ஞாயிறு, 5 அக்டோபர், 2025

LIVE: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு நேரலை!

 ராதா மனோகர் : சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா விழா செங்கல்பட்டில் நடந்தேறியது!
தமிழர்களின் முன்னோக்கிய சிந்தனை புரட்சியின் வெற்றி விழாவாகத்தான் இந்த நிகழ்வை நான் பார்க்கிறேன்.
ஆயிரம் ஆண்டுகளாக உரத்து குரல் எழுப்பவே பலமற்று இருந்த தமிழர்களின் பிடரியை உசுப்பி உரிமை குரல்  ஒலிக்க வைத்த இயக்கம் சுயமரியாதை இயக்கம்.
வெறும் அரசியல் மேடைகளில் மாநாட்டு தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நாட்டின் சட்டங்களாக அதிக அளவில் மாற்றிய பெருமை உலகிலேயே சுயமரியாதை இயக்கத்திற்குதான் உண்டு!  


ஜாதியாலும் மதத்தாலும் பல் வேறு ஒடுக்கு முறைகளாலும் புழுவிலும் கீழாக நடத்தப்பட்ட மக்களின் சுயமரியாதைக்கு மேடை போட்டு படை கட்டி பரணி பாடிய இயக்கம் சுயமரியாதை இயக்கம்!

1925 ஆம் ஆண்டில் தமிழகத்தில் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட ஏழு ஆண்டுகளுக்கு பின்னால் இலங்கையிலும் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது.
ஆனால் அங்கு அது வெற்றி பெறவில்லை அல்லது புறந்தள்ளப்பட்டது.
அது எப்பேர்ப்பட்ட ஒரு சமூக வீழ்ச்சியை தந்தது என்பது பிற்கால வரலாறு!  
1927 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சுன்னாகம் திராவிடன் பத்திரிகையில் சுயமரியாதை என்ற தலைப்பில் ஒரு ஆசிரிய தலையங்கமே  வெளியாகி இருப்பது கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் வரலாற்று செய்தி!
அது தொடரவேண்டும்   நிச்சயம் தொடரும்!

இன்று சுயமரியாதை இயக்கம் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி வேகமாக வளர்கிறது!
வெறும் தமிழ்நாட்டில் மட்டுமே உருவான  சுயமரியாதை கோட்பாடு இன்று இந்திய துணைக்கண்டத்தின் எல்லா மாநிலங்களிலும் வேக வேகமாக காலூன்றி கொண்டிருக்கிறது/
தனி மனிதர்களின் சுயமரியாதை மட்டுமல்லாமல் மாநிலங்களின் சுயமரியாதைக்கும்  அவர்கள் இன்று தமிழ்நாட்டைதான் தங்களின் கலங்கரை விளக்கமாக பார்க்கிறார்கள்.
நான் இப்போது கூறும் கருத்துக்கள் வெறும் ஒரு அதீத ஆர்வத்தால் மட்டுமே  கூறுவதாக பலரும் கருத கூடும்,
ஆனால் வரலாறு எனக்கு கற்பித்த பாடங்களின் அடிப்படையில்தான் கூறுகிறேன்.
இந்திய துணை  கண்டத்தையும் தாண்டி  சுயமரியாதை இயக்கம் ஒரு உலக இயக்கமாக உருவாக்கி கொண்டிருக்கிறது 
சுயமரியாதை என்ற சொல் உலக மக்களின் வாழ்வியலில் அன்றாட பேசு பொருளாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை!
மனிதர்களின் சுயமரியாதை முழுவதுமாக நிலை நாட்டப்படும் வரை சுயமரியாதை இயக்கத்தின் தேவை இருந்து கொண்டுதான் இருக்கும் 
நூற்றாண்டு கண்ட சுயமரியாதை இயக்கம் தொடர்ந்து வெற்றி கொடிக்கட்ட வாழ்த்துக்கள்! 

( இலங்கை சுயமரியாதை இயக்கம் 1932ம் ஆண்டு கொழும்பில் (கொள்ளுபிட்டியில்) ஆரம்பிக்கப்பட்டது
இலங்கையில் சுயமரியாதை இயக்கம் ஆரம்பிக்கப் பட்ட வருடத்திலேயே,
தந்தை பெரியார் மாஸ்கோ பயணத்தின் வழியில் இலங்கைக்கும் வருகை தந்திருந்தார் .
பெரியாரின் வருகையை அறிந்த சுயமரியாதை அமைப்பாளர்கள் பெரியாருடனான கலந்துரையாடல் ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தனர்.
1932ம் ஆண்டு அக்டோபர் 17ம் திகதி இரவு 9.00 மணிக்கு கொள்ளுபிட்டி கீரின் பாத் பாதையிலுள்ள மகளிர் நட்புறவு மண்டபத் தில் இக் கலந்துரையாடல் ஒழுங் கு செய் யப் பட்டிருந்தது. இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட பெரியார் சாதியத்திற்கும் மூடநம்பிக்கைகளுக்கும் எதிரான நீண்ட சொற்பொழிவொன்றினை நிகழ்த்தினார்
இச்செய்திகள் எல்லாம் வரலாற்றில் மறக்கப்பட்ட அல்ல அல்ல மறைக்கப்பட்ட செய்திகளாகும்
இலங்கை திராவிடர் கழகம் 11.07.1948 இல் கொழும்பில் தொடங்கப்பட்டது) 


கருத்துகள் இல்லை: