BBC News தமிழ் : குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 11 பேரின் விடுதலையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி, குற்றவாளிகள் மன்னிப்புக் கோரிய மனுவை விசாரித்த குஜராத் அரசு, 11 குற்றவாளிகளை விடுதலை செய்திருந்தது.
தண்டனையில் விலக்கு அளிக்கவோ அல்லது எந்த முடிவையும் எடுக்கவோ குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசு முடிவெடுப்பதுதான் பொருத்தமானது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் இந்த உத்தரவை வழங்கியுள்ளனர். குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கியதன் மூலம் குஜராத் அரசு உண்மைகளை புறக்கணித்துள்ளது என்று நீதிபதிகள் கூறினர். குற்றவாளிகள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சரணடையுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி, குற்றவாளிகளின் பொது மன்னிப்பு மனு மீது நடவடிக்கை எடுத்து, 11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்தது. குற்றவாளிகள் அனைவரும் கோத்ரா துணை மாவட்ட சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அரசின் பொது மன்னிப்புக் கொள்கையின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த சமயத்தில் குஜராத் அரசு கூறியிருந்தது.
இந்த வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா மற்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.
2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது பில்கிஸ் பானுவின் குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டதுடன் அவர் கூட்டு பாலியல் வல்லுறவுக்கும் ஆளானார்.
இந்த வழக்கு இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குற்றவாளிகள் 11 பேரை குஜராத் அரசு விடுதலை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பில்கிஸ் பானுவும் அதனை எதிர்த்து மனு தாக்கல் செய்தார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தலைவர் சுபாஷினி அலி, பத்திரிகையாளர் ரேவதி லோல், லக்னோ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரூப் ரேகா வர்மா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா ஆகியோர் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கில் கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசின் வாதம் என்ன?
குற்றவாளிகள் 14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்ததாகவும் அவர்களின் நடத்தையை கருத்தில் கொண்டு விடுவிக்கப்பட்டதாகவும் உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு கூறியது. மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் குஜராத் அரசு தெரிவித்தது.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், பில்கிஸ் பானோ வழக்கில் குற்றவாளிகள் 11 பேரை விடுவித்ததற்கும், மூன்றாம் தரப்பு மனுதாரர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.
குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளித்த குஜராத் அரசு, 'காவல்துறை கண்காணிப்பாளர், சிபிஐ சிறப்புப் பிரிவு மும்பை மற்றும் சிறப்பு சிவில் நீதிபதி (சிபிஐ), சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம், கிரேட்டர் பாம்பே' என்று ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது.
கோத்ரா சிறை கண்காணிப்பாளருக்கு சிபிஐ எழுதியுள்ள கடிதத்தில், இவர்கள் செய்த குற்றம் கொடூரமானது மற்றும் தீவிரமானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
குஜராத் அரசு, “உண்மையில் அரசியல் ஆர்வலரான மனுதாரர் (சுபாஷினி அலி), கிரேட்டர் மும்பை சிறப்பு நீதிபதியால் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகளை விடுவிக்கும் குஜராத் அரசின் முடிவை எதிர்த்து எந்த அடிப்படையில் மேல்முறையீடு செய்கிறார் என்பதை தெளிவுபடுத்தவில்லை? மனுதாரர் மாநில அரசின் முடிவில் எப்படி அதிருப்தி அடைகிறார் என்பதை விளக்கவில்லை. மேலும், இந்த மனுவில் அழுத்தமான வாதங்கள் மற்றும் அடிப்படை உரிமை மீறல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை," என்று வாதிட்டது.
உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான குஜராத் அரசின் முடிவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், “குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432 வது பிரிவின் படி, வழக்கு விசாரணை செய்யப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்ட அரசாங்கத்திற்கேமன்னிப்பு வழங்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. குற்றம் நடந்த இடத்திலோ, குற்றவாளிகள் தண்டனை அனுபவிக்கும் இடத்திலோ இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.” என்று கூறியுள்ளது.
நீதிபதி நாகரத்னா தீர்ப்பில், “இந்த விதியில் வழக்கு எந்த மாநிலத்திற்கு மாற்றப்பட்டது என்பதையும் உள்ளடக்கியது. இந்த அடிப்படையில் மட்டுமே, நிவாரண உத்தரவு ஒதுக்கி வைக்கப்படும். இந்த விஷயத்தில் குஜராத் அரசின் இந்த முடிவை எடுப்பதற்கான திறன் மிகவும் முக்கியமானது.
ஆனால், முழுப் பிரச்சினையும் இங்கு முடிவதில்லை. 2022ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைக் குறிக்கும் வகையில் பொது மன்னிப்பு மனுவை குஜராத் அரசு பரிசீலிக்க வேண்டும். இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வந்த மனுவில் பல முக்கிய விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளன. பம்பாய் உயர்நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பு, தலைமை நீதிபதியின் கருத்து, குற்றவாளி ராதேஷ்யாம் ஷாவின் ரிட் மனுவில் சேர்க்கப்படவில்லை. மேலும் விண்ணப்பத்தில் தவறான தகவல்களும் கூறப்பட்டுள்ளன. எனவே இந்த முடிவு செல்லாது” என்றார்.
இந்த பொதுமன்னிப்பு முடிவு சட்டப்பூர்வமானதா என்ற கேள்விக்கு விளக்கம் அளித்த நீதிபதி நாகரத்னா, “இந்த விவகாரத்தில் குஜராத் அரசு தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது. ஆகவே பொதுமன்னிப்பு முடிவு ரத்து செய்யப்பட வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
பில்கிஸ் பானு பாலியல் வல்லுறவு வழக்கு
படக்குறிப்பு,
பொது மன்னிப்பு மனுக்களை பரிசீலனை செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரில், இந்த வழக்கில் தண்டனை பெற்ற அனைவரும் குஜராத் அரசின் பொது மன்னிப்புக் கொள்கையின் கீழ் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மே 11, 2022 அன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பொது மன்னிப்பு வழங்க குஜராத் அரசு முடிவு செய்திருந்தது.
இந்த வழக்கில் குஜராத் அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு குஜராத் அரசு கட்டுப்பட்டு இருப்பதாக கூறினார். இந்த வழக்கில் அரசின் பொது மன்னிப்பு கொள்கையின் கீழ் முடிவு எடுக்க வேண்டும் என்றும், இந்த விண்ணப்பங்கள் குறித்து அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் வாதாடினார்.
குஜராத்தின் 1992-ஆம் ஆண்டு பொது மன்னிப்புக் கொள்கையின்படி அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி எஸ்.வி. ராஜூ, 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் பில்கிஸ் பானுவின் மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து எடுக்கப்பட்ட குஜராத் அரசின் பொது மன்னிப்பு முடிவை அவர் ஆதரித்தார்.
இந்த குற்றவாளிகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தனர். அதில் ஒருவர் முன்கூட்டியே விடுதலை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த விவகாரத்தில் பொது மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு குஜராத் அரசை கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டதையடுத்து, அரசு ஒரு குழுவை அமைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த குழுவின் தலைவராக பஞ்சமஹால் மாவட்ட ஆட்சியர் சுஜல் மயாத்ரா இருந்தார்.
இந்த குற்றத்திற்காக தண்டனை பெற்ற ஜஸ்வந்த்லால் பாய், கோவிந்த் பாய், ஷைலேஷ் பட், ராதேஷ்யாம் ஷா, பிபின்சந்திர ஜோஷி, கேசர்பாய் வோஹானியா, பிரதீப் மோர்தியா, பகபாய் வோஹானியா, ராஜூபாய் சோனி, மிதேஷ் பட் மற்றும் ரமேஷ் சந்தனா ஆகியோர் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.
குற்றவாளிகளை விடுவிப்பதற்கான முடிவுக்குப் பிறகு, பிபிசி குஜராத்தி பில்கிஸ் பானுவின் குடும்பத்தினரிடம் பேசி அவர்களின் மனநிலையை அறிய முயன்றது.
அப்போது அவர்கள், “குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதையடுத்து, பில்கிஸ் பானு மற்றும் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். அவர்கள் அச்சத்தில் உள்ளனர்" என தெரிவித்தனர்.
பில்கிஸ் பானு வழக்கின் பின்னணி
2002 குஜராத் கலவரத்தின் போது, ஆமதாபாத் அருகே உள்ள ரந்திக்பூர் கிராமத்தில் ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு ஒரு கும்பலால் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளானார்.
மேலும், மூன்று வயது மகள் சலேஹாவும் கொடூரமாக கொல்லப்பட்டார்.
அப்போது பில்கிஸ் பானுவுக்கு சுமார் 20 வயது.
பாலியல் வல்லுறவுக்குப் பின்னர் அவநம்பிக்கையான நிலையில் பில்கிஸ் பானு அருகேயுள்ள மலைப்பகுதிக்கு சென்று தன் உயிரை காப்பாற்றினார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, போலீசார் சிலர் பில்கிஸ் பானுவை மிரட்டி ஆதாரங்களை அழிக்க முயன்றனர்.
அவரது குடும்ப உறுப்பினர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்யப்பட்டன.
பில்கிஸ் பானுவை பரிசோதித்த மருத்துவர், அவர் பாலியல் வல்லுறவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். இந்த விவகாரத்தில் பில்கிஸ் பானுவுக்குக் கொலை மிரட்டல்களும் வந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், பில்கிஸ் பானு தொடர்ந்து போராடி குற்றவாளிகளை
அடையாளம் காட்டினார்.
2004-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்த பிறகு முதல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உதவியுடன், பில்கிஸ் பானு வழக்கு மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
அப்போது, குஜராத் நீதிமன்றங்களால் நீதி வழங்க முடியாது எனக்கூறி பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
நீதிக்கான 17 ஆண்டுகால போராட்டத்தில், பில்கிஸ் பானு மற்றும் அவரது கணவர் யாகூப் ரசூல் ஐந்து குழந்தைகளுடன் பத்து வீடுகளை மாற்ற வேண்டியிருந்தது.
2017-ஆம் ஆண்டு பிபிசியின் கீதா பாண்டேவுக்கு அளித்த பேட்டியில், "காவல்துறையும் அமைப்பும் எப்போதும் தாக்குதல் நடத்துபவர்களை ஆதரித்துள்ளது. குஜராத்தில் கூட நாங்கள் வாயை மூடிக்கொண்டு இருக்கிறோம். எங்கள் முகவரியை யாருக்கும் கொடுக்க மாட்டோம்" என்று பில்கிஸ் பானு கூறினார்.
பில்கிஸ் பானுவுக்கு மகள்கள் ஹஜ்ரா, பாத்திமா, சலேஹா என 3 மகள்களும் யாசின் என்ற மகனும் உள்ளனர்.
தன் கண் முன்னே கொலை செய்யப்பட்ட மகளின் சலேஹா என்ற பெயரை இளைய மகளுக்கு சூட்டியுள்ளார் பில்கிஸ் பானு.
பிடிஐ செய்தி முகமையின்படி, ஜனவரி 21, 2008 அன்று, மும்பையில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் பில்கிஸ் பானுவின் ஏழு குடும்ப உறுப்பினர்களைக் கொலை செய்துவிட்டு, பில்கிஸ் பானுவை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த 11 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மும்பை உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை உறுதி செய்தது.
இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
முன்னதாக ஏப்ரல் 2019-இல், உச்ச நீதிமன்றம் குஜராத் அரசுக்கு ரூ. 50 லட்சம் வழங்க உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
பில்கிஸ் பானுவுக்கு விதிகளின்படி அரசு வேலை மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை ஏற்பாடு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு ஒரு பெண்ணாகவும் நாட்டின் குடிமகளாகவும் தனது கண்ணியத்தை மீட்டெடுத்ததாக பில்கிஸ் பானு அப்போது கூறினார்.
பில்கிஸ் பானு பாலியல் வல்லுறவு வழக்கில் சாட்சியங்களை சிதைக்க முயன்றதாக குற்றம் நிரூபிக்கப்பட்ட அதிகாரிகள் பலரின் ஓய்வூதிய பலன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக