புதன், 16 அக்டோபர், 2024

கனடா குற்றம் சாட்டிய, இந்தியா திரும்பப் பெறும் தூதரின் (சஞ்சய் குமார் வர்மா) பின்புலம் என்ன?

இந்தியா, கனடா

bbc.com :  கடந்த ஆண்டு கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான சர்ச்சை மீண்டும் தலைதூக்கியுள்ளது. இது இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே ராஜதந்திரச் சிக்கலை உருவாக்கியுள்ளது.
இம்முறை, நிஜ்ஜார் கொலை வழக்கில், கனடாவுக்கான இந்தியத் தூதர் சஞ்சய் வர்மாவின் பெயரையும் மற்ற இந்தியத் தூதரக அதிகாரிகளின் பெயரையும் கனடா தொடர்புபடுத்தியுள்ளது.
கனடாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த இந்தியா, டெல்லியில் இருக்கும் இந்தியாவுக்கான கனடா தூதர் ஸ்டீவர்ட் ராஸ் வீலர் உள்ளிட்ட 6 பேரை வெளியேற்ற முடிவு செய்துள்ளது.



இந்தியா கனடாவுக்கான தனது தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் பிற தூதரக அதிகாரிகளை நாடு திரும்புமாறு கேட்டுக் கொண்டதாகக் கூறியிருக்கிறது. ஆனால் கனடா அவர்களை வெளியேற்றியதாகக் கூறியுள்ளது.

கனடாவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீதும் தூதரக அதிகாரிகள் மீதும் குறிவைத்து குற்றம் சாட்டியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


திரும்ப அழைக்கப்பட்ட ஆறு அதிகாரிகள்
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இந்தப் பதற்றத்திற்கு மத்தியில், ஒருவரது பெயர் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் அடிபடுகிறது. அவர்தான் கனடாவுக்கான இந்திய தூதரான சஞ்சய் வர்மா.

கனடாவிலிருந்து இந்தியாவால் திரும்ப அழைக்கப்பட்ட ஆறு அதிகாரிகளில் இந்தியத் தூதர் சஞ்சய் வர்மாவும் ஒருவர்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், சஞ்சய் வர்மா இந்தியாவின் மூத்த ராஜதந்திரி என்றும், அவர் 36 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார் என்றும் கூறியிருக்கிறது.

அதேநேரம், தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டப் ராஜாங்கச் சட்ட விலக்கினை (diplomatic immunity) நீக்கவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவும் இந்தியா மறுத்துவிட்டதாகவும், அதன் பின்னரே அவர்களை வெளியேற்ற முடிவு எடுக்கப்பட்டதாகவும் கனடா கூறுகிறது.


படக்குறிப்பு, 2019-ஆம் ஆண்டு மே மாதம், அவர் ஜப்பானுக்கான இந்தியத் தூதரானார் சஞ்சய் வர்மா
யார் இந்த சஞ்சய் குமார் வர்மா?
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தகவலின்படி, 1965-ஆம் ஆண்டு பிறந்த சஞ்சய் குமார் வர்மா, பாட்னா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.

அதன் பிறகு டெல்லி ஐ.ஐ.டி-யில் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
1988-ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுத் துறைப் பணிக்குத் தேர்வானார்.

30 ஆண்டுகளுக்கும் மேலான சஞ்சய் வர்மாவின் ராஜதந்திரப் பணி ஹாங்காங்கில் உள்ள இந்திய உயர் ஆணையத்தில் இருந்து துவங்கியது. அதன் பிறகு சீனா, வியட்நாம், மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் பணியாற்றினார்.

இத்தாலியில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரியாகப் பணியாற்றுவதற்கு முன்பு, அவர் சூடானுக்கான இந்திய தூதராக இருந்தார்.

சூடானில் இருந்து இந்தியா திரும்பிய அவரை, இந்திய அரசு முதலில் வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளராகவும், பின்னர் கூடுதல் செயலாளராகவும் நியமித்தது.

இதன் பிறகு, 2019-ஆம் ஆண்டு மே மாதம், அவர் ஜப்பானுக்கான இந்தியத் தூதரானார். 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை அப்பணியில் இருந்தார்.

அதன் பிறகு, கனடாவுக்கான இந்திய உயர் ஆணையராக வர்மா நியமிக்கப்பட்டார்.
பெங்காலி பேசும் சஞ்சய் வர்மா, இந்தி, ஆங்கிலம், மற்றும் சீன மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.
சஞ்சய் வர்மாவின் மனைவியின் பெயர் குஞ்சன் வர்மா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

படக்குறிப்பு, நியாயமான விசாரணைக்கு இந்தியாவுக்கு கனடா வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று சஞ்சய் வர்மா கூறியிருந்தார்
இந்தியா-கனடா பிரச்னை குறித்து சஞ்சய் வர்மா என்ன கூறினார்?

இந்த ஆண்டு ஜூன் மாதம், கனடா நாடாளுமன்றக் குழு அறிக்கை ஒன்று, கனடாவின் ஜனநாயகத்திற்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும், இரண்டாவது பெரிய வெளிநாட்டு அச்சுறுத்தல் இந்தியா என்றும் விவரித்திருந்தது.

கனடா தேசியப் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுக் குழுவின் நாடாளுமன்ற அறிக்கையில், கனடாவில் இந்தியாவின் தலையீடு படிப்படியாக அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டிருந்தது.

கனடா தலைவர்கள், ஊடகங்கள் மற்றும் இந்திய-கனடா கலாசார சமூகங்களை இந்தியா குறிவைப்பதாக அந்த அறிக்கை குற்றம் சாட்டியிருந்தது.
அப்போது ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய கனடாவுக்கான இந்தியத் தூதர் சஞ்சய் வர்மா அந்தச் செய்தியை நிராகரித்திருந்தார்.

நியாயமான விசாரணைக்கு இந்தியாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், சாட்சிகளைக் குறுக்கு விசாரணைக்குக் கூட அனுமதிக்கவில்லை என்றும் அவர் அதில் கூறியிருந்தார்.

“இந்த அறிக்கை இந்தியாவுக்கு எதிரான சக்திகளின் தூண்டுதலால் வெளியிடப்பட்டது. நீங்கள் ஆதாரத்தை வழங்க வேண்டும். ஆனால் இதில் நான் அப்படி எதையும் பார்க்கவில்லை,” என்று கூறியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும், கனடாவின் அமைப்புகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைச் சேதப்படுத்த விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.

ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய வர்மா, “காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு நிறைய அரசியல் இடத்தை கனடா வழங்கியுள்ளது. எனவே அவர்கள் தங்கள் பினாமிகள் மூலம் இந்த முழுச் செயல்முறையையும் தூண்டியிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்,” என்று கூறியிருந்தார்.

கருத்துகள் இல்லை: