மின்னம்பலம் =Pandeeswari Gurusamy : சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்.. அரசு அமைதியாக இருப்பதா – நீதிமன்றம் சரமாரி கேள்வி
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்.. அரசு அமைதியாக இருப்பதா என நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த பி.ஹெச்.தினேஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் ‘தவெக தலைவர் விஜய் கரூரில் கலந்து கொண்ட பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் என 41 பேர் வரை பலியாகி உள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்துள்ள கரூர் போலீசார் முதல் தகவல் அறிக்கையில் விஜய்யின் பெயரை சேர்க்கவில்லை.
அவர் கூட்டம் நடந்த இடத்திற்கு 7 மணி நேரம் தாமதமாக வந்ததே இந்த சம்பவத்திற்கு காரணம். எனவே இது குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் இனிவரும் காலங்களில் தமிழகத்தில் மட்டும் இன்றி நாட்டில் எங்கும் நிகழக் கூடாது. எனவே அனைத்து அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற தவறும் பட்சத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கட்சி தலைவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு இன்று (அக்டோபர் 3) சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தவெக கூட்ட நெரிசல் குறித்த வீடியோக்களை பார்க்கும்போது கடும் வேதனை தருகிறது. இதுவரை இரண்டு பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்தும் நடைபெற போலீசார் அனுமதித்துள்ளீர்களா? காவல்துறை கண்மூடி கொண்டிருக்கிறதா.. முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என அனைவரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
நடிகர் விஜய் பயணித்த பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக வீடியோக்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டதா? இதில் வழக்குப்பதிவு செய்ய என்ன தடை? புகார் இல்லை என்றாலும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் தானே என்றும் நீதிபதி செந்தில்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
மூன்று முதல் பத்து மணி வரை பிரச்சாரத்திற்கான அனுமதி வாங்கிவிட்டு 12 மணிக்கு மக்களை கூடச் சொல்லி அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தனர் என அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் தன் வாதத்தை முன்வைத்தார்.
இதைத்தொடர்ந்து பிரச்சார வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். மேலும் பரப்புரையில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டாமா என்ற கேள்வியும் நீதிபதி எழுப்பி உள்ளார்.
மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டப்படுகிறதா.. நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். அரசு அமைதியாக இருக்க கூடாது. இது மனிதனால் ஏற்பட்ட பேரழிவு. சேதங்களை கணக்கிட ஏன் இவ்வளவு தாமதம் என சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மின்னம்பலம் : கரூர் பெருந்துயரம் தொடர்பான வழக்கில், இது என்ன மாதிரியாக கட்சி என்று தவெக குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இன்று (அக்டோபர் 3) நடந்த விசாரணையின் போது நீதிபதி செந்தில் குமார், ‘பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு மக்கள் இறந்துகொண்டிருக்கும்போதே, கட்சித் தொண்டர்களை விட்டுவிட்டு நிர்வாகிகள், தலைவர்கள் ஓடிவிட்டனர்.
இந்த சம்பவத்துக்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இது கட்சி தலைவரின் மனநிலையை தெளிவாக காட்டுகிறது.
விஜய் பிரசார வாகனம் மோதிய போதுகூட, அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படவில்லை. காவல்துறை அவர்களுக்கு கருணை காட்டுகிறீர்களா? என்ன மாதிரியான கட்சி இது? என்று காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தினமலர் : சென்னை: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு குழு அமைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் எனக்கூறி சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை நீதிபதி செந்தில்குமார் விசாரித்து வருகிறார்.
உத்தரவு
இன்று இந்த மனு விசாரணைக்கு வந்த போது, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. வழக்கு ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்தக் குழுவில் கரூர் எஸ்பியை இணைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் விசாரணையின் போது நீதிபதி கூறியதாவது: சட்டத்துக்கு முன் அனைவரும் சமம். அரசு அமைதியாக இருக்கக்கூடாது. என்ன மாதிரியான கட்சி இது. தலைமை தாங்கியவருக்கு தலைமை பண்பே இல்லை.
விஜய் மீது கருணை
கட்சித் தலைவர் விஜய் சம்பவ இடத்தில் இருந்து வெளியேறி சென்று விட்டார். வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை. குறிப்பாக பெண்கள், குழந்தைகள் உயிரிழந்த நிலையில், இத்தகைய நடவடிக்கை கண்டனத்துக்குரியது. இது அவரது மன நிலையை காட்டுவதாக உள்ளது. சூழ்நிலை முற்றிலும் தவறாக கையாளப்பட்டுள்ளது. மாநில அரசு விஜய் மீது கருணை காட்டுகிறது. இவ்வாறு நீதிபதி கூறினார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
நிகழ்ச்சியின் அமைப்பாளராக எந்தவிதமான பொறுப்பும் இல்லையா என்று தவெகவினரை பார்த்து நீதிபதி கேள்வி எழுப்பினார். போலீசாரிடமும் இதே கேள்வியை நீதிபதி எழுப்பினார்.
பேரழிவு
நீதிபதி மேலும் கூறுகையில், ''மனிதர்களால் மிகப்பெரும் பேரழிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், தன்னுடைய பொறுப்புகளை கைவிட்டு நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது. கூட்ட நெரிசலானது கட்சியின் தொண்டர்களால் தொண்டர்களின் நடத்தையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்சித் தலைவர்கள் பொறுப்பின்றி நடந்து கொண்டுள்ளனர். '' நடந்த சம்பவத்தை ஒட்டுமொத்த உலகமும் பார்த்து கொண்டுள்ளது. தவெக பஸ் அடியில் இரு சக்கர வாகனங்கள் சிக்கியதை பார்த்த பிறகும், அதன் டிரைவர் நிறுத்தாமல் ஓட்டிச் செல்கிறார். இது மோதிவிட்டு நிற்காமல் செல்வதை போன்றது அல்லவா? ஏன் மோதிவிட்டு நிற்காமல் சென்ற பஸ் மீது வழக்குப்பதியவில்லை. போலீசார் அதை ஏன் கருத்தில் கொள்ளவில்லை,'' என தெரிவித்தார்.
ஆதவ் அர்ஜூனா மீது என்ன நடவடிக்கை
விசாரணையின் போது சமூக வலைதளத்தில் ஆதவ் அர்ஜூனா வெளியிட்ட பதிவு சென்னை ஐகோர்ட் நீதிபதியிடம் காட்டப்பட்டது
அப்போது நீதிபதி கூறுகையில், புரட்சி ஏற்படுத்துவது போல பதிவிட்டுள்ளார்.இதற்கு பின்னால் இருக்கக்கூடிய பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுங்கள். இதுபோல் பொறுப்பற்ற பதிவுகளை காவல்துறை கவனத்துடன் பார்த்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். நீதிமன்றம் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறது. தேவையான போது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒரு சின்ன வார்த்தை கூட பெரிய பிரச்னையை ஏற்படுத்திவிடும். இவர்கள் என்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? நீங்கள் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறீர்களா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், ஆதவ் அர்ஜூனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக