பனை மரம் தறிப்பதைத் தடுக்க புதிய நடைமுறைகள்

இலங்கையில் 24260 ஹெக்டெயரில் 11 மில்லியன் பனை மரங்கள் அளவில் இருப்பதாகவும் அதில் 3.5 மரங்கள் யாழ்ப்பாணத்திலும், 3.5 மில்லியன் மரங்கள் கிளிநொச்சியிலும், 3 மில்லியன் மரங்கள் மன்னாரிலும் மிகுதி நாட்டின் மற்றைய இடங்களிலும் இருப்பதாக புள்ளிவிபர மதிப்பீடுகள் உறுதிப்படுத்துகின்றன.
அரசின் மஹிந்த சிந்தனை 10 வருடத் திட்டத்தில் தற்போது 11 மில்லியன்களாகவுள்ள பனை மரங்கள் 2016 ஆம் ஆண்டில் 16 மில்லியன்களுக்கு அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதை அடையும் வகையில் பனை மரங்கள் வெட்டுவதை குறைந்த மட்டத்திற்கு கொண்டுவருதல், தனிப்பட்ட நடுகை அபிவிருத்தி, பனைக் கன்றுகள் நடுதல், அல்லது புதிய கன்றுகள் தொடர்பாக அறிவுறுத்தும் நடவடிக்கைகளை திட்டமிடல், உற்பத்தியை அதிகரித்துக் கொள்ளும் கொள்கையொன்றாக தற்போது இனங்காணப்பட்டுள்ளது. பனை மரங்கள் வெட்டுவதை தடைசெய்வதற்காக குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தலை கடுமையாக செயற்படுத்தும் அவசியத்தினை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு, மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. பனை மரங்கள் வெட்டுவதற்கான அனுமதியானது, பனை அபிவிருத்திச் சபையுடன் கலந்தாலோசித்து குறிப்பிட்ட பிரதேச செயலாளரினால் வழங்கப்படவேண்டும்என்ற கொள்கையினை இறுக்கமாக நடைமுறைப்படுத்த பணிக்கப்பட்டுள்ளது.
பனை நார் உற்பத்தி, பனங் கருப்பட்டி உற்பத்தி, பனை சார்ந்த மென்பான உற்பத்தி, பனங்கள் இறக்குதல் பயிற்சி மற்றும் பனை சார்ந்த கைப்பணி வேலைகள் பயிற்சி உட்பட பல கைத்தொழில்களை ஆரம்பித்தலுக்காக அரசாங்கத்தின் மூலதன வரவு செலவுத் திட்டத்தின் கீழ் ரூபா 30 மில்லியன் பனை அபிவிருத்திச் சபைக்கு 2010 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பனை சார்ந்த உற்பத்திகளை விற்பனை செய்வதற்காக “கற்பகம்” விற்பனை நிலையங்கள் கொழும்பு (கொட்டாஞ்சேனை) கண்டி மற்றும் புத்தளம் பிரதேசங்களில் நிறுவவும் பிரேரிக்கப்பட்டுள்ளதுடன், பனை அபிவிருத்திச் சபையின் தலைமை அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.