செவ்வாய், 15 அக்டோபர், 2024

சாம்சங் பிரச்சனை அம்பானியின் சதி- விரிவான கட்டுரை

 Marudhamuthu Radhakrishnan   :  நண்பர்களே, அரை உண்மை, அரைக்கால் உண்மை, முழுப்பொய் என சாம்சங் குறித்த பரப்புரை பல வடிவங்களில் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
ஆனால் முழு உண்மையே மக்களின் தேவை.
இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரக் களம் குறித்த புரிதல் இல்லாமல் இன்று நடைபெற்றுவரும் சாம்சங் போராட்டம் பற்றிய முழு உண்மையை நாம் விளங்கிக் கொள்ள முடியாது.
இந்தப் போராட்டத்தின் மூலம் மோடியரசின் பொருளாதாரத் துறை சார்ந்த ஒரு மோசடித் திட்டத்தை  விரிவாக விளக்க ஓர் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தச் சதிக்கு எவரும் பலியாகிவிடக் கூடாது.
ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி அந்த மாபெரும்  தவறைச் செய்து வருகிறது.
திருமா போலத் தெரிந்தேதான் செய்து வருகிறதா என்பது நம் முன் உள்ள கேள்வி.
முதலில் இந்தப் பிரச்சினையில் குற்றவாளியாக இருக்கும் சாம்சங் பற்றி ஆய்வோம்.
இது உலக அளவிலும், இந்தியச் சந்தையிலும் உச்ச இடத்தில் இருந்து வரும் நிறுவனங்களில் ஒன்று.


ஸ்மார்ட்போன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இது
சென்னையைப் பொறுத்தவரை வாஷிங் மெஷின், டிவி போன்ற சாதனங்களைத் தான் தயாரித்து வருகிறது.
ஆனால் உ.பி.யில் உள்ள ஸ்மார்ட்போன் தொழிலகம் தான் அதன் வலிமைக்கு மூல காரணம்.
அதே வட்டாரத்தில் டெல்லிக்கு அருகில் உள்ள ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் ஒன்று உள்ளது.
அதன் பெயர் சையோமி எனப்படும். (Xiaomi)
இது உலக அளவில் (இந்தியாவிலும்) உச்சத்தில் இருந்து வருவது.
இறுதி நிலவரப்படி இந்தியாவில் இந்த சையோமி தான்  முதல் இடத்தில் உள்ளது.
இரண்டாம் இடத்தில் வீவோ. இதுவும் சீனக் கம்பெனி.
மூன்றாம் இடத்தில் சாம்சங் உள்ளது. இது தென்கொரியக் கம்பெனி.
நான்காம் இடத்தில் ரியூல்மி உள்ளது. இதுவும் சீனக் கம்பெனி.
ஐந்தாம் இடத்தில் உள்ள ஆப்போ என்பதும் சீனக் கம்பெனியே ஆகும்.
இதற்கெல்லாம் பிறகுதான் ஆறாம் இடத்தில் ஆப்பிள் என்ற அமெரிக்கக் கம்பெனி உள்ளது.
(ஆதாரம் forbesindia, 29/8/24)
இத்தனை சீனக் கம்பெனிகள் மோடியின் இந்தியாவில் ஆதிக்க நிலையில் இருந்து வருகின்றன!!!!!
இத்தகைய சூழலில் மோடியின் எஜமான்கள் இருவரில் ஒருவரான முகேஷ் அம்பானி இந்த போன் கம்பெனிகளைத் தனது நிறுவனங்களின் வசதிக்கேற்பப் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்.
இவ்வாறு பயன்படுத்திக் கொள்வது அவரது இ—காமர்ஸ் (E-Commerce—எலக்ட்ரானிக்ஸ் வணிகம்) தொழிலுக்குக் கட்டாயத் தேவையாக உள்ளது.
இந்த எலக்ரானிக்ஸ் வணிகத் துறையில் அவரது மாபெரும் எதிரியாக உள்ளது அமெரிக்காவின் அமேசான் நிறுவனம்.
அமேசான், ரிலையன்ஸ் ஆகிய இவ்விரு பூத முதலாளிகளுக்கும் இ.வணிகம் நடத்த ஸ்மார்ட்போன் அத்தியாவசியத் தேவையாகும்.
எனவே இவ்விரு பெரு முதலாளிகளும் இந்தியாவில் உள்ள ஸ்மார்ட்போன் கார்ப்பரேட்டுகளை மாறி,மாறி வசியம் செய்து வருகிறார்கள்.
இவர்களின் கடும் போட்டிக்குள் மோடி நுழைந்து எப்போதும் போல் அமலாக்கத் துறையைக் கூடப் பயன்படுத்தி அம்பானிக்கு உதவி வருகிறார்.
“எங்களுக்கு அமெரிக்காவும் வேண்டும், சீனாவும் வேண்டும்.
ஆனால் எதுவாக இருந்தாலும் எங்கள் அம்பானி, அதானிக்கு அந்த இருநாடுகளின் உறவு வலிமை கூட்டுவதாக இருக்க வேண்டும்,” என்பதே மோடியின் அசைக்க முடியாத நிலைப்பாடு.
இந்த நிலைப்பாடு அவரது வெளியுறவுத் துறை அமைச்சர் முன்னமே அறிவித்துள்ள “frenemy” (friend and enemy)  என்ற புவிசார் அரசியல் கோட்பாட்டின் நீட்சியேயாகும். ( நட்போடு பகைமையும்  இணைந்தது)
“எங்கள் தேவைக்கேற்ப நண்பனாகக் கொள்வோம் அல்லது பகைவனாகவும் கொள்வோம்,” என்ற ஆபாசமான சந்தர்ப்ப வாதக் கொள்கை இது.
இதற்கேற்ப இன்று “எஜமான்” அம்பானிக்கு இந்திய வணிகத் துறையில் ஏக போகம் எய்த தாராள எண்ணிக்கையில் ஸ்மார்ட்போன் சப்ளை தேவை.
இன்று, இந்தியா முழுதும் ஏராளமான நேரடி விற்பனை நிலையங்கள் இவர் வசம் உள்ளன.
அடுத்து இதைவிடப் பெரிய அளவில் இ.வணிகம் மேற்கொள்ள இவருக்கு மேலும், மேலும் அதிகமாக  ஸ்மார்ட் போன்கள் தேவை.
இதன்பொருட்டு அமெரிக்காவின் நேசசக்தியான தென்கொரியா நாட்டின் சாம்சங் நிறுவனத்தைச் சார்ந்திருக்க அம்பானி தயாராக இல்லை.
அது காலப் போக்கில் அமேசான் கம்பெனியின் இ.வணிகம் பெருக உதவக்கூடும் என்று அஞ்சுகிறார் அவர்.
அவ்வாறு அமெரிக்காவுக்கு அதிக இடம் கொடுத்தால், வருங்காலத்தில் புவிசார் நெருக்கடி முற்றும்போது அது ஜனநாயக உரிமை, மதவெறி எதிர்ப்பு என்ற ஆயுதங்களையெல்லாம் மோடிக்கு  எதிராகப் பயன்படுத்தும் நிலை வரக்கூடும்.
எனவே ஜனநாயகம், மனித உரிமை மட்டுமல்ல இனக்கொலையே நடந்தாலும் (ஈழத்திலும், குஜராத்திலும் நடந்தது போல) எதையுமே கண்டுகொள்ளாத வல்லரசான சீனாவின் Xiaomi கம்பெனியிடமே நெருக்கமாக இருக்கலாம் என்று அம்பானி முடிவு செய்துள்ளார்; மோடி ஒத்துழைக்கிறார்.
இதன் தொடர்ச்சியாகவே இன்று  சாம்சங் கம்பெனி கீழே தள்ளப் பட்டு அம்பானியின் ஜியோ மற்றும் சையோமி கம்பெனிகளின் கூட்டுறவுக்கு வலிமை சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
இதற்குச் சாதகமாக இன்று சாம்சங் கம்பெனிக்கு எதிரான போராட்டமும், பரப்புரையும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
(இதன் பொருள் சாம்சங் நிறுவனம் தொழிலாளர்களை நன்முறையில் நடத்திவரும் யோக்கியமான கம்பெனி என்பதல்ல)
இதில் அடங்கியுள்ள ஆகப் பெரிய அரசியல் ஆபத்து ஒன்று உள்ளது---
தமிழ்நாட்டின் அரசியலைப் பொறுத்தவரை இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்தி இந்துதேசியப் பார்ப்பன பனியா அரசுக்குப் பெரிய பகையாக இருந்து வரும் திராவிட மரபின் திமுக அரசை பலவீனப் படுத்துவதில் மோடியரசு பெரு வெற்றி கண்டு வருகிறது.
ஆனால்  இடதுசாரிகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் அரியானா தோல்வி போல் எத்தனை தோல்விகள் வந்தாலும் பாடம் கற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை.
எனவே,
இந்தப் போராட்டம் ஒரே ஒரு கம்பெனியின் ஒரே ஒரு தொழிற்சாலை குறித்ததாக எவரும் கருதி ஏமாந்து விடக் கூடாது.
அவ்வாறு கருதி திமுக அரசின் மீது வெறுப்புணர்வைப் பரப்பினால் அது அம்பானி-மோடியின் சதித் திட்டத்துக்கு பலியாவதாகவே அமையும்.
இது குறித்த ஆதாரங்கள் சிலவற்றை அடுத்த பதிவில் தருகிறேன்.
அன்புடன், மருதமுத்து

கருத்துகள் இல்லை: