பிபிசி : அம்பாறை மாவட்டத்தைப் புரட்டிப் போட்டுள்ள வெள்ளம்
இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்துவந்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக அம்பாறை மாவட்டம் மிக அதிகளவில்
இலங்கையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வந்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாகவும், சேனநாயக்க குளத்தின் கதவுகள் திறக்கப்பட்டமையாலும் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று 12ஆம் தேதி விடுத்த அறிக்கையின்படி, சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் மொத்தம் 53,641 குடும்பங்களைச் சேர்ந்த 178,312 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 50,996 குடும்பங்களைச் சேர்ந்த 169,504 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களில் ஒரு தொகையினர் இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கான உணவுகளை வழங்கும் நடவடிக்கைகளை பிரதேச செயலகங்கள் ஆரம்பித்துள்ளதாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொதுமக்கள் உணவு சமைத்து வழங்குகின்றனர்.
அதேவேளை சமூக ஆர்வலர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சமயத்தலங்களின் நிருவாகிகள் மற்றும் இளைஞர் அமைப்புகளும் பாதிக்கப்பட்டோருக்கு உணவுகளைச் சமைத்து வழங்கி வருகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் சீற்றமான பருவநிலை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று (12) காலை வரையில் 2401 குடும்பங்களைச் சேர்ந்த 7173 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை 15,792 குடும்பங்களைச் சேர்ந்த 50,777 நபர்கள் தமது இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து – உறவினர்கள் மற்றும் அண்டை வீடுகளில் தங்கியுள்ளனர் என, தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
கடந்த சில வாரங்களாகத் தொடர்ச்சியாகப் பெய்த மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவும், சேனநாயக்க குளத்தின் கதவுகள் திறந்து விடப்பட்டமையாலும், அம்பாறை மாவட்டம் மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
முற்றாகத் திறந்து விடப்பட்டுள்ள சேனநாயக்க குளக் கதவுகள்
அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள சேனநாயக்க குளம் (சேனநாயக்க சமுத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது) 1949ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவால் நிர்மாணிக்கப்பட்டது. நெல் விவசாயத்துக்கான நீரைத் தேக்கி வைத்து வழங்குவதற்காக இந்தக் குளம் உருவாக்கப்பட்டது.
அம்பாறையில் இந்தக் குளம் அமைக்கப்பட்டுள்ள போதும், அதன் சில பகுதிகள் மொனராகல, பதுளை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் உள்ளன.
சேனநாயக்க குளத்தில் 05 கதவுகள் உள்ளன. அதில் 110 அடி உயரம் வரையில் நீரைத் தேக்கி வைக்க முடியும். ஆனாலும் 104 அடி உயரத்தை எச்சரிக்கை மட்டமாக (Warning Level) குறிப்பிடுகின்றனர். அதாவது குளத்தின் 104 அடி உயரத்துக்கு நீர் நிரம்பும்போது, குளத்தின் கதவுகளைத் தேவைக்கேற்ற வகையில் திறந்து விடுவார்கள்.
ஆனால் தற்போது குளத்தில் 111.8 அடி உயரம் வரை – நீர் நிரம்பியிருப்பதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் நேற்று (12) பிபிசி தமிழிடம் தெரித்தார்.
”இதன் காரணமாக குளம் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது. குளத்தின் அனைத்துக் கதவுகளும் தொடர்ச்சியாகத் திறந்து விடப்பட்டுள்ளன, மொனராகல மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளமும் 3 நாட்களில் சேனநாயக்க குளத்தை 50 அடியளவுக்கு நிரப்பியது.
இதனால் அசாதாரண சூழ்நிலையொன்று உருவாகியுள்ளது. குளத்தின் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ள போதும், பிற பகுதிகளில் இருந்து வரும் வெள்ள நீர் – குளத்தில் தொடர்ச்சியாகச் சேர்வதால், குளத்தின் நீர் மட்டம் குறையாமல் உள்ளது,” என றியாஸ் விவரித்தார்.
இவ்வாறு சேனநாயக்க குளத்தின் அனைத்துக் கதவுகளையும் திறந்து விடும்போது, 1 விநாடினுக்கு 6,000 கன அடி (6000 cubic feet per second) நீர் வெளியேறுவதாகவும் அவர் கூறினார். 6000 கன அடி நீர் என்பது 169901.1 லிட்டருக்கு சமனானது.
சேனநாயக்க குளத்திலிருந்து வெளியேறும் நீர் – அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதியை அடைவதற்கு 9 மணித்தியலங்கள் எடுக்கும் எனவும் றியாஸ் குறிப்பிடுகின்றார்.
சுமார் 13 வருடங்களுக்குப் பின்னர் சேனநாயக்க குளத்தின் கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக இவ்வாறான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமியை அடுத்துப் பெய்த மழையால் – இதுபோன்றதொரு வெள்ளம் ஏற்பட்டது. 2010ஆம் ஆண்டு பெய்த தொடர் மழையின் காரணமாக – சேனநாயக்க குளத்தின் அனைத்துக் கதவுகளும் திறக்கப்பட்டமையாலும் இவ்வாறானதொரு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது,” என பிரதிப் பணிப்பாளர் றியாஸ் குறிப்பிட்டார்.
சேனநாயக்க குளத்தில் 7 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் கன அடி நீரை சாதாரணமாகத் தேக்கி வைக்க முடியும் என்றும், ஆனால் தற்போது குளத்தில் 8 லட்சத்து 1500 ஏக்கர் கன அடி நீர் உள்ளதாகவும் அவர் கூறினார்.
பாதிப்புகள்
மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவும், சேனநாயக்க குளத்திலிருந்து பெருமளவான நீர் திறந்து விடப்பட்டுள்ளமையாலும் அம்பாறை மாவட்டத்தின் தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
அதேபோன்று ஆறுகள், நீர்ப்பாசன (Irrigation) பகுதிகள் மற்றும் விவசாய இடங்களின் ஒதுக்குப் பகுதிகளை (Reservation area) ஆக்கிரமித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களும் வசிப்பிடங்களும் நீரில் மூழ்கியுள்ளதாகவும் றியாஸ் குறிப்பிடுகின்றார்.
”நெல் பயிர்களும் கணிசமான அளவு வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் நெல் விவசாயத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து – மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” எனவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக நீர் பிடிப்புள்ள பகுதிகளில் (Wetlands area) உரிய அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளாமல் சட்டவிரோதமாக கட்டடங்களை நிர்மாணித்தவர்களும், தற்போதைய வெள்ளத்தில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் றியாஸ் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு அனுமதியின்றி நீர்ப் பிடிப்புள்ள பகுதிகளில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டமையால், ஆபத்தற்ற பகுதிகளாகக் கருதப்பட்ட இடங்களில்கூட – வெள்ளம் புகுந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
வெள்ளத்தில் மூழ்கிய தென்கிழக்கு பல்கலைக்கழகம்
சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் – களியோடை ஆற்றின் அருகில் அமைந்துள்ளது. இதன் காரணமாக, அந்த ஆறு பெருக்கெடுத்து ஓடுகின்றமையால் பல்கலைக்கழககத்தின் பெரும்பாலான பகுதி நீரில் மூழ்கியுள்ளது.
இதனால் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விடுதிகளில் தங்கியிருந்த சுமார் 3,000 மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரமீஸ் அபூக்கர் தெரிவித்தார்.
முல்லைத்தீவைச் சேர்ந்த 4 மாணவர்கள் தொடர்ச்சியாக பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருப்பதாகவும் அவர்களின் சொந்த இடத்திலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளமையால், அவர்கள் இவ்வாறு பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.
”நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்கலைக்கழகத்தின் பாதுகப்பற்ற பகுதிகளாக அடையாளம் கண்டிருந்த இடங்களில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சென்றோம்.
ஆனால், பொறியியல் பீட கட்டடத்தின் கீழ்பகுதியில் எதிர்பாராத விதமாக வெள்ளம் புகுந்தமையால், அங்கிருந்த சில உபகரணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இழப்புகள் குறித்து மதிப்பீடு செய்து வருகிறோம்,” எனவும் உபவேந்தர் குறிப்பிட்டார்.
இந்த நிலைமை காரணமாக பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை ஒத்தி வைப்பதாக அறிவித்த பல்கலைக்கழக நிர்வாகம், எதிர்வரும் 16ஆம் தேதி மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் எனக் கூறியிருந்தது.
ஆனால், நேற்று (12) காலை எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, எதிர்வரும் 22ஆம் தேதி பல்கலைக் கழகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் கூறினார்.
ஆறு பீடங்களைக் கொண்ட தென்கிழக்குப் பல்லைக்கழகத்தில் 8100 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
இரண்டு நாட்களாக மழை பெய்யவில்லை என்பதால், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம், சில நாட்களில் வடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலைமை எப்போது வழமைக்குத் திரும்பும்?
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் வடிந்து, நிலைமை எப்போது வழமைக்குத் திரும்பும் என, அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் றியாஸிடம் பிபிசி தமிழ் வினவியது.
இதற்கு அவர் பதிலளிக்கையில் இரண்டு நாட்களாக மழை பெய்யவில்லை என்பதால், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம், சில நாட்களில் வடிந்துவிடும் என எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
”ஆனால் எதிர்வரும் 16ஆம் தேதிக்குப் பின்னர் மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும். அப்போது மீண்டும் கடுமையான தொடர் மழை பெய்தால், இவ்வாறான அனர்த்த நிலை மீண்டும் உருவாகலாம்,” எனவும் றியாஸ் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக