி கணேசன் நாயகனாக நடிக்கும் மனோகரா படத்துக்கு வசனம் எழுதினார் கருணாநிதி.
பொன்னும் மணியும் மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து கண்ணே! முத்தே! தமிழ்ப் பண்ணே ! என்றெல்லாம் குலவிக்கொஞ்சி தங்கத்தினால் ஆன கட்டிலிலே சந்தனத் தொட்டிலிலே! என்று தமிழ் கொஞ்சிய வசனத்துக்கு தியேட்டரில் பலத்த வரவேற்பு. வசந்தசேனை, வட்டமிடும் கழுகு, வாய்பிளந்து நிற்கும் ஓணாய், நம்மை வளைத்துவிட்ட மலைப்பாம்பு மற்றும் மனோகரா, பொறுத்தது போதும், பொங்கியெழு போன்ற வீரம் பொங்கும் வசனங்களுக்கும் அபார வரவேற்பு.
சிவாஜிக்காக சில வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த கருணாநிதி, மீண்டும் எம்.ஜி.ஆருக்காக வசனம் எழுதும் வாய்ப்பு வந்தது. நாமக்கல் கவிஞர் எழுதிய மலைக்கள்ளன் என்ற நாவலை படமாக எடுக்கவிரும்பினார் இயக்குனர் பட்சிராஜா ஸ்ரீராமுலு நாயுடு. சிவாஜி கணேசன் நடிக்கவேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பம். ஆனால் அந்தக் கதையில் தான் நடிப்பதைக் காட்டிலும் எம்.ஜி.ஆர் நடிப்பதே நன்றாக இருக்கும் என்றார் சிவாஜி. அதன்படியே மலைக்கள்ளனாக மாறினார் எம்.ஜி.ஆர்.
படத்துக்கு வசனம் எழுத கருணாநிதியை அணுகினார் பட்சிராஜா. நாமக்கல் கவிஞர் காங்கிரஸ்காரர்; அவருடைய கதைக்கு என்னுடைய வசனம் பொருத்தமாக இருக்காது என்று மறுத்துவிட்டார் கருணாநிதி. விஷயம் எம்.ஜி.ஆருக்குச் சென்றது. உடனடியாக நேரில் வந்து கருணாநிதியிடம் பேசினார் எம்.ஜி.ஆர். நண்பரிடம் மறுக்க மனமில்லை. தலையசைத்தார் கருணாநிதி. அந்தப் படத்தில் இடம்பெற்ற அந்த வசனம் தியேட்டரில் பலத்த ஆரவாரத்தை ஏற்படுத்தியது.
கற்புக்கரசியைக் காக்க வந்த கடவுள், துஷ்ட, நிக்ரக சிஷ்ட பரிபாலனம் செய்யவந்த ஆண்டவன் எடுத்த அவதாரம் என்றெல்லாம் எண்ணாதே. நான்தான் மலைக்கள்ளன்!
டைட்டிலில் வசனம் எழுதிய கருணாநிதிக்காக தனி கார்டு போடப்பட்டது. படத்தின் பரபரப்பான வெற்றி, எம்.ஜி.ஆர் என்ற சாதாரண நடிகரை சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது!
(தொடரும்)
O
ஆர். முத்துக்குமார்

கருத்துகள் இல்லை: